குடும்பப் பிரச்சனை காரணமாக 2 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்; குடும்பப் பிரச்சனை காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததால் மனமுடைந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் இன்று காலை ஆற்றில் குதித்தார். தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அப்பெண்ணை தீயணைப்பு படை வீரர்கள் உயிருடன் மீட்டனர். ஆனால், அவ்விரு குழந்தைகளும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி (38). இவர்களது குழந்தைகள் ஸ்வேதா (12) மற்றும் கோகுல் செழியன் (4). குடும்பப் பிரச்சனை காரணமாக சுரேஷ் - செந்தமிழ்ச் செல்விக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. நேற்றிரவும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மனமுடைந்த செந்தமிழ்ச்செல்வி தனது இரு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி, இன்று காலை 5 மணியளவில், செவப்பநாயக்கன்வாரி கல்லணைக் கால்வாய் பாலத்தில் இருந்து தனது இரு குழந்தைகளையும் செந்தமிழ்ச்செல்வி ஆற்றில் தள்ளிவிட்டு, தானும் ஆற்றில் குதித்துள்ளார். அவர்கள் மூவரும் தண்ணீரில் தத்தளித்தனர். குழந்தைகள் கதறி அழுதனர். குழந்தைகளின் கதறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து ஆற்றில் குதித்து அவர்கள் 3 பேரையும் மீட்க முயன்றனர். இதில் செந்தமிழ்ச் செல்வி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஸ்வேதா, கோகுல் செழியன் ஆகிய இருவரின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. அவர்கள் இருவரையும் தீயணைப்புபடை வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்நிலையில், மீட்கப்பட்ட செந்தமிழ்ச் செல்வி, அவரது கணவர் சுரேஷ் ஆகிய இருவரையும் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.