கோச்சிங் என்றொரு பூதம்! நான் ஐஏஎஸ் தேர்வுகளுக்கு ஊரில் தனியாக தயாராகிக் கொண்டிருந்த பொழுது போட்டித்தேர்வு இதழ்களில் கவர்ச்சிகரமான பல விளம்பரங்கள் வரும். டெல்லியில் உள்ள கோச்சிங் இன்ஸ்டியூட்கள் தங்களது நிறுவனத்தில் படித்த மாணவர்கள் டாப் ரேங்க் பெற்றதை புகைப்படங்களுடன் வெளியிட்டு இருப்பார்கள். அவர்கள் கூறும் தேர்ச்சி எண்ணிக்கையும் ரேங்களும் படிப்பவரை கண்டிப்பாக கவனம் ஈர்க்கும். இதெல்லாம் உண்மையா பொய்யா என்று எதுவும் தெரியாது. ஒரே நபரின் படங்கள் பல இன்ஸ்டிடியூட்களின் விளம்பரங்களில் வெளி வருவதை பார்த்திருக்கிறேன். சில இன்ஸ்டிடியூட்கள் தேர்ச்சி பெற்றவர் தங்கள் இன்ஸ்டிடியூடில் சேர்ந்த சேர்க்கை விண்ணப்பத்தை கூட வெளியிட்டு விளம்பரம் செய்வார்கள். நான் ஒரு சிறு கிராமத்தில் இருந்து கொண்டு இவ்வளவு பெரிய இன்ஸ்டியூட்டில் படிக்கும் மாணவர்களுடன் போட்டியிட வேண்டும் என்ற எண்ணமே சோர்வைத் தரும். அப்பொழுது சென்னையில் அதிகமான ஐஏஎஸ் பயிற்சி நிறுவனங்கள் இல்லை. தமிழ்நாடு அரசு அண்ணா நகரில் நடத்திவந்த அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையம் மட்டுமே பெரிய பயிற்சி நிறுவனம். அந்த நிறுவனத்தில் ஆறு மாதம் முதனிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்குவார்கள். அதற்கு ஒரு நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை வந்தடைந்தேன். அப்பொழுது இருந்த திட்ட இயக்குனர் ( Program Director) திரு. பிரபாகரன் அவர்கள் அரசு பயிற்சி மையத்தை மிகவும் அக்கறையுடன் நடத்தி வந்தார். இதற்கு முன்னர் பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடைபெற்று வந்தன. பேராசிரியர்களின் பயிற்சி தேர்வின் போக்குக்கு இணையாக இல்லை என்று உணர்ந்து, ஐஏஎஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்முகத் தேர்வுக்கு சென்றவர்கள் என்று இளைஞர்களைக் கொண்டு வகுப்புகள் எடுக்க வைத்தார். முதன்மைத் தேர்வில் தோல்வியடைந்த சில மாணவர்களை புதிய மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக ( Mentors) நியமித்தது தனிப்பட்ட கவனத்தை செலுத்தினார். தமிழகத்தில் தேர்ச்சி வீதம் ஓரிரு ஆண்டுகளில் அதிகரிக்கத் தொடங்கியது. சென்னையில் தங்கி படித்தாலும் வெல்லலாம் என்ற நம்பிக்கை மாணவர்களுக்கு உருவானது. இந்த காலகட்டத்தில் சென்னையில் தனியார் கோச்சிங் இன்ஸ்டியூட்கள் ஒவ்வொன்றாக முளைவிடத் தொடங்கின. பிரபாகரன் சார் அரசு பயிற்சி மையத்தில் இருந்து வெளியேறினார். தனியார் பயிற்சி மையங்கள் அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களை ஈர்க்க பல்வேறு உத்திகளைக் கையாண்டனர். ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த நபர்களை அரசு பயிற்சி மையத்துக்குள் வழிகாட்டிகளாக நுழைத்து அவர்கள் மூலம் தங்களது பயிற்சி மையத்திற்கு மாணவர்களை ஈர்த்தனர். இதுகுறித்து புகார் எழுப்பப்பட்டு வழிகாட்டிகள் (Mentors) நியமனம் செய்வது என்ற நடைமுறையை ரத்து செய்யப்பட்டது. பிறகு அரசு பயிற்சி மையத்தில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பயிற்றுனர்கள் வகுப்புகள் எடுக்க தொடங்கினர். இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தங்களது நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்கு அவர்கள் முனைந்தனர். ஒரு இலவச பயிற்சி நிறுவனம் டெல்லி நேர்முகத் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு உடைகள் தைத்து கொடுத்தல், டெல்லியில் அறைகள் எடுத்து தருதல், டெல்லி செல்வதற்கு விமான டிக்கெட் எடுத்து தருதல், போன்ற கவர்ச்சிகரமான சலுகைகளை தந்து தங்களது நிறுவனத்தின் பக்கம் ஈர்த்தது. இதுபோன்ற பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி அரசு பயிற்சி நிறுவனத்திலும், சுயமாக படித்துவந்த மாணவர்களையும் கோச்சிங் இன்ஸ்டியூட்கள் தங்கள் வசப்படுத்தினர். சில ஆண்டுகளில் கோச்சிங் இன்ஸ்டியூட் போகாமல் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற இயலாது என்ற நிலையை உருவாக்கினார். தொடக்கத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கு பல்வேறு சலுகைகளை தந்த பயிற்சி நிறுவனங்கள் பிறகு தங்களது வணிக நோக்கத்தை செயல்படுத்த தொடங்கின. சில ஆயிரங்களில் இருந்த பயிற்சி கட்டணங்களை 1 லட்சம் ரூபாய்க்கு மேல் உயர்த்தினர். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவுகள் வெளிவரும் பொழுது தங்களது பயிற்சி நிறுவனத்தில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர் என்பதை உயர்த்திக் கொள்வதற்காக அறமற்ற பல வழிகளை கையாள தொடங்கினர். தங்களது பயிற்சி மையத்தில் பயிற்சி பெறாத மாணவர்களின் பெயர்களை கூட வெற்றியாளர்கள் பட்டியலில் சேர்த்து விளம்பரம் செய்தனர். இவர்களின் யார் யார் உண்மையில் முதல்நிலைத் தேர்வுக்கும், முதன்மை தேர்வுக்கும் பயிற்சி பெற்றார்கள், யார் வெறும் நேர்முகத் தேர்வுக்கு மட்டும் பயிற்சி பெற்றார்கள், யார் விமான டிக்கெட் மட்டும் பெற்றுக் கொண்டு சென்றார்கள், யார் உடை மட்டும் தைத்துக் கொண்டார்கள் என்ற விவரம் யாருக்கும் தெரியாது. இந்த தகவல்களில் எந்த ஒரு வெளிப்படைத்தன்மையும் இல்லை. ஒரே நபரின் பெயர் பல்வேறு இன்ஸ்டியூட்களின் தேர்ச்சி பட்டியலில் இருப்பதை ஒவ்வொரு ஆண்டும் பார்க்கலாம். நான் முதல் முறையாக வெற்றி பெற்ற பொழுது, நான் ஒருநாளும் பயிற்சிக்கு சென்றிராத 2 இன்ஸ்டியூட்கள் எனது பெயரை தங்களது வெற்றியாளர்கள் பட்டியலில் சேர்த்து இருந்தனர். பிறகு அவர்களை நான் தொடர்புகொண்டு பட்டியலில் இருந்து பெயரை நீக்கச் சொன்னேன். இவர்களின் நோக்கம் தங்களை இந்த கோச்சிங் இண்டஸ்ட்ரியில் நிலைநிறுத்திக் கொள்வது மட்டுமே. இதன் மூலம் பெரும் வணிகம் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ் கோச்சிங் இண்டஸ்ட்ரியில் புழங்கும் தொகை பல கோடிகள். பல ஆயிரம் பேர் சேரும் வகுப்புகளில் தற்பொழுது வீடியோ கான்பரன்சிங் வழி வகுப்புகள் எடுக்கிறார்கள். இந்த இன்ஸ்டியூட்களின் ஒட்டுமொத்த வெற்றி விகிதம் என்பது மிகக் குறைவாக இருக்கும். பலரின் ஆசைகளை தூண்டிவிட்டு அதில் குளிர்காயும் வேலையைத் தான் இந்த இன்ஸ்டியூட்கள் செய்து வருகின்றன. சிவில் சர்வீசஸ் கோச்சிங் மேற்கண்டவாறு