149 வருட பழமையான திருச்சி காந்தி மார்க்கெட் வணிகம் என்னவாகும்…? உச்சக்கட்ட மோதல் அதிகாரிகள் – வணிகர்கள்

0 1,598

149 வருட பழமையான காந்தி மார்க்கெட் வணிகம் என்னவாகும்…?

திருச்சியின் மிகப்பெரிய அடையாளமாக விளங்குவது திருச்சி காந்தி மார்க்கெட். தற்போது இந்த மார்கெட் நகரைவிட்டு விடைபெறப்போகிறது.

எப்போதும் கூட்ட நெரிசல், ஒருபக்கம் உழைப்பாளர்கள் வியர்வை வாசனை என மக்கள் கூட்டம் அதிகம் காணும் காந்திமார்க்கெட் இல்லாத ஒரு இடத்தை நினைத்து கொஞ்சம் பாருங்கள்.

காந்தி மார்க்கெட் வரலாறு மிக நீண்டது. காந்தி மார்கெட்டின் கட்டுமானப் பணிகள், கடந்த 1867-ம் ஆண்டு துவங்கி 1868ல் முடிந்தது. அதன்பின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, 1927-ம் ஆண்டு மார்கெட் விரிவுபடுத்தப்பட்டது. முழுமையான 1934-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. நீதிக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த ரத்தினவேல் தேவர் கடந்த 1924 முதல் 1948 வரை திருச்சி நகராட்சி தலைவராக இருந்தார். அவர் தலைவராக இருந்த 1934-ம் ஆண்டு காந்தியடிகள் திருச்சி மார்கெட்டை திறந்து வைத்தார். இப்போது அவரின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

6.25 ஏக்கர் நிலப்பரப்பளவு கொண்ட இந்த மார்கெட்டில், தற்போது 2ஆயிரத்திற்கும் அதிகமான சில்லறை, தரைகடை, வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது மார்கெட் பகுதியைச் சுற்றி பழ மண்டி, வெங்காய மண்டி, வாழை மண்டி, உருளை மண்டி, மீன் மார்கெட், என மொத்தம் 25 ஏக்கர் பரப்பளவில் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. 149 ஆண்டுகள் பழமையான இந்த மார்கெட், நகரில் அதிகரித்துவிட்ட மக்கள் தொகை பெருக்கம், வாகனங்கள்,போக்குவரத்து நெரிசல் ஆகிய காரணங்களால், அரசு நவீன வசதிகளுடன் மார்கெட் கட்டி கொடுத்தும் வியாபாரிகள் அங்குச் செல்ல மறுப்பது ஏற்புடையது அல்ல என நம்மில் பலரின் கருத்தாக உள்ளது.

தங்கள் பிரச்சனைகள் குறித்து வியாபாரிகள் கூறியது..

உருளைக் கிழங்கு மண்டி வியாபாரிகள் தலைவர் வெங்கடாச்சலம்,

“கடந்த 80 வருடங்களுக்கு மேலாக இந்த மார்கெட் பகுதியில் வணிகம் நடத்தி வருகிறோம். என்னுடைய தலைமுறையில் கடந்த 40வருடங்களாக இங்கு வியாபாரம் செய்து வரும் எங்களை திடீரென வேறு இடத்திற்கு மாறச் சொல்வது எங்களுடைய 40 வருட உழைப்பை வீணடித்துவிடும் என்று கூறுகிறார். தற்போது உள்ள மார்கெட் பகுதியானது 25 ஏக்கரில் 800 மொத்த வியாபாரிகள், 2ஆயிரத்திற்கும் அதிகமான சில்லறை வியாபாரிகள், தரைகடை வியாபாரிகள் எனப் பயன்படுத்தி வருகிறோம். நாள் ஒன்றுக்கு சுமார் 300 லாரிகள் வந்து செல்கிறது. 200க்கும் அதிகமான சிறிய அளவிலான வாகனங்கள் உள்ளே வந்து செல்கிறது. அதில் 30முதல் 35டன் வரை காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. சுமார் 700மூட்டைகள் கொண்டு வரப்படுகிறது. தற்போது நாங்கள் வைத்துள்ள கடையில் அளவு 2ஆயிரம் சதுர அடி உள்ளது. அதில் எங்களுடைய விற்பனைகள் போக மீதமுள்ள 30 சதவீத காய்கறிகளை தினமும் இருப்பு வைக்க வேண்டிய நிலை உள்ளது. அரசு கட்டியுள்ள புதிய மார்கெட்டில் நாங்கள் கூறும் முக்கிய பிரச்சனையே இடவசதி தான், சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் 77 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மார்கெட்டில் ஆயிரம் கடைகள் கட்டப்பட்டுள்ளது. தரை தளத்தில் 500 கடைகளும், முதல் தளத்தில் 500 கடைகளும் கட்டப்பட்டுள்ளது. காய்கறி வியாபாரிகளுக்கு முதல் தளத்தில் கடைகள் கட்டி கொடுத்திருப்பது இந்தியாவிலேயே முதல்முறை அதெல்லாம் தமிழக அரசால் மட்டுமே முடியும்.

