“அவருக்கு ரஜினி என்றால் அவ்வளவு பிரியம். ரொம்ப உயிராக இருப்பாரு. அதனாலயே தனது மகள்களுக்கு ரஜினி மகள்களின் பெயர்களான ஐஸ்வர்யா, செளந்தர்யா எனப் பெயர் வைத்தவர், ஒரே மகனுக்கு ரஜினி பாலா எனப் பெயரிட்டார். அந்தளவுக்கு ரஜினியை அவருக்குப் பிடிக்கும். குடும்ப வறுமைக்காக துபாய் நாட்டுக்குப் போனார். நல்ல முறையில் வேலை செய்தவர், அங்கே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மயங்கி விழுந்துள்ளார்...
rajini fan balakrishnan
மருத்துவமனையில் பாலகிருஷ்ணன்
தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அந்நாட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் கடந்த 21.7.2020 அன்று பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மரணச் செய்தி கேட்டும், அவரது உடலை சொந்த ஊர் கொண்டுவரமுடியாதநிலையில் அவரின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, தொழுதூர் அடுத்த வடகராம்பூண்டி கிராமமே சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது. சுமார் 2000 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் கூலித்தொழிலாளர்கள். பெங்களூரு, சென்னை போன்ற பகுதிகளில் வேலை செய்துவருகிறார்கள். அவர்களில் சிலர் குடும்ப வறுமைக்காக வெளிநாடு சென்றுள்ளனர். அந்தவகையில் குடும்ப வறுமைக்காகத் துபாய்க்குச் சென்றவர்தான் முத்துக்கண்ணு மகன் பாலகிருஷ்ணன். நான்கு பேருடன் பிறந்த இவர், வீட்டின் கடைசிப் பிள்ளை. இவரின் முதல் மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள். இரண்டாவது பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மரணமடைந்தார். அவரின் குழந்தைகளை அக்காவும், மாமியாரும் வளர்த்து வருகின்றனர். முதல் மனைவி செல்வியின் பிரிவை ஏற்க மனமில்லாமல் தவித்த பாலகிருஷ்ணன் 10வருடங்களுக்கு மேலாக மறுமணம் செய்யாமலேயே இருந்தார். தொடர்ந்து, உறவினர்கள் வற்புறுத்தவே சிறுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை என்பவரைக் கடந்த 7வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். அஞ்லைக்கும், பாலகிருஷ்ணனுக்கும் இடையேயான மண வாழ்வில் 6வயதில் பெண் குழந்தையும், 3வயதில் ரஜினி பாலா என்கிற மகனும் உள்ளனர். வருடத்தில் சில மாதங்கள் சொந்த ஊர் வரும் பாலகிருஷ்ணன் குடும்பத்தாரோடு இருப்பது வழக்கம். இந்நிலையில்தான் அந்த சோகம் நிகழ்ந்தது. பாலகிருஷ்ணன் கடந்த மாதம் தமிழகம் வருவதற்காகத் தனது விசாவை ரத்து செய்துவிட்டு ஊருக்கு வரக் காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென வாந்தியும் மயக்கமும் ஏற்படவே அவர் துபாயில் உள்ள ரஷித் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
இறந்த பாலகிருஷ்ணன்
இறந்த பாலகிருஷ்ணன்
ஒருமாதம் உடல்நலக்குறைவால் அவதிபட்டுவந்தவர், முதலில் தான் இந்தியா சென்று அங்கு அறுவை சிகிச்சை செய்துகொள்வதாகக் கூறியுள்ளார். அதற்காக இந்தியத் தூதரகத்தில் விண்ணப்பமும் செய்துள்ளார். இந்திய தூதரகம் அவரது விண்ணப்பத்தை சாதாரணமான ஒருவரைப் பரிசீலிப்பதைப் போலத் தாமதப்படுத்தினார்கள். அவரின் தாமதம் அவரின் உயிரைப் பறித்திடக் காரணமாகிவிட்டது என்கிறார்கள். அவரது குடும்பத்தினர். இதுகுறித்து பாலகிருஷ்ணனின் மனைவி அஞ்சலை கூறுகையில், “அவர் மருத்துவமனையில் சேர்ந்த சில தினங்கள் அவர் எங்களிடம் நல்ல முறையில் பேசினார். அவர் நல்லமுறையில் ஊருக்கு வந்தபிறகு அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம் என இருந்தோம். திடீரென கடந்த 7ம் தேதி அவர் வேலை செய்த கம்பெனி நிர்வாகம், அவர் உடல்நிலை மோசமாக உள்ளது என்று மட்டும் கூறினார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப் போனோம். இந்நிலையில், வழக்கறிஞர் ஆனந்தகுமார் என்பவர் உதவியுடன், இந்தியத் தூதரகம், முதல்வர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பினோம். அவரது முயற்சியில் துபாய் நாட்டில் இயங்கிவரும் ஈமான் கல்சுரல் எனும் அமைப்பின் நிர்வாகிகள் தொடர்புகொண்டனர். கடந்த ஒரு மாதமாக அடுத்தடுத்த முயற்சியில் எனது கணவர் நல்ல முறையில் வீடு வருவார் என நம்பிக்கையோடு இருந்தது. தினம் தினம் எங்கள் உறவினர்கள், அவரின் நண்பர்கள் நேரில் சென்று பார்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த 21ம் தேதி சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரை உயிரோடுதான் பார்க்க முடியல. இறந்த அவரின் உடலையாவது பார்க்கலாம் எனக் காத்திருந்தோம்” எனக் கதறினார்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..