சென்றுகொண்டிருக்க, டிஎன்பிஎஸ்சி கோச்சிங் என்ற அடுத்த வாய்ப்பு வந்தது. சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சிகளில் குறைந்தபட்ச உழைப்பாவது செலுத்தினால்தான் மாணவர்களை தக்கவைக்க முடியும். டிஎன்பிஎஸ்சி தேர்வு சற்று வித்தியாசமானது. டிஎன்பிஎஸ்சி தேர்வின் போக்கையே இன்ஸ்டியூட்டகள் தீர்மானிக்க தொடங்கின. கடந்த காலங்களில் கோச்சிங் இன்ஸ்டியூட்களில் என்னவிதமான மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றவோ அதேபோன்ற வினாக்கள்தான் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கேட்கப்பட்டன. கோச்சிங் இன்ஸ்டியூட்டில் என்ன விடைகளை எழுதுகிறார்களோ அதேபோன்ற விடைகளை எழுதுபவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றனர். இதெல்லாம் சாதாரணமாக பார்க்கும் ஒரு மாணவருக்கு ஏதோ இயல்பாக நடப்பதைப் போன்று தோன்றவில்லை. மாணவர்கள் அந்த குறிப்பிட்ட கோச்சிங் இன்ஸ்டியூடை மொய்க்கத் தொடங்கினார்கள். குரூப்-1 தேர்வுகளில் ஒரு குறிப்பிட்ட பயிற்சி நிறுவனத்தில் பயின்றவர்கள் மட்டுமே பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றனர். டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த சர்ச்சைகள் அப்பொழுது எழுவதும், அதுகுறித்து நீதிமன்ற வழக்குகள் தொடரப்படுவதும் இயல்பு. இதில் சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விசாரணைகள் கோச்சிங் இன்ஸ்டிடியூட்களின் கொடிய கரங்கள் எவ்வாறு சமமான, நேர்மையான போட்டியை தடுக்கின்றன என்ற கோணத்தில் நடைபெற்றதா என்று தெரியவில்லை. கோச்சிங் இண்டஸ்ட்ரி பல கோடி ரூபாய் புழங்கும் ஒரு பெரும் வணிகமாக மாறியுள்ளது. இவர்கள் செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்களைத் தருகின்றனர். தொலைக்காட்சிகளில் முதன்மை விளம்பரதாரர்களாக பங்கேற்கின்றனர். இந்த போட்டிகளில் நியாயமாக பயிற்சி வகுப்புகளை எடுக்கும் சில நேர்மையான நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகின்றன. இச்சூழ்நிலையில் நீட் கோச்சிங் என்ற மாபெரும் வணிகம், மருத்துவ படிப்புக்கு ஏங்கும் பல ஆயிரம் பிளஸ் 2 மாணவர்களை வைத்து சுழல்கிறது. இப்பொழுது மாணவர்கள் குறைந்தபட்சம் ஓராண்டும், அதிகபட்சம் மூன்று ஆண்டுகளும் கோச்சிங் எடுத்தால்தான் மருத்துவராக முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. புதிதாக வரவுள்ள நுழைவுத்தேர்வுகள் இந்த வணிகத்தை மென் மேலும் விரிவுபடுத்த போகின்றன. இந்த போட்டி வணிகச் சந்தை பல்வேறு தவறான தகவல்களுடன் முறையற்று இயங்குகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். சுதந்திரமான சந்தை, நியாயமான போட்டியைத் தரும் என்ற கருத்து உண்மையில்லை என்பது கோச்சிங் இண்டஸ்ட்ரியில் உறுதியாகியுள்ளது. நம் மாணவர்களின் எதிர்காலத்தை நியாயமற்ற இந்த வணிகச் சந்தையின் வசம் நாம் ஒப்படைப்பது மிகுந்த ஆபத்தானது. இதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். ஒருமுறை இந்த கோச்சிங் என்ற வணிக பூதத்தை திறந்து விட்டீர்கள் என்றால் அதனை மீண்டும் அடைப்பது சாத்தியமற்றது. நன்றி ElamBahavath K