"நான் யாரு தெரியுமா.. வக்கீல் சங்க தலைவர்.. நீங்க இங்கிருந்து நகரக்கூட முடியாது என கலெக்டர் உத்தரவின் பேரில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அளப்பதற்காக வந்த வருவாய் துறை அதிகாரிகளையும், காவல்துறை அதிகாரிகளையும் மிரட்டிய சர்ச்சையில் சிக்கி தலைமறைவாக இருக்கிறார் திருச்சி மாவட்டம் லால்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் ஜான் கென்னடி.  மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு எதிராக வருவாய்துறை அதிகாரிகளை மிரட்டிய இவருக்கு முன்ஜாமின் கிடைக்க லால்குடி போலீஸாரே உதவுவதாக வருவாய்துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த விவகாரம் குறித்து விசாரித்தோம். திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், சிறுமயங்குடி (மேற்கு), காட்டூர்  சவேரியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர். இவருக்கு சொந்தமான நிலத்தில் இவர் மற்றும் இவரது தம்பி  அந்தோணிசாமி குடும்பம் வசித்துவருகிறது.  அதன் சர்வே எண்: 138/1A, பட்டா எண் 617.  அந்தநிலத்துக்கு மேற்குபுறம் தென்வடல்பகுதியில் பொது நடைபாதை உள்ளது.  அதன் சர்வே எண்: சர்வே எண் 137/14.
திருச்சி லால்குடி வழக்கறிஞர் சங்க  தலைவரும், தி.மு.க பொறுப்பாளருமான வழக்கறிஞர் K.S.J.J கென்னடி
அந்தப் பொதுபாதையை அப்பகுதியில் குடியிருந்துவரும் மக்கள் கடந்த 40வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தி வந்தார்களாம். இந்நிலையில், அப்பகுதியில் தனது மனைவியும் அரசுப்பள்ளி ஆசிரியருமான டெய்சி கென்னடி என்பவரின் பெயரில் இடம் வாங்கி வீடுகட்டி குடியிருந்து வருகிறார் திருச்சி லால்குடி வழக்கறிஞர் சங்க  தலைவரும், தி.மு.க பொறுப்பாளருமான வழக்கறிஞர் K.S.J.J கென்னடி.  கடந்த சிலவாரங்களுக்கு முன்பு பொதுபாதையை ஆக்கிரமிக்கும்  வகையில் வழக்கறிஞர் ஆட்களை அழைத்துவந்து சுற்றுச்சுவர் எழுப்பியதாக குற்றச்சாட்டு…   இதுதொடர்பாக ஜான்பீட்டர் கேட்டபோது, “நான் இப்படிதான் செய்வேன். நான் யார் தெரியுமா வழக்கறிஞர் சங்க தலைவர். அரசியலில் என் செல்வாக்கு ஏராளம். எனக்கு எதிராக “உன்னால ஒன்னும் புடுங்க முடியாது. தொடர்ந்து இப்படியே பொதுபாதையை கேட்டு பிரச்னை செய்துவந்தால் நீங்கள் உங்கள் சொந்த நிலத்தில்கூட குடியிருக்க முடியாதபடி செய்திடுவேன் என மிரட்டினாராம்.   தொடர்ந்து ஜான்பீட்டர் மேற்படி பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றித் தருமாறு மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், சிறுமயக்குடி ஊராட்சி மன்றம் உள்ளிட்டோருக்கு கடந்த 7.7.2020 அன்று மனு அளித்துள்ளார்.  அந்த மனுவின்மீது திருச்சி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவே, அதன்பேரில் திருச்சி மாவட்ட தலைமை நில அளவையர், லால்குடி வட்டார அளவையர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த 25.7.2020 அன்று நேரில் ஆய்வு செய்துள்ளார்கள்.   அப்போது அதிகாரிகளின் ஆய்வில் மக்களுக்கான பாதையை அப்படியே மறைத்து வழக்கறிஞர் கென்னடி சுவர் எழுப்புவதைக் கண்டு அதிகாரிகளே அதிர்ச்சியடைந்தார்களாம். தொடர்ந்து அந்தபாதையை அளந்து  அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை அடையாளப்படுத்தும் வகையில் அத்துக்குச்சி மற்றும் கம்பிகளை நட்டுள்ளனர். அதைக்கண்டு ஆத்திரமடைந்த திருச்சி லால்குடி வழக்கறிஞர் சங்க  தலைவர், வழக்கறிஞர் K.S.J.J கென்னடி  மற்றும் அவரது மனைவி டெய்சி மற்றும் அவரது  குடும்பத்தினர், “எங்க நிலத்தை அளக்க நீங்க யாரு, யாருன்னு தெரியாமல் எங்ககிட்ட விளையாடுறீங்க. உங்களை எல்லாம் சும்மா விடமாட்டேன்” என வருவாய்துறை அதிகாரிகளை மிரட்டினாராம். தொடர்ந்து அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுவதுடன், அவர்கள் அடையாளக் கம்பிகளை அகற்றியதாகவும் குற்றச்சாட்டு.  