அமெரிக்கத் தமிழாசிரியர்களுக்குப் புத்தொளிப் பயிற்சி நடத்தும் தமிழ்ப் பல்கலைக்கழகம்

0 136

அமெரிக்கத் தமிழாசிரியர்களுக்குப் புத்தொளிப் பயிற்சி நடத்தும் தமிழ்ப் பல்கலைக்கழகம்

 

அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழ்ப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக, தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் தமிழ் வளர் மையம் ‘இணையவழிப் புத்தொளிப் பயிற்சி’ ஒன்றைத் தொடங்கியுள்ளது.

 

வட அமெரிக்க பள்ளிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 280 தமிழாசிரியர்களுக்கு ‘மாறிவரும் உலகச் சூழலில் தமிழ் மொழிக் கற்றல் – கற்பித்தலும், புதிய உத்திகளும்’ என்னும் தலைப்பில் ஏறத்தாழ இருமாத பயிற்சி இதன்வழி நடத்தப்பட உள்ளது.

 

அயலகத்தில் வாழும் தமிழர்களுக்குத் தமிழைக் கற்பிப்பதற்காக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தமிழ் வளர் மையமும், அமெரிக்காவின் எஜுரைட் அறக்கட்டளையும்  (நுனரசுiபாவ குழரனெயவழைn); இணைந்து இந் நிகழ்வினை ஒருங்கிணைத்துள்ளன.

 

இப் பயிற்சியை தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் முனைவர்  கோ. பாலசுப்ரமணியன் ஜுiலை 11-ம் தேதி தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார்.

 

அப்போது பேசிய துணை வேந்தர் பாலசுப்ரமணியன், நெருக்கடியான பெருந்தொற்றுக்காலச்சூழலில் உலகம் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், தமிழ்க் கல்வியை வேறு கோணத்தில் மேலெடுத்துச் செல்ல வேண்டிய நிலையில், இணையவழிக் கல்வியை தமிழகத்திலேயே முதன்முதலாக தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

 

உலகெங்கும் தமிழ்க் கல்வியை எடுத்துச் செல்ல வேண்டும் என்னும் நோக்கில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதன் குறிக்கோள் இதன்மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தான்   கருதுவதாக துணை வேந்தர் கூறினார்.

பல்லாயிரம் கடல்தொலைவுக்கு அப்பால் வாழும் தமிழர்களின் பிள்ளைகளுக்கு வாழ்க்கைக்குத் தேவையான மொழியாக தமிழை  மாற்றி அளித்தால்தான் இம்மொழி என்றும் உயிர்ப்புடன் வாழும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

அமெரிக்கத் தமிழாசிரியர்களுக்கு வழங்கப்படும் இப்பயிற்சியை மற்ற நாட்டுத் தமிழாசிரியர்களுக்கும் விரிவுபடுத்தி வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

எட்டு உரைத்தொடர்கள், கலந்துரையாடல், ஆய்வுத்திட்ட ஒப்படைப்பு என்று திட்டமிடப்பட்டுள்ள இப்புத்தொளிப் பயிற்சியின் முதல் வகுப்பை பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பா. முதிவாணன் வழங்கினார்.

 

முன்னதாக, இப்பயிற்சியின் தொடக்கவிழா நிகழ்வில் எஜுரைட் அறக்கட்டளை முதல்வர் வரவேற்புரையாற்றினார். இப்பயிற்சியின் நோக்கம் மற்றும் செயல்திட்டம் குறித்து தமிழ் வளர் மைய இயக்குநர் (பொறுப்பு) முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் எடுத்துரைத்தார். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் துணைத் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி வாழ்த்துரை வழங்கினார்.

 

நிகழ்ச்சியின் நிறைவாக, எஜுரைட் அறக்கட்டளை நிறுவனர் கீர்த்தி ஜெயராஜ் நன்றியுரை கூறினார்.

 

எட்டுவாரக்காலப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை, தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர்களும், தமிழ் வளர் மைய பொறுப்பிலுள்ள முனைவர் சி.தியாகராஜன் மற்றும் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!