சொந்த கிராமத்தை காக்கும் பெண் காவல் மனிதம் !

0 469

சொந்த கிராமத்தை காக்கும் பெண் காவல் மனிதம் !

 

காவலர்கள் என்றாலே கடுமையானவர்கள் என பொதுமக்கள் மத்தியில் ஒரு எண்ணம் இருந்து வரும் நிலையில், அந்த எண்ணத்தை மாற்றும் வகையிலும், காக்கி சீருடை அணிந்த காவலர்களும் மனிதநேயம் உள்ளவர்களே என்பதை நிரூபிக்கும் வகையிலும், தனது சொந்த கிராம மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கி அசத்தியுள்ளார் தஞ்சையைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர்.

தஞ்சையை அடுத்துள்ள களிமேடு கிராமத்தைச் சேர்ந்த சுகிதா, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல்நிலையத்தில் தலைமைக்  காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஹரிஹரன் சுமார் 15 ஆண்டுகள் சிங்கப்பூரில் பணிபுரிந்துவிட்டு கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னர்  ஊர் திரும்பியுள்ளார். இத்தம்தியினருக்கு வர்ஷா என்ற மகள், ஸ்ரீவிக்னேஷ் என்ற மகன் உள்ளனர்.

 

ஐம்பது நாட்களுக்கு மேலாக நீடித்துவரும் கரோனா ஊரடங்கினால் வருவாய் இன்றி வாழ்வாதாரத்தை தவித்துவரும் மக்களுக்கு அவ்வப்போது உதவிய சுகிதா, தனது கணவரின் சொந்த கிராமமான சீராளுர் கிராம மக்களுக்கும்  உதவ வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது.  இந்த தனது விருப்பத்தை கணவரிடம் தெரிவித்துள்ளார் சுகிதா.

இதையடுத்து சீராளுரில் உள்ள 300 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, காய்-கனிகள்,; மளிகைப் பொருட்கள் என ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்கி, அவற்றை சுகிதாவும் அவரது குடும்பத்தினரும் வீடுவீடாகச் சென்று வழங்கியுள்ளனர்;.

 

இதுபற்றி கூறிய காவலர் சுகிதா, “அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை எனது கிராமத்தினருக்கு கணவர் மற்றும் குழந்தைகள் என குடும்பத்தினருடன் சென்று கொடுத்தது மனசுக்கு மிகவும் சந்தோசமாகவும், திருப்தியாகவும் இருந்தது” என்றார்.

 

“இதுபோல குடும்பத்தோடு சென்று உதவி செய்தால், இதைப் பார்க்கும் நம்ம குழந்தைகளுக்கும் வருங்காலத்தில் இதுபோல உதவிசெய்யும் மனப்பான்மை ஏற்படும் என்ற எண்ணத்தில் குடும்பத்தோடு வீடு வீடாகச் சென்று பொருள்களை வழங்கினோம்,” என்கிறார் சுகிதா.

 

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டனர். அத்தியாவசியப் பணிகளான மருத்துவம், தூய்மைப் பணி மற்றும் காவல் பணி மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதில் காவலர்களின் பணி முக்கியமானது. இரவு, பகலென பார்க்காமல்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கரோனா பணியில் ஈடுபட்டுள்ளதால் தமிழக அரசால் தலைமைக் காவலர் சுகிதாவுக்கு தினமும் வழங்கப்பட்ட ரூ250, அவரது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர் சேர்த்து வைத்திருந்த சேமிப்பு பணம், நண்பர்களிடம் வசூலித்த பணம் ஆகியவற்றைக் கொண்டு சீராளுரில் உள்ள 300 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கியுள்னர்.

 

கரோனா ஊரடங்கால் கடந்த ஐம்பது நாட்களாக வருவாய் இன்றி வாழ்வாதரத்தை இழந்து தவித்த தங்களுக்கு பெண் காவலர் ஒருவர் குடும்பத்தோடு செய்த உதவியால் நெகிழ்ந்துபோயுள்ளனர்  சீராளுர் கிராமத்தினர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.