நகைக் கடை அதிபர் கடத்தலில் மூளையாகச் செயல்பட்ட ‘டிவி நிருபர்’!!

0 7,279

நகைக் கடை அதிபர் கடத்தலில் மூளையாகச் செயல்பட்ட ‘டிவி நிருபர்’!!

 

ஒரத்தநாடு அருகேயுள்ள ஊரணிபுரத்தைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் சீமான் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அப்பகுதியின் ‘வெளிச்சம்’ தொலைக்காட்சி நிருபர் உள்பட 6 பேர் கொண்ட கும்பலை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பணம் பறிக்கும் நோக்கத்தில் அக்கும்பல் சீமானை கடத்தியுள்ளது என்பதும், அப் பகுதியைச் சேர்ந்த வெளிச்சம் தொலைக்காட்சி செய்தியாளரான மதிவதணன் (50) என்பவரே இக் கடத்தல் ‘ஆபரேஷனுக்கு’ திட்டம் வகுத்துக் கொடுத்து  ‘மூளை’யாகச் செயல்பட்டுள்ளார் என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

நகைக்கடை அதிபர் சீமான் தினமும் காலையில் எத்தனை மணிக்கு ‘வாக்கிங்’ செல்கிறார், எத்தனை மணிக்கு வீட்டுக்கு திரும்புகிறார் என்பன போன்ற விபரங்களை பல நாட்களாக தொடர்ந்து கண்காணித்து சேகரித்து, அதற்கேற்ப கடத்தலுக்கான திட்டத்தை வகுத்ததுடன்,  இக் கடத்தலுக்கு தேவையான ஆட்களையும் மதிவதணன் ஏற்பாடு செய்துள்ளார் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் அனைவரும் இன்று மாலை கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் எனத் தெரிகிறது.

 

ஊரணிபுரத்தில் ‘விநாயகா ஜுவல்லர்ஸ்’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தவரும் சீமான் (50) நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) காலை வழக்கம்போல் புது ஆற்றங்கரையில் ‘வாக்கிங்’ சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

 

அவரது அண்ணன் ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், திருவோணம் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் தனது உறவினரான ரவி என்பவரை செல்ஃபோனில் தொடர்பு கொண்ட சீமான், காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகாரை வாபஸ் பெறுமாறு கூறியுள்ளார். மீண்டும் மாலையில் பேசிய அவர் அதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். அப்போது அவரது செல்ஃபோனில் பேசிய மர்ம நபர் புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டல் விடுத்துவிட்டு, இணைப்பை துண்டித்துவிட்டார்.

 

அவ்விரு அழைப்புகளும் பொன்னாப்பூர் செல்ஃபோன் டவர் பகுதியிலிருந்து பேசப்பட்டிருப்பது தெரிய வந்தது.

 

அவரை கடத்தியவர்கள் யார், எதற்காக அவர் கடத்தப்பட்டார் என்ற விபரங்கள் தெரியாததால் அவரை எப்படி மீட்பது என்பது தெரியாமல் போல{ஸார் திணறி வந்தனர். அவரை உயிருடன் மீட்கவும், அவரை கடத்தியவர்களை கண்டுபிடித்து கைது செய்யவும் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

 

இந்நிலையில், நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சீமான் கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்டார். சீமானின் கண்களை கட்டி காரில் அழைத்துச் சென்ற கடத்தல்காரர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியில் சாலையில் அவரை இறக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். அவரது செல்ஃபோனையும் பறித்துச் சென்றுவிட்டனர்.

 

கடத்தல்காரர்களால் சாலையில் இறக்கிவிடப்பட்ட சீமான் அவரது உறவினர் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து தனது குடும்பத்தினருடன் பேசி தான் விடுவிக்கப்பட்ட தகவலை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, போலீஸார் அங்கு சென்று சீமானை மீட்டு ஊரணிபுரம் அழைத்து வந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!