தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்துவது? –

0 177

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்துவது? –

 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்துவது? – “யாருக்கு அனுப்புவது எனத் தெரியவில்லையென்றால், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவிடலாம். அவர் சம்பந்தப்பட்ட அலுவலத்துக்கு அனுப்பி வைத்துவிடுவார். சம்பந்தமே இல்லாத ஒரு துறைக்கு அனுப்பினாலும், அது உரிய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வோர் அரசு அலுவலகத்துக்கும் உண்டு.”

 

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

சுதந்திர இந்தியாவில் மக்களின் பக்கமிருந்து உருவாக்கப்பட்ட ஓர் சட்டமென்றால், அது தகவல் அறியும் உரிமைச் சட்டம்தான். ஊழலற்ற, வெளிப்படையான அரசு நிர்வாகத்தை உறுதிசெய்யும் வகையில், குறிப்பிட்ட சில துறைகள் தவிர்த்து பிற அனைத்துச் செயல்பாடுகளையும் மக்கள் அறிந்துகொள்வதை இந்தச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. 2005-ல் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை வெகுசிலரே முறையாகப் பயன்படுத்தி வருகிறார்கள். பலர், தகவல் உரிமைச் சட்டம் பற்றி அறிந்திருந்தாலும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பது தெரியாமல் விலகியே இருக்கிறார்கள்.

 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்துவது? –

”தகவல் உரிமைச் சட்டம் உண்மையில் மக்களுக்கான ஆயுதம்தான். அந்தச் சட்டம் வந்தபிறகு அரசு நிர்வாகத்தில் முறைகேடுகள் கொஞ்சம் குறைந்திருக்கின்றன. முன்பெல்லாம் ரோடு போடாமலேயே போட்டதாகக் கணக்குக் காட்டி ஊழல் செய்ய முடியும். இந்தச் சட்டம் வந்தபிறகு, அப்படிச் செய்ய முடியவில்லை. கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் வழங்கப்படும் கடன்களில் எல்லாம் முன்பு அதிகமாக ஊழல் நடந்திருக்கிறது. தற்போது அது பெருமளவு குறைந்திருக்கிறது. ‘யாருக்குக் கடன் வழங்கியிருக்கிறார்கள்’, ‘இன்ஷுரன்ஸ் எவ்வளவு க்ளைம் ஆகியிருக்கிறது’ போன்ற தகவல்களையெல்லாம் நாம் கேட்டுப் பெற முடிகிறது.

ராணுவம், காவல் துறையில் ஒருசில துறைகளைத் தவிர, அனைத்து அரசுத்துறை, அரசு உதவி பெறும் தனியார் துறைகளில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் தேவையான தகவல்களைக் கேட்டுப் பெற முடியும். இந்தச் சட்டத்தின் மூலம் இரண்டு வகையில் தகவல் பெற முடியும். ரேஷன் கார்டு, லைசென்ஸ், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களைப் பெற விண்ணப்பித்து, உரிய நேரத்தில் கிடைக்காதபட்சத்தில் அந்த விண்ணப்பம் குறித்த தகவல்களைப் பெறுதல் ஒருவகை. இது தனிநபர் தேவை சார்ந்தது. பஞ்சாயத்து, ஊராட்சி, நகராட்சி போன்ற அரசுத் துறைகளில் குறிப்பிட்ட ஒரு திட்டத்துக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டிருகிறது என்பன போன்ற பொதுநலன் சார்ந்த தகவல்களைப் பெறுவது இன்னொரு வகை.

இந்தச் சட்டத்தை ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்த விரும்புபவர்கள், முதலில் தனிநபர் சார்ந்த தகவல்களைக் கேட்டுப் பெறுவது சரியாக இருக்கும். தொடக்கத்தில் அது நம்பிக்கையைக் கொடுக்கும். பிறகு, பொதுநலன் சார்ந்த தகவல்களைக் கேட்டுப் பெறலாம்.

