பெண் போலிசை கத்தியால் தாக்கிய கணவன் கைது !

0 399

பெண் போலிசை கத்தியால் தாக்கிய கணவன் கைது !

 

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் குடும்பச் சண்டை காரணமாக பெண் போலீஸை கடுமையாகத் தாக்கியதுடன் அவரது உடலில் கத்தியால் கீறி காயமேற்படுத்திய அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

 

திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி. வயது 43. ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த இவருக்கு ஏற்கெனவே  திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். முதல்கணவருடன் வாழ்ந்ததில் இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

 

தற்போது ராஜேஸ்வரி ஒரத்தநாடு திரௌபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 41) என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.  இருவரும் கடந்த மூன்று மாதங்களாக திருச்சிற்றம்பலத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.

 

சட்டக்கல்லூரியில் படித்துள்ள செந்தில்குமார் படிப்பை முடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பட்டுக்கோட்டையில் ஒரு வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்துள்ளார்.

 

மனைவி ராஜேஸ்வரியின் நடத்தையில் செந்தில்குமார் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை, அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, ராஜேