சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – கோயில் அர்ச்சகர் கைது   சென்னை மடிப்பாக்கத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோயில் அர்ச்சகர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.   சென்னை மடிப்பாக்கத்தை அடுத்த உள்ளகரம் மண்டபம் இணைப்பு சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசிப்பவர் சிவக்குமார். 59 வயதான சிவக்குமார் சென்னை அண்ணா சாலை எல்ஐசி பின்புறம் உள்ள அன்புக்குரிய அம்மன் கோயிலில் அர்ச்சகராக உள்ளார்.   இந்நிலையில், சிவக்குமார் இருதினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்தபோது அதே குடியிருப்பில் வசித்துவரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி அச் சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் நடந்த சம்பவத்தை வீட்டு உரிமையாளரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, வீட்டை காலி செய்யுமாறு அர்ச்சகர் சிவக்குமாரை வீட்டு உரிமையாளர் கூறியுள்ளார். இதனால் அர்ச்சகர் சிவக்குமார் தலைமறைவானார்.   பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இச்சம்பவம் குறித்து மடிப்பாக்கம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அப் புகாரின் அடிப்படையில் அர்;ச்சகர் சிவக்குமாரை போலீஸார் தேடி வந்தனர்.   சிறுமியிடம் தான் தவறாக நடந்த விசயம் அவரது பெற்றோர்க்கு தெரிந்துவிட்டதால், யாருக்கும் தெரியாமல் வீட்டில் உள்ள பொருள்களை எடுத்துச் சென்றுவிடலாம் எனக் கருதி அதிகாலை 5 மணியளவில் அக்குடியிருப்பிற்கு வந்துள்ளார் அர்ச்சகர் சிவக்குமார்.   அர்ச்சகர் சிவக்குமார் வீட்டிற்கு வந்துள்ளதை அறிந்த சிறுமியின் பெற்றோர், அவரை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு இதுபற்றி மடிப்பாக்கம் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்க வந்த போலீஸார், சிவக்குமாரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.   விசாரணையில், சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதை சிவக்குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, அர்ச்சகர் சிவக்குமாரை கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.