ஒவ்வொரு கடையும் 100 சதுர அடி இடம் மட்டுமே உள்ளது. நாங்கள் தற்போது பயன்படுத்தும் இடத்தின் அளவு 2ஆயிரம் சதுர அடி. இங்கு தினமும் 30சதவீதம் இருப்பு வைக்க முடியும், ஆனால் புதிய மார்கெட்டில் 30 மூட்டைகள் கூட அடுக்கி வைக்க முடியாது. இதைச் சொல்லியும் புறக்கணித்தார்கள். ஆனால் தற்போது எங்களை வலுக்கட்டாயமாக இங்கிருந்து வெளியேற்ற நினைக்கிறார்கள். இறுதியாக நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். வருகின்ற 6.6.2017அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இங்குள்ள சங்கங்கள் இணைந்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம். நாங்கள் தற்போதுள்ள இந்த மார்கெட் பகுதியை காலி செய்துவிட்டு வெளியேறத் தயாராக உள்ளோம். அரசு எங்களுக்கு போதிய இடவசதியை செய்து கொடுத்தால் நாங்கள் போகத் தயார். நாங்களும் பொதுமக்களின் பாதிப்பை உணருகிறோம். இதே போக்குவரத்து நெரிசலில்தான் நாங்களும் வாழ்கிறோம் என மக்கள் உணர வேண்டும்” என்றார்.

உருளைக்கிழங்கு மண்டி வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் பிரசன்ன வெங்கடேஷ்,

“முதன் முதலாக முன்னால் முதல்வர் ஜெயிலலிதா 30.06.2014 புதிய ஒருங்கிணைந்த மார்கெட் கட்டப்படும் என்று அறிவித்தபோது நாங்கள் முதலில் சந்தோசப்பட்டோம். ஆனால் அது இப்போது இல்லை. அதிகாரிகள் மணிகண்டம் செல்லும் சாலையில் உள்ள கள்ளிக்குடி என்ற இடத்தைத் தேர்வு செய்தார். கட்டுமான பணிகள் துவங்கும் போதே, இடவசதி இல்லை. இதுகுறித்து வியாபாரிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தி அதற்கு ஏற்ப  கட்டுமானப் பணியை துவங்குங்கள் என மனுக்கொடுத்தோம். இவை உங்களுக்கான கடைகள் இல்லை என்றார்கள். ஆனாலும்  தொடர்ந்து மனுக்கள் கொடுத்தோம். கண்டுகொள்ளவில்லை. முதலமைச்சரின் தனிப்பிரிவு என பல இடங்களுக்கு மனு அனுப்பினோம். பதில் இல்லை. இப்படி நடந்துகொண்ட இந்த அரசாங்கம். இப்போது அந்த வசதியில்லாத இடத்துக்கு எங்களை போகச் சொல்கிறார்கள். உங்களுக்கு என்ன வசதி செய்துதர வேண்டும் என்று அதிகாரிகள் கேட்கிறார்கள்.95 சதவீத பணிகள் நிறைவுற்ற நிலையில் எங்களை வலுக்கட்டாயமாக புதிய மார்கெட்டிற்கு தள்ளப் பார்க்கிறார்கள். மொத்த வியாபாரிகளுக்கான இடவசித இல்லாத மார்கெட்டில் நாங்கள் எப்படிச் செல்வோம்? இருபுறமும் கடைகளும் 50 அடி சாலைகளும் உள்ளது. ஒவ்வொரு லாரியின் நீளமும் 32 முதல் 35 அடி வரை இருக்கு. எங்களுடைய ஒரு லாரியை நாங்கள் நிறுத்தினால் பக்கத்தில் உள்ள 7 கடைகள் பாதிக்கப்படும். மற்ற வியாபாரிகள் எப்படி வியாபாரம் செய்வார்கள். 19 லாரிகள் நிற்கும் அளவிற்கு மட்டுமே அங்கு இடவசதி உள்ளது. அதைவிட வியாபாரிகளுக்கு முக்கியமானவர்கள் மூட்டைத் தூக்கும் தொழிலாளர்கள்தான். திருச்சியில் இருந்து 17கிலோமீதூரத்தில் உள்ள அந்த மார்கெட்டிற்கு தொழிலாளர்கள் எப்படி தினமும் வந்து செல்வார்கள்?  .

அதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சரியாக 10 அடி தூரத்தில், மார்கெட் நுழைவாயில் உள்ளது. இரவு நேரங்களில் சரக்கு லாரிகள் வரத்து அதிகமானால், கடுமையான சிக்கல் ஏற்படும். 100வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட திருச்சி காந்தி மார்கெட் 8வாசல்கள் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 2 வாசல்கள் மட்டுமே உள்ளது.