இதற்காகத் தனியாக விண்ணப்பம் எதுவும் கிடையாது. வெள்ளைத்தாளையே விண்ணப்பமாகப் பயன்படுத்தலாம். தாளில், அனுப்புநர் முகவரி எழுத வேண்டும். பெறுநர் பகுதியில், ‘பொதுத்தகவல் அலுவலர்’ மற்றும் ‘எந்த அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டுமோ, அந்த அலுவலக’ முகவரியை எழுத வேண்டும். அடுத்ததாக எந்தத் தகவலைப் பெறவிரும்புகிறோமோ, அதைக் குறிப்பிட வேண்டும்.

கவரின் வெளிப்புறத்தில், பெறுநர் முகவரி எழுதும்போது, ‘பொதுத்தகவல் அலுவலர்’ என்று எழுதக் கூடாது. உதாரணமாக, பட்டா சம்பந்தமாகத் தகவல்களைப் பெற விரும்பினால், பெறுநரில் ‘தாசில்தார்’ என்று எழுதி, அவரது அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஊராட்சியில் ஊழல் நடந்தது சம்பந்தமாகத் தகவல்களைப் பெற விரும்பினால், அந்தப் பகுதியின் ‘வட்டார வளர்ச்சி அலுவலர்’ என எழுதி அவரது அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். ‘காவல் நிலையத்தில் இந்த ஆண்டில் எவ்வளவு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன’, ‘கொலை, கொள்ளை, பாலியல் வழக்குகள் எத்தனை’ போன்ற தகவல்களைப் பெற விரும்பினால், அந்தக் காவல் நிலைய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 

யாருக்கு அனுப்புவது எனத் தெரியவில்லையென்றால், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவிடலாம். அவர் சம்பந்தப்பட்ட அலுவலத்துக்கு அனுப்பி வைத்துவிடுவார். சம்பந்தமே இல்லாத ஒரு துறைக்கு அனுப்பினாலும், அது உரிய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வோர் அரசு அலுவலகத்துக்கும் உண்டு. ஒவ்வோர் அலுவலகத்திலும் கூடுதல் பொறுப்பில், ‘பொதுத் தகவல் அலுவலர்’ ஒருவர் இருப்பார். பொதுவாக விண்ணப்பங்களைப் பதிவுத் தபாலில் (With acknowledgement) அனுப்புவது நல்லது. அப்படி அனுப்பும்பட்சத்தில், ‘விண்ணப்பம் எங்களுக்குக் கிடைக்கவில்லை’ என்று அதிகாரிகள் தட்டிக்கழிக்க முடியாது. மாநில அரசு சம்பந்தப்பட்டது என்றால், விண்ணப்பத்தில் 10 ரூபாய் நீதிமன்ற வில்லை (கோர்ட் பீ ஸ்டாம்ப்) ஒட்ட வேண்டும். மத்திய அரசு சம்பந்தப்பட்டது என்றால் 10 ரூபாய்க்கான டி.டி அல்லது போஸ்டர் ஆர்டர் எடுத்து விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும்.

 

விண்ணப்பித்து 30 நாள்களுக்குள் கேட்ட தகவல்களை அதிகாரி உங்களுக்குக் கொடுக்க வேண்டும். முகவரி மாற்றி அனுப்பப்படும் விண்ணப்பத்துக்கு 35 நாள்களில் தகவல்கள் கிடைக்கும். அப்படிக் கொடுக்கவில்லையென்றால், அந்தத் துறையின் மூத்த அதிகாரிக்கு மேல்முறையீடு அனுப்ப வேண்டும். உதாரணமாக, தாசில்தாருக்கு அனுப்பப்பட்டு தகவல் வரவில்லையென்றால், ஆர்.டி.ஓ-வுக்கோ, மாவட்ட ஆட்சியருக்கோ மேல்முறையீட்டுக்கு அனுப்பலாம்.

 

தகவல்களைப் பெறும்போது, ஒரு பக்கத்துக்கு இரண்டு ரூபாய் கட்ட வேண்டும். உதாரணமாக, 10 பக்கம் என்றால் 20 ரூபாய் கட்டணமாகக் கட்ட வேண்டும். சி.டி-யாக வாங்க வேண்டும் என்றால், ஐம்பது ரூபாய் கட்ட வேண்டும். எந்த அலுவலகத்தில் கட்ட வேண்டும் என்ற தகவலை அனுப்புவார்கள், அங்கே கட்டணம் செலுத்தி நாம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்”

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!