நீதிமன்ற பெண் ஊழியருக்கு கரோனா தொற்று !   தஞ்சை நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு கரோனா நோய்த்  தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊரடங்கால் தஞ்சை நீதிமன்றம் குறைந்த ஊழியர்களுடன் இயங்கி வந்த நிலையில்.  தூத்துக்குடி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் தஞ்சை நீதிமன்றத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் (மே 18-ம் தேதி) டைப்பிஸ்ட்-ஆக பணியில் சேர்ந்துள்ளார்.   தஞ்சாவூர் புறப்படுவதற்கு முன் அவருக்கு தென்காசியில் ஸ்வாப் எடுக்கப்பட்டு  பரிசோதனைக்கு அனுப்பபட்டிருந்தது. அந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று வந்தநிலையில் அப்பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.  இதையடுத்து அப் பெண் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அவர் சப் கோர்ட்டில் தட்டச்சராக பணியில் சேர்ந்து இரண்டு நாட்கள் பணிபுரிந்துள்ளதால், அவருடன் பணிபுரிந்த  14 ஊழியர்களுக்கும் ஸ்வாப் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே அவர் கடந்த இரு நாட்களாக தங்கியிருந்த விடுதியில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.   மேலும், சுகாதாரத்துறை சார்பில் தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற வளாகம் முழுவதும் சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளித்தனர்.