வடிவேல் பாணியில் 5 கோடி கேட்டு கைதான கடத்தல் நிருபர் கும்பல் !

0 3,572

வடிவேல் பாணியில் 5 கோடி கேட்டு கைதான கடத்தல் நிருபர் கும்பல் !

 

ஓரத்தநாடு அருகேயுள்ள ஊரணிபுரத்தைச் சேர்ந்த சீமான் (50) என்ற நகைக்கடை அதிபரை கடத்தியவர்கள் வடிவேல் பட காமெடியை மிஞ்சும் அளவுக்கு ‘கோமாளித்தனமாக’ திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்.

 

திடீரென பணக்காரனாக முடிவு செய்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தமிழ் சினிமாக்களில் வருவதுபோல தொழிலதிபர் யாரையாவது கடத்தி அவரது குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிப்பது என திட்டமிட்டனர்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த யாராவது ஒரு பணக்காரரை அல்லது மிகப் பெரிய வியாபாரியை கடத்தி அவரது குடும்பத்தை மிரட்டி பணம் பறிக்கலாம் என்பதே இக்கும்பல் முதன் முதலில் போட்ட பிளான்.

 

ஆனால், தற்போது  கரோனா நோய்த் தொற்று அச்சம் காரணமாக பெரும் வசதிபடைத்தவர்கள் மற்றும் வணிகர்கள் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால், அத் திட்டத்தை நிறைவேற்ற அவர்களால் முடியவில்லை.

 

பெரிய தொழிலதிபர் அல்லது பணக்காரரை கடத்தும் திட்டம் கரோனா நோய்த் தொற்று காரணமாக ‘புஸ்வாண’மாகியதால் ஓரளவு வசதிபடைத்த வேறு எவரையாவது கடத்தி பணம் பறிப்பது என முடிவு செய்தனர்.

 

இந்நிலையில்தான், ஊரணிபுரத்தில் ‘விநாயகா ஜுவல்லர்ஸ்’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வரும் சீமான் தினமும் காலையில் 6 மணியளவில் புது ஆற்றங்கரையில் ‘வாக்கிங்’ செல்கிறார் என்ற தகவலை ஊரணிபுரத்தைச் சேர்ந்த  மதிவதணன் (58) என்ற தொலைக்காட்சி நிருபர் தெரிவித்துள்ளார். சீமான் மிகவும் வசதி படைத்தவர் என்றும், அவரை கடத்தினால் அவரது குடும்பத்தை  மிரட்டி ஒரு பெரும் தொகையை கறக்கலாம் என்றும் மதிவதணன் ஐடியா கொடுத்துள்ளார்.

கடத்தல் கும்பல் பயன்படுத்திய கார்…

அதன்படி, பட்டுக்கோட்டை கண்டியன் தெருவைச் சேர்ந்த அத்திவெட்டி ஆனந்த் (37) தலைமையில் பாப்பாநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு கோட்டம் பகுதியில் வசிக்கும் மணி என்கிற குணசேகர் (39) வீட்டில் அனைவரும் அடிக்கடி சந்திந்துப்பேசி சீமானை எப்படி கடத்துவது, என்றைக்கு கடத்துவது என திட்டம் தீட்டியுள்ளனர். இதில் தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை சர்மிளா நகரைச் சேர்ந்த சின்னையன் (58), அவரது மகன் கதிரவன் (32) ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

 

ஏற்கெனவே திட்டமிட்டபடி, ஜுலை 21-ம் தேதி காலை 6 மணியளவில் வழக்கம்போல் ஊரணிபுரம் புது ஆற்றங்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த சீமானை அக்கும்பலைச் சேர்ந்தவர்கள்; வழிமறித்து, மிரட்டி, அவரது கண்ணை துணியால் கட்டி, காரில் கடத்திச் சென்றுள்ளனர். ஆனால், தொலைக்காட்சி நிருபர் மதிவதணன் மட்டும் ஊரணிபுரத்தில் தங்கி சீமானின் குடும்பத்தினரின் நடமாட்டத்தை, நடவடிக்கைகளை கண்காணித்து அவ்வப்போது கடத்தல் கும்பலுக்கு தெரிவித்துள்ளார். சீமானின் அண்ணன் ராமச்சந்திரன் காவல்நிலையத்தில் புகார் செய்த தகவலையும் கடத்தல் கும்பலுக்கு தெரிவித்துள்ளார் மதிவதணன்.

சீமானை விடுவிக்க முதலில் ரூ5 கோடி கேட்டு அவரை மிரட்டியுள்ளனர். அந்த அளவுக்கு தான் ‘ஒர்த்’ இல்லை என சீமான் தெரிவித்ததால், படிப்படியாக பிணையத் தொகையை குறைத்து கடைசியாக ரூ1 கோடி கேட்டுள்ளனர்.

 

கிராமத்தில் நகை;கடை நடத்துபவரிடம் அவ்வளவு பணம் இருக்குமா என்றுகூட சிந்தித்து பார்க்காமல் திட்டமிட்டு தற்போது அத்திட்டம் தோல்வியடைந்து அனைவரும் போலீஸாரிடம் மாட்டிக் கொண்டுள்ளனர்.

 

சீமானை காரில் வைத்துக் கொண்டு சுற்றித் திரிந்தால் போலீஸாரிடம் மாட்டிக் கொள்வோம் என பயந்த கடத்தல் கும்பல் புதன்கிழமை பிற்பகல் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியில் அவரை இறக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றுவிட்டது.

 

இந்நிலையில், அக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த அனைவரையும் போலீஸார் இன்று மடக்கிப் பிடித்து கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!