கொலையை விபத்தாக்கிய அண்ணன் கைது !

0 298

கொலையை விபத்தாக்கிய அண்ணன் கைது !

 

கூலித்தொழிலாளியை வெட்டிக்கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்ததாக நாடகமாடிய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

 

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே வீரவாடி கிராமத்தில் உள்ள பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் பானுமதி. இவருடைய மகன்கள் ராஜராஜன் (வயது30), ஆனந்தராஜ் (26). கூலித்தொழிலாளர்களான இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் 18.05.2020 மாலை ராஜராஜனுக்கும், ஆனந்தராஜுக்கும் வீட்டில் வைத்து வாய்த்தகராறு ஏற்பட்டது.

 

இதில் ஆத்திரமடைந்த ராஜராஜன், அரிவாளால் ஆனந்தராஜை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ஆனந்தராஜ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜராஜன் 108 ஆம்புலன்ஸ் மூலம் தனது தம்பி ஆனந்தராஜை சிகிச்சைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு தனது தம்பி மோட்டார்சைக்கிள் விபத்தில் காயமடைந்ததாக டாக்டரிடம் கூறியுள்ளார். அப்போது ஆனந்தராஜை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜராஜன், தனது தம்பி ஆனந்தராஜை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு, அவர் விபத்தில் இறந்ததாக நாடகம் ஆடியது தெரியவந்தது. இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் அவர் விபத்தில் இறந்ததாக நாடகமாடி கைதான சம்பவம் பேரளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.