செயற்கை கருத்தரிப்பு - 8 மாத கர்ப்பிணி திடீர் மரணம் – கொரோனா காரணமா ?   பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 மாத கர்ப்பிணி பெண் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாரப இறந்தார். அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருந்ததா என்பதைக் கண்டறிய அவரது இரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவள்ளி தாலுகா புளியங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி தேவி. வயது 29.   திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐ.வி.எஃப் என்ற செயற்கை கருத்தரித்தல் முறையில் தேவி கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபரில் கருவுற்றார்.
தேவி
இதையடுத்து, புளியங்குறிச்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பகால சிகிச்சை பெற்றுவந்துள்ளார். செயற்கை முறையில் கருவுறச் செய்த திருச்சி தனியார் மருத்துவமனையிலும் அவ்வப்போது கர்ப்பகால சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.   தற்போது 8 மாத கர்ப்பிணியான தேவிக்கு  நேற்று 20.05.2020 காய்ச்சல், இருமல், சளி தொந்தரவு இருந்தது. இதைத்தொடர்ந்து, இரவு 10 மணியளவில் தேவிக்கு காய்ச்சல் அதிகமானதால் அவரை அவரது குடும்பத்தினர் வீரகனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.   அதன்பின்னர்,  திருச்சியில் செயற்கை கருத்தரிப்பு செய்து கொண்ட தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்து, தேவியை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர். இந்நிலையில், பெரம்பலூர் அருகே வந்தபோது தேவிக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நள்ளிரவு 12 மணியளவில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். ஆயினும், சிகிச்சைப் பலனின்றி நள்ளிரவு 1.10 மணியளவில் தேவி பரிதாபமாக இறந்தார்.   காய்ச்சல், சளி தொந்தரவுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தேவி இறந்ததால் அவருக்கு கரோனா தொற்று இருந்ததா என்பதைக் கண்டறிய அவரது இரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்தபின்னரே தேவியின் இறப்புக்கான காரணம் தெரியவரும்.