தொடர்ந்தார் அவரது பாலகிருஷ்ணனின் அண்ணன் ராஜேந்திரன், “தம்பியின் மரணம் தொடர்பாக மருத்துவமனை கொடுத்த அறிக்கையில் என் தம்பி Brain Drema எனும் நோயால் இறந்ததாகச் சொல்கிறார்கள். அதனால், உடலை ஊருக்கு அனுப்புகிறோம் என அவரது கம்பெனி நிர்வாகம் சொன்னார்கள். அதற்கான வேலைகளையும் செய்தார்கள். ஆனால், இந்தியத் தூதரக அதிகாரிகள் ஆரம்பத்திலிருந்தே சில சிக்கல்களைச் செய்துவந்தனர். தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் தம்பியின் உடலை பெற்றுக்கொள்ள அரசு தயாராக இருந்தால் உடலை அனுப்புகிறோம் என்றார்கள். அடுத்து, இறந்தவரின் உடலில் 27ம் தேதி மருத்துவ பரிசோதனை செய்வோம். அதில் கொரோனா நோய்த் தொற்று இல்லை எனில் அனுப்புகிறோம் என்றார்கள். மருத்துவ அறிக்கையும் வந்துவிட்டது. எல்லாம் முடிந்து உடல் ஊருக்கு வந்துவிடும் என பத்து நாட்களாகக் காத்திருக்கிறோம். இப்போது திடீரென என் தம்பிக்கு ஒரு மாதத்துக்கு முன்னால் கொரோனா நோய்த் தொற்று இருந்துச்சு. அதனால் அவரது உடலை இந்தியா அனுப்பத் துபாய் சுகாதாரத்துறை அனுமதி மறுப்பதாகக் கூறுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் மருத்துவ அறிக்கை நம்பகத் தன்மை அற்றதாக உள்ளது. அதனால், இறந்த எனது தம்பியின் உடலை ஊருக்குக் கொண்டுவரவேண்டாம் அங்கேயே இறுதிச் சடங்குகள் முடிக்க நினைப்பதாகத் தெரிகிறது. இதுவரை இந்தியத் தூதரக அதிகாரிகள் எங்களுக்கு உரியப் பதிலைத் தரவில்லை. என் தம்பிக்கு நான்கு பிள்ளைகள். ரொம்ப கஷ்டப்படுகிற குடும்பம். பள்ளிகூட பிள்ளை வைத்துக்கொண்டு இனி எப்படிக் காப்பாற்றப்போகிறோம் என நினைத்தாலே உயிர் போகுது என தலையிலடித்துக்கொண்டார்.
இறந்த பாலகிருஷ்ணன் குடும்பத்தினர்
கடைசியாக பேசிய அஞ்சலை, "இறந்த அவரின் உடலைத் தமிழகம் எடுத்து வருவதில் பல சிக்கல்கள் நீடிக்கிறது. எங்கள் வீட்டில் யாரும் அந்தளவுக்கு படிக்கல. எங்களுக்கு உதவி செய்கிறவர்களும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். தமிழக அரசு மனது வைத்தால் உடலையாவது நாங்கள் பார்த்து கதறி அழ முடியும். ஆனால் இந்த சூழலிலும், முதல்வர் ஐயாவுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மனு அப்பினோம். கலெக்டர் ஆபிஸ்ல இருந்து விரட்டி விட்டுவிட்டார்கள். உயிரோடு இருந்தவரை காப்பாற்ற மனுக்கொடுத்தோம். அவர் செத்தபிறகு அந்தமனுவை மேல்நடவடிகைக்காக அனுப்பி வைக்கிறார்கள் என்றால் இவர்கள் நடவடிக்கை எப்படியிருக்குன்னு பாருங்க. இவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டும் ஒரு அதிகாரிகள் கூட எங்களை நேரில் பார்த்து நடந்தவற்றை விசாரிக்கவில்லை.எனது கணவர் உயிரோடு மருத்துமனையில் இருந்தவரை அலட்சியமாக இருந்த அவரது கம்பெனி நிர்வாகம், இப்போதும் அவரின் உடலை இந்தியா கொண்டுவரவும், எங்களுக்கு இழப்பீடு வழங்கவும் மறுக்கிறது. குடும்பத்தில் வருமானம் ஈட்டிய அவர் இப்போது இல்லை. இந்தப்பிள்ளைகளை வைத்துக்கொண்டு எப்படி வாழப்போகிறோம்னு தெரியல.." “அவருக்கு ரஜினி என்றால் அவ்வளவு பிரியம். ரொம்ப உயிராக இருப்பாரு. அதனாலயே தனது மகள்களுக்கு ரஜினி மகள்களின் பெயர்களான ஐஸ்வர்யா, செளந்தர்யா எனப் பெயர் வைத்தவர், ஒரே மகனுக்கு ரஜினி பாலா எனப் பெயரிட்டார். அந்தளவுக்கு ரஜினியை அவருக்குப் பிடிக்கும். அவராவது என் கணவரின் மரணத்துக்கு நீதி கிடைக்க உதவுவாரா?" என்றார்... தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் கேட்காமலேயே உதவி செய்த நடிகர் ரஜினிகாந்த், அவரது ரசிகரின் குடும்பத்துக்கு உதவுவாரா?