பேரம் பேசிய நிருபர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிராபிக் ராமசாமி புகார் !   தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகேயுள்ள பரவத்தூர் கிராமத்தில் ரேசன் கடையில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பத்திரிகை நிருபர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என சென்னையைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் ‘டிராபிக்’ ராமசாமி  புகார் மனு அனுப்பியுள்ளார்.   தமிழக தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி, தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு 29.06.2020  அனுப்பியுள்ள புகாரில், இச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு ஊழலை ஊக்குவிக்கும் இது போன்ற முன்னணி பத்திரிகைகளின் நிருபர்கள் மீது 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ‘கெடு’ விதித்துள்ளார்.   இதையடுத்து, மதுக்கூர் காவல் நிலைய போலீஸார் டிராபிக் ராமசாமிக்கு மனு ரசீது (CSR no  : 281/ 2020) அளித்துள்ளனர்.   மதுக்கூர் அருகேயுள்ள கொடியாளம் பரவத்தூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் ரேசன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசி மற்றும் அரசால் அறிவிக்கப்பட்ட கூடுதல் அரிசி வழங்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சார்பில் ஜுன் 25-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   https://www.youtube.com/watch?v=aj8Q_jqjr3w அந்த நியாயவிலைக் கடை பெண் ஊழியர் சசிகலா என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஒரத்தநாடு பகுதிக்கான   தினகரன் நிருபர் துரை செல்வம், ரேசன் கடைக்கு எதிரான அந்த ஆர்ப்பாட்;ட செய்தியை (நான்கு பிரபல தமிழ் நாளிதழ்களின் பெயர்களைக் குறிப்பிட்டு) பத்திரிகைகளில் போடாமல் இருக்க அதன் நிருபர்களுக்கு தலா ரூ 10,000 வீதம் ரூ 40,000 மற்றும் ‘தண்ணி’ மற்றும் சாப்பாடு செலவுக்கென தனியே ரூ 10,000 என மொத்தம் ரூ50,000 கேட்ட உரையாடல் அடங்கிய ஆடியோ தமிழகம் முழுவதும் வைரலானது.   இதையடுத்து சம்பந்தப்பட்ட நாளிதழ்களின் நிர்வாகத்தினர்   குற்றச்சாட்டுக்கு ஆளான தங்களது நிருபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பேரில்,  தினகரன் நிருபர் துரை செல்வம், மாலை மலர் நிருபர் மனோகரன் ஆகிய இருவரும்  அவர்கள் பணிபுரியும் நாளிதழ்களிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   ஏனைய நாளிதழ்களின் நிருபர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற  குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் பணிபுரிய வேண்டும் என அவரவர்  நாளிதழ் நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.   ரேசன் கடை பெண் ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற நிருபர்கள் மீது ஏற்கெனவே இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.   இந்நிலையில், சட்ட மேல் நடவடிக்கையை தவிர்க்க, இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி ஊழலை ஊக்குவிக்கும் இது போன்ற முன்னணி பத்திரிகைகளின்  நிருபர்கள் மீது 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சித்திரவதைகளுக்கு ஒரு முடிவு கட்டுங்கள்; என ‘கெடு’ விதித்துள்ளார்.