காதல் கணவனை கொல்ல இளைஞர்களுடன் கைகோர்த்த மனைவி !

0 910

கணவனை கொலை செய்ய 2 இலட்சம் கொடுத்த காதல் மனைவி !

 

தனது காதல் கணவர் யூசுப்-பை கொலை செய்த  கொலையாளிகளுக்கு இதுவரை ரூ2 லட்சம் கொடுத்துள்ளார் அவரது மனைவி அசீலா என்பது தற்போது போலீஸாரின் விசாரணையில்  தெரியவந்துள்ளது.

 

அதேபோல், ஜுன் 25-ம் தேதி காரில் சென்றுகொண்டிருந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட யூசுப் கொலையாளிகளிடம் சிக்கியது எப்படி என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

அசீலா மீது கொண்டுள்ள ‘பாசம்’ காரணமாக யூசுப்-பை கொலை செய்ய முடிவு செய்த சகாதேவன் அதற்கு ஒரு திட்டம் தீட்டினார்.

 

அதன்படி, சகாதேவனும், அவரது கூட்டாளியான ஆறுமுகம் என்பவரும் ஜுன் 21-ம் தேதி தஞ்சாவூரில் யூசுப்பை அவரது வீட்டில் சந்தித்துள்ளனர். அப்போது, அவரது அபார்ட்மெண்டில் காலியாக உள்ள ஒரு வீட்டை தனது நண்பர் ஆறுமுகத்திற்கு வாடகைக்கு கேட்டுள்ளார் சகாதேவன். ஒருவழியாக வாடகை மற்றும் அட்வான்ஸ் தொகை ஆகியவற்றை பேசி முடித்த பின், ஜுன் 25-ம் தேதி அட்வான்ஸ் தொகையை தருவதாக கூறிவிட்டு சகாதேவனும் ஆறுமுகமும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

 

அட்வான்ஸ் தரும்போது, யூசுப்-பை கொலை செய்வது என முடிவு செய்த சகாதேவன்,  இதுபற்றி அசீலாவிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு, யூசுப்-பை கொலை செய்ய ஏற்கெனவே தஞ்சாவூரில் தனக்கு மிகவும் நன்கு பழக்கமான  பார்த்திபன் என்பவர் மூலம் ராஜா, காசி, முருகேசன் என்ற கொலையாளிகளை ஏற்பாடு செய்து, அவர்களுக்கு அட்வான்ஸ் தொகையும் கொடுத்துள்ளதாகவும், எனவே இத்திட்டத்தில் ‘அவர்களையும்’ பயன்படுத்திக் கொள்ளுமாறு அசீலா கூறியதாக போலீஸாரின் விசாரணையில் சகாதேவன் கூறியுள்ளார்.

டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்த பார்த்திபன் ரியல் எஸ்டேட் புரோக்கர் வேலையும் பார்த்து வந்துள்ளார். அவர் மூலமாகவே வீடு கட்டியதுடன், பல்வேறு இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை வாங்கியுள்ளார் அசீலா. இதனால் அவர்கள் இருவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது.

 

ஏற்கெனவே திட்டமிட்டபடி, ஜுன் 25-ம் தேதி பிற்பகல் யூசுப்-புக்கு போன் போட்ட சகாதேவன், ஒரு ‘அவசர’ காரியமாக திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் வழியாக மீண்டும் திருச்சி செல்ல வேண்டியிருப்பதால் தஞ்சாவூர் வர இயலவில்லை என்றும், தற்போது வல்லம் பகுதியில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அருகே நண்பர்களுடன் காத்திருப்பதாகவும், அங்கே வந்து ‘அட்வான்ஸ்’ தொகையை வாங்கிச் செல்லுமாறும்  கூறியுள்ளார்.

 

யூசுப் கொலை செய்யப்பட்டது எப்படி?

 

சகாதேவனின் வார்த்தைகளை நம்பி, அட்வான்ஸ் தொகையை வாங்குவதற்காக வீட்டிலிருந்து கிளம்பி காரில் வந்துள்ளார் யூசுப்.  வல்லம் பாலம் அருகே வந்துகொண்டிருந்த அவரது காரை நிறுத்தி முன் பக்க சீட்டில் சகாதேவன் ஏறி அமர்ந்துள்ளார். பின்புற சீட்டில் ஆறுமுகம், சந்துரு ஆகிய இருவரும் ஏறி அமர்ந்துள்ளனர். அப்போது காரின் உள்ளே பின் இருக்கையில் அமர்ந்தவாறு யூசுப்-பை பயங்கர  ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அப்போது பார்த்திபன் ஏற்பாடு செய்த கொலையாளிகள் ராஜா, காசி, முருகேசன் ஆகியோரும், சகாதேவன் ஏற்பாடு செய்த கொலையாளிகள் கேசவன், கார்த்தி ஆகியோரும் மோட்டார் சைக்கிள்களில் அங்கே வந்துள்ளனர்.

 

காருக்குள் கடுமையாக தாக்கப்பட்ட யூசுப் இரத்தம் சொட்டச் சொட்ட அலறியபடி காரிலிருந்து இறங்கி ரோட்டில் ஒடியுள்ளார். சுமார் 100 மீட்டர் தூரம் அவரை ஓட ஓட விரட்டிச் சென்ற கொலையாளிகள், பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இச்சம்பவத்தில்  படுகாயமடைந்த யூசுப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

யூசுப்-பை கொலை செய்வதற்கு மூலம் கொலையாளிகளுக்கு இதுவரை  ரூ2 லட்சம் கொடுத்துள்ளார் அசீலா.  கொலை நடப்பதற்கு முன், அட்வான்ஸ் தொகையாக ரூ1 லட்சமும், கொலை நடந்த பின்னர் அன்றைய தினமே ரூ1 லட்சமும் கொலையாளிகளுக்கு அசீலா கொடுத்துள்ளார் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. யூசுப்-பை கொலை செய்ய மொத்தம் எவ்;;வளவு தொகை தருவதாக ஒத்துக்கொள்ளப்பட்டது என்பது தெரியவில்லை.

 

தன் மீது ‘பாசம்’ கொண்டுள்ள சகாதேவனையும் அவனது நண்பர்களையும் பயன்படுத்தி ‘கொலையாளிகளை’ ஏற்பாடு செய்து யூசுப்-பை கொலை செய்துள்ளார் அசீலா என்கின்றனர் போலீஸார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!