இதுதொடர்பாக கடந்த 25.01.2020 அன்று வி.ஏ.ஓ சுதா அவர்கள் புகார் கொடுத்த புகாரில் விசாரிக்க வந்த லால்குடி காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசனை அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.  அதனால் கோபமடைந்த லால்குடி போலீஸார்   கென்னடி மற்றும் அவரது மனைவி டெய்ஸி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.   இதனிடையே வி.ஏ.ஓ சுதா அவர்கள் கொடுத்த புகாரில் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்ட தகவலறிந்த வழக்கறிஞர் கென்னடி மற்றும் அவரது மனைவி ஆகியோர்  தலைமறைவாகி விட்டதாகவும் அவர் முன் ஜாமின் வாங்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
மறைக்கப்பட்டுள்ள எப்.ஐ.ஆர்
இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஜான் பீட்டர் குடும்பத்தாருக்கு வழக்கறிஞர் கென்னடி தரப்பில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், வி.ஏ.ஓ புகார் கொடுப்பதற்கு அவர்கள்தான் காரணம் என்பதால் அவர்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாதபடி கற்களை போட்டுள்ளதாக ஜான் பீட்டர் தரப்பும் புகார் கொடுத்துள்ளது. ஆனால் அந்தபுகாரை போலீஸார் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் ஜான்பீட்டர் எல்லோருக்கு புகாரை தபாலில் அனுப்பியுள்ளாராம். இதனிடையே நம்மிடம் பேசிய வருவாய்துறை அதிகாரிகள், “எங்கள் கடைமையை செய்யப்போன எங்களை சட்டத்துக்கு புறம்பாக தடுத்து நிறுத்தியதுடன், எங்கள் பணியை செய்யமுடியாதபடி இடைஞ்சல் ஏற்படுத்தினர். மேலும், கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் லால்குடி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் வழக்காக பதிவு செய்யப்பட்டு இதுநாள்வரை முதல் தகவலறிக்கையை போலீஸாரே மறைத்து வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஜான்பீட்டர் கொடுத்த புகாரை போலீஸார் வாங்கவே இல்லை. திட்டமிட்டு, வழக்கறிஞர் கென்னடியையும், அவரது மனைவியையும் தப்பிக்க வைத்த போலீஸார் இப்போது அவருக்கு முன் ஜாமீன் கிடைக்க இடம் கொடுத்துள்ளனர்.  இதன்காரணமாக அரசு ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் சுலபமாக கிடைத்துள்ளது.   இதனால், அச்சமடைந்த ஜான்பீட்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் பயத்தில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாதநிலைக்கு ஆளாகியுள்ளனர்.  அரசு ஊழியர்களான எங்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், அங்குள்ள மக்கள் பாவம் சார்” என்றனர். வழக்கறிஞர் கென்னடி தரப்பில் பேச முயற்சித்தோம். முன் ஜாமின்  விவகாரத்தில் பிஸியாக உள்ளோம். என்றவர்கள், இவை அனைத்தும் பொய் குற்றச்சாட்டுகள் என்றார்கள். அவர்கள், தங்களின் விளக்கம் தந்தால் அதனை பிரசுரிக்கவும் தயாராக இருக்கிறோம்.   சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய வழக்கறிஞர் சங்க தலைவரே பொதுப்பாதையை ஆக்கிரமித்த சர்ச்சையில் சிக்கியிருப்பது திருச்சி வழக்கறிஞர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.