தாடி இருந்ததால் முஸ்லீம் என நினைத்து வழக்கறிஞரை கொலை வெறி தாக்குதல் நடத்திய போலிஸ் ! ‘தாடி’ வைத்திருந்த ஒரே காரணத்தினால், ‘இஸ்லாமியர்’ என நினைத்து  இந்து மதத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை மத்திய பிரதேச போலீஸார் கடுமையாகத் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் ‘இஸ்லாமிய வெறுப்பு’ எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு இச்சம்பவமே ஒரு சிறந்த உதாரணம் ஆகும். இந்த அதிர்ச்சிகர சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.   மத்திய பிரதேசம் பேட்டுல் பகுதியைச் சேர்ந்த  வழக்கறிஞர் தீபக் பந்தலே. இவரின் தோற்றமே முழு நீள தாடிதான். இவருக்கு இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு உள்ளது. எப்போதும்  தாடியுடன் இருக்கும் தீபக் மார்ச்; 23-ம் தேதி மாலை 5.30 – 6.00 மணியளவில் மாஸ்க் அணிந்துகொண்டு மருந்துகள் வாங்க சென்றுள்ளார். அப்போது தீபக்கை அழைத்த போலீஸார் என்னவென்று கூட விசாரிக்காமல் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியும் கடுங்கோபமும் அடைந்த  தீபக், தான் ஒரு ‘வழக்கறிஞர்; என சொன்ன பிறகு அடிப்பதை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.   இதுபற்றி தீபக் கூறுகையில், “எனக்கு கடந்த 15 ஆண்டுகளாக இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் உள்ளது. அதற்காக கடைக்கு மருந்து வாங்க சென்றேன். அப்போது என்னை தடுத்த போலீஸாரிடம் நான் மருத்துவமனைக்கு செல்வதாக கூறினேன்.   நான் சொல்வதைகூட காதில் வாங்காமல் ஒரு போலீஸ்காரர் என் கண்ணத்தில் பளாரென அறைந்தார். பின்னர், என்னை எதுவுமே விசாரிக்காமல் அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி கண்மூடித்தனமாக தாக்கினர். ஒரு கட்டத்தில் எனது காதிலிருந்து இரத்தம் வரத் தொடங்கியது. வலி தாங்கமுடியாமல் கடுங்கோபத்திற்கு சென்ற நான்,  ‘ நான் ஒரு வழக்கறிஞர்’ என சொன்ன பிறகே அவர்கள் என்னை அடிப்பதை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.   பின்னர் எனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்து, அவர்கள் வந்து என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்,” என வேதனையுடன் தெரவிக்கிறார்.   மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட தீபக் தன்னை அடித்த போலீஸார் மீது வழக்கு தொடர்ந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுக்கும், மனித உரிமை ஆணையத்துக்கும் புகார் அனுப்பினார். மத்திய பிரதேச முதல்வருக்கும் இதுதொடர்பாக புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதையடுத்து, பல தரப்பிலிருந்தும் பெரும் நெருக்கடி ஏற்படவே,  காவல்துறை அதிகாரிகள் தீபக்கை தொடர்புகொண்டு புகாரை வாபஸ் பெற வலியுறுத்தியுள்ளனர். பின்னர் ஒரு கட்டத்தில், அவர்மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மே 1-ம் தேதி அவரது வீட்டுக்கு நேரில் வந்து ‘தவறுதலாக’ நடைபெற்றுவிட்டது எனக்கூறி மன்னிப்பு கேட்டுள்ளனர். “உங்களை வேண்டுமென்று நாங்கள் அடிக்கவில்லை. தவறுதலாக நடைபெற்றுவிட்டது. நீண்ட தாடி வைத்திருப்பதால் நீங்கள் ஒரு ‘முஸ்லிமாக’ இருக்கக்கூடும் என தவறுதலாக நினைத்து அடித்துவிட்டோம். மன்னித்துக்கொள்ளுங்க” என போலீஸார் கூறியுள்ளனர். பின்னர், தங்களுக்கு எதிரான புகாரை வாபஸ் வாங்குமாறு தீபக்கை வலியுறுத்தியுள்ளனர்.   தீபக் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். போபாலில் சில முன்னணி பத்திரிகைகளில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ள தீபக் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார்.   அவர் கொடுத்த புகார் மனு மீது இதுவரை போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை வழக்குப் பதியவில்லை.   எக்காரணம் கொண்டும் தான் கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற மாட்டேன் என்றும், தனது புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை உயரதிகாரிகளிடம் கூறியுள்ளதாகவும் தீபக் தெரிவிக்கிறார்.