அதோடு ஒரு அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தை வாங்கி அரசு மார்கெட் கட்டியுள்ளது. அதற்கான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஒருவேளை அந்த அறக்கட்டளைக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தால் எங்கள் நிலை என்னாகும்? அதிகாரிகள் விருப்பம் போல் கட்டிவிட்டு எங்களை அங்குப்போக வேண்டும் என்பது நியாயனா ? என்றார்..

 

திருச்சி கமலக்கண்ணன்,  

“காந்தி மார்கெட் பகுதியில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் 4ஆயிரம் பேர் உள்ளனர். நாங்கள் அதிகாரிகளிடம் பேசுகையில் கடை எங்களுக்கு அல்ல என்று தெரிவித்துள்ளனர். மொத்த வியாபாரிகளுக்கு என்று தெரிவித்ததால் நாங்கள் அதைப் பற்றி யோசிக்கவில்லை. புதிதாக கட்டப்பட்டுள்ள மார்கெட்டுக்கு நாங்கள் செல்ல தயாராக உள்ளோம். ஆனால் அங்குள்ள ஆயிரம் கடைகளுக்கு எத்தனைப் பேர் செல்ல முடியும். காந்தி மார்கெட்டில் சுமார் 4ஆயிரம் சில்லறை வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் உள்ளனர். இங்குள்ள சில்லறை மற்றும் தரைக்கடை வியாபாரிகள் அனைவருக்கும் புதிய மார்க்கெட்டில் இடம் கொடுத்தால் நாங்கள் இங்கிருந்து செல்ல தயார் “ என்றார்.

இறுதியாக வேளாண்துறை அதிகாரிகள்,

“10 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள புதிய மார்கெட்டில் ஆயிரம் கடைகள் உள்ளது. அதோடு 2ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள குளிர்பதன கிடங்கு, தரம் பிரிக்கும் மையம், வியாபாரிகள் தங்கும் அறைகள், வங்கிகள், உணவு விடுதிகள், 100 எண்ணிக்கையிலான கழிவறைகள், சோலார் கரண்ட்,5ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தொட்டி, 50ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள தண்ணீர் தொட்டி, 60 டன் வரை எடை போடும் இயந்திரம், லிப்ட் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து ஆயிரம் கடைகளின் அளவு எவ்வளவு என்கிற கேள்வியை நம்மதிருச்சி இதழ் சார்பாக முன் வைத்தோம். அதெல்லாம் நான் சொல்ல முடியாது என தொடர்ந்து பேச மறுத்தார்.

பாக்ஸ்

 சென்னை கோயம்பேடு மார்கெட் உருளைக்கிழங்கு வியாபாரிகள் சங்க தலைவர் சவுந்தர்ராஜன்,

திருச்சியில் நானும் உருளைக்கிழங்கு மண்டி கிளை வைத்துள்ளேன். சென்னை கோயம்பேடு மார்கெட் 1983ல் கட்டதுவங்கப்பட்டது. 1985ல் கவா்னராக இருந்த அலெக்சாண்டர் அடிக்கல் நாட்டினார். 1996ல் முதல்வர் கலைஞர் மார்கெட்டை திறந்து வைத்தார். அனைத்து வியாபார சங்கங்களும் இணைந்து 300கோடி ரூபாய் செலவில் இந்த மார்கெட்டை கட்டியுள்ளனர். அரசின் பணம் 1 ரூபாய் கூட இந்த மார்கெட்டிற்கு எனச் செலவிடப்படவில்லை. இந்தியாவிலேயே மிகச்சிறந்த பொறியாளர் குா்திப்சிங்கின் மூலம் இந்தச் சந்தை வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் ஏக்கரில் 25 ஏக்கர் காய்கறிக்கும், 15 ஏக்கர் கனிகளுக்கும், பூ சந்தை 10 ஏக்கர் என தனித்தனியாக கட்டப்பட்டுள்ளது. 15 ஏக்கரில், 5ஏக்கர் லாரி நிறுத்தவும், இரண்டு பொது கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கடையும் கடைகள் 1000 முதல் 1300சதுர அடிவரை இருக்கும். சில்லறை வியாபாரிகளுக்கு 150முதல் 300சதுரஅடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லாக் கடைகளும் தரை தளத்தில் மட்டுமே உள்ளது. மார்கெட் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கடைகள் சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மதுரையில் உள்ள மார்கெட் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்த வியாபாரிகள் இணைந்து சொந்தமாக இடம் வாங்கி பறவை எனும் இடத்திலும், மாட்டுத்தாவணி பகுதியில் அரசின் சார்பில் மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது. ஆனால் திருச்சியில் உள்ள மார்கெட் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என  அப்போதைய மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக கொடுத்திருந்தேன். ஆனாலும் யாருக்குமே பயன்படுத்த முடியாத அளவிற்கு மார்க்கெட்டை வடிவமைத்துள்ளனர். அதிகாரிகள் விருப்பத்திற்கு கட்டிவிட்டு தற்போது எங்களை உள்ளே திணிக்க பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்?

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!