கூலிப்படையை ஏவி  காதல் கணவரை கொலை செய்த இலங்கை பெண் ஏன் ?

0 798

கூலிப்படையை ஏவி  காதல் கணவரை கொலை செய்த இலங்கை பெண்

 

தனது காதல்; கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக இலங்கையைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட 3 பேரை தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

தஞ்சை காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த யூசுப் (வயது 47  ) என்பவர் ஜுன் 25-ம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் தனது காரில் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது அவரை வழி மறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை சுமார் 100 மீட்டர் தூரம் சாலையில் ஓட ஓட விரட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரான யூசுப் குவைத் நாட்டில் பணிபுரிந்தபோது அங்கே பணிபுரிந்து இலங்கையைச் சேர்ந்த அசீலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.

இருவரும் தஞ்சாவூர் காயிதே மில்லத் நகரில் வசித்து வந்தபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு இருப்பதும், சொத்துப் பிரச்சனை இருந்து வந்ததும் தெரிய வந்தது.

 

கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக திருச்சியில் வசித்து வந்த அசீலாவுக்கு இக்கொலை பற்றிய தகவலை வல்லம் போலீஸார் உடனடியாக தெரிவித்தனர். ஆனால், சுமார் 4 மணி நேரம் கழித்து – மாலை 6 மணியளவில் – திருச்சியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் துணையுடன்ஆயாசமாக வல்லம் காவல் நிலையம் வந்த அசீலா தனக்கும் இக்கொலைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என போலீஸாரிடம் தெரிவித்தார்.

யூசுப்
யூசுப்

அப்போதே அவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. இதையடுத்து அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் ரொம்பவும் ‘கூலா’கவே இருந்துள்ளார். ‘உங்களுக்கு உண்மையான குற்றவாளி கிடைக்காவிட்டால் என்னை வேண்டுமானால் குற்றவாளியாக ஆக்கி வழக்கு போட்டுக் கொள்ளுங்கள்’ என ரொம்ப தெனாவாட்டாகக் கூறியுள்ளார்.

 

 

கொலையாளிகளை காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி

 

இந்நிலையில், வல்லம் மேம்பாலத்தில் கொலை நடைபெற்ற சமயத்தில் அதன் சுற்றுபுற பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது,  ‘மாஸ்க்’ அணிந்த 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் எதிர் திசையில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அம் மூவரில் 2 பேரின் கைகளில் இரத்தக் கறை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்  புகைப்படத்தை வைத்து கொலையாளிகளை போலீஸார் தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் தேடி வந்தனர்.

அதனடிப்படையில் திருச்சியைச் சேர்ந்த சகாயம் என்கிற சகாதேவன் (மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்பவர்), பிரகாஷ் (நடுவில் அமர்ந்திருப்பவர்),  ஆகிய 3 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இக்கொலையில் 6 பேர் கொண்ட கூலிப்படை ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

 

கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் பிடிபட்டதைத் தொடர்ந்து, குற்றத்தை ஒப்புக் கொண்டு போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்; அசீலா. “என் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதனால் எங்களிருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதனால் அவரிடமிருந்து பிரிந்து திருச்சியில் வசித்து வந்தேன். இந்நிலையில், நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எங்களுக்கு கொடுப்பதாக ஒத்துக்கொண்ட சொத்துக்களையும் தராமல் காலதாமதம் செய்து வந்தார். அதனால் வெறுப்புற்று திருச்சி கூலிப்படையை வைத்து தீர்த்துக்கட்டினேன்,” என அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.

 

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக மேலும்  குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!