கோடம்பாக்கத்தை கலக்கியவர் ! கும்பகோணத்தில் தனிமையானர் !

0 573

 

கோடம்பாக்கத்தை கலக்கிய பாடலாசிரியர் கு.ரா.கி.

 

பழம்பெரும் திரைப்பட பாடகர் சி.எஸ். ஜெயராமனின் கணீர் குரலில்  ஒலிக்கும்  ‘நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே’ என்ற இனிமையான பாடல் நினைவிருக்கிறதா?

 

நடிகர்;; திலகம் சிவாஜி கணேசனின் உன்னத நடிப்பில் பிரபல இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பாவின் இன்னிசையில்; 1960ல் வெளிவந்த ‘குறவஞ்சி’ என்ற திரைப்படத்தில் வரும் பாடல்; இது.  மேகலா பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இப் படத்தின் தயாரிப்பாளர்கள் – கலைஞர் மு கருணாநிதி மற்றும் ஆர்.எம்.வீரப்பன். பழம்பெரும் பாடகர் சி.எஸ்.ஜெயராமனின் இனிமையான குரலில் ஒலிக்கும் இந்த திரைப்படப் பாடலை எழுதியவர் கும்பகோணம் ராமசாமி கிருஷ்ணமூர்த்தி.

 

கு.ரா.கி என திரைப்படத்துறையினரால் அன்புடன் அழைக்கப்பட்ட கவிஞர் கிருஷ்ணமூர்த்தி அறுபதுகளில் தஞ்சை இராமையாதாஸ், கண்ணதாசன் போன்றவர்களுக்கு இணையாக தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய பாடலாசிரியர்;.

அன்றைய காலகட்டத்தில் மிகவும் ‘பிஸி’யான பாடலாசிரியர். தஞ்சை இராமையாதாஸ், கண்ணதாசன் போன்ற முன்னணிக் கவிஞர்கள் இருந்த காலகட்டத்திலேயே, மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் பாடல்கள் எழுதியுள்ளார்.

 

மக்கள் திலகம் எம்ஜிஆரின் முத்தான நடிப்பில் 1952ல் வெளியான ‘அந்தமான் கைதி’ திரைப்படத்தில் வரும் ஏழு பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கு.ரா.கி என்ற உண்மையே அவர் அந்த காலகட்டத்தில் எந்த அளவுக்கு புகழ்பெற்ற கவிஞராக இருந்தார்; என்பதை நம்மால்; உணரமுடியும்.

 

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் உச்சகட்ட நடிப்பில் 1954ல் வெளியான ‘ரத்தக் கண்ணீர்’ திரைப்படத்தில் பிரபல பின்னணிப் பாடகர் சி.எஸ்.ஜெயராமனின் கணீர் குரலில் ஒலிக்கும் ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது’ என்ற பாடல், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் 1957ல் வெளியான ‘ராஜராஜன் திரைப்படத்தில் வரும் ‘நிலவோடு வான் முகில் விளையாடுதே’ என்ற பாடல், அதே ஆண்டு வெளியான ‘சக்கரவரத்தி திருமகள்’ என்ற திரைப்படத்தில் வரும் பி லீலா பாடிய ‘எண்ணம் எல்லாம் இன்ப கதை பேசுதே’,

1961ல் வெளியான ‘திருடாதே’ படத்தில் வரும் ‘அழகான சின்னப் பொண்ணு போகுது’ மற்றும் ‘அந்தி சாயும் நேரத்திலே’, இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். நடிப்பில் 1960ல் வெளியான ‘தங்க ரத்தினம்’ படத்தில் பாடகர் சி.எஸ்.ஜெயராமனின் இனிமையான குரலில் ஒலிக்கும் ‘சந்தன பொதிகையின் தென்றலெனும் பெண்ணாள்’ ஆகிய பாடல்கள் இவர் எழுதியதே.

தனது பள்ளிப்பருவத்தில் மண்டையில் படிப்பு ஏறாததால் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு சென்னைக்கு ஓடிய கவிஞர் கு.ரா.கி அங்கே பல நாட்கள் பட்டினியாக இருந்து பின்னர் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து பலவித சிரமங்களைக் கடந்து வாழ்க்கையை நகர்த்தி ஒரு காலக்கட்டத்தில் முன்னணி திரைப்பட பாடலாசிரியராக உருவெடுத்தார்.

 

திரைப்படத்துறையினரால் மிகவும் விரும்பி தேடப்பட்ட பாடலாசிரியராக அவர் இருந்தார். பணம், புகழ் மற்றும் செல்வாக்கு கூடியது. புகழின் உச்சியில் இருந்தபோது இவையெல்லாமே இனி வாழ்க்கையில் நிரந்தரம் என்ற மிதப்பில் எதிர்கால வாழ்க்கைக்கு வேண்டிய செல்வத்தை சேர்த்து வைக்காமல் தனது வருவாய் முழுவதையும் மது, மாது போன்ற கேளிக்கைகளில் செலவழித்தார். திரைப்படங்களில் பாடல் எழுதும் வாய்ப்புகள் குறைந்து ஒரு காலகட்டத்தில் மீண்டும் சாப்பாட்டுக்கே வழியின்றி பல நாட்கள் பட்டினியாக இருந்தபோதுதான் தனது சொந்த ஊருக்கு போகவேண்டும் என்ற ஞானோதயம் அவருக்கு ஏற்பட்டது.

 

கிட்டத்தட்ட எழுபது வயதில் உடல் மெலிந்து, இரத்தம் சுண்டி, கண் பார்வை குறைந்து நரைத்த தலையுடன் வறுமையும் முதுமையும் இணைந்து வாட்ட நடைபிணமாக கவிஞர் கு.ரா.கி 2007-ம் ஆண்டு கும்பகோணம் திரும்பினார். ஆனால், கும்பகோணத்தில் அவரை யாருக்குமே தெரியவில்லை. இடைப்பட்ட காலக்கட்டத்தில் அவரது பெற்றோர், சகோதர-சகோதரிகள், சிறுவயது நண்பர்கள், தூரத்து உறவினர்கள் என அவருக்குத் தெரிந்த எவரும் தற்போது உயிருடன் இல்லை.

 

வயதான காலகட்டத்தில் அவரை தங்க வைத்து பராமரிக்க சொந்த பந்தங்கள் யாருமின்றி அநாதையான கு.ரா.கி வேறு வழியின்றி கும்பகோணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தனது இறுதி காலத்தை கழித்து, அடுத்த ஒருசில ஆண்டுகளிலேயே (2011ல்) இறந்தார்.

 

என்றுமே நிலைத்திருக்கும் என நினைத்திருந்த இளமை, செல்வம் ஆகிய அனைத்தையும் இழந்து முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தபோதுதான் ‘நாம் இந்த உலகை விட்டுச் செல்லும்போது பிறருக்கு உபயோகமாக ஏதாவது செய்துவிட்டு செல்ல வேண்டும்’ என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

 

அதைத்தொடர்ந்து தனது உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கற்றுக்கொள்ள பயன்படும் வகையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக எழுதிக்கொடுத்துவிட்டு இப்பூவுலகைவிட்டு மறைந்தார்.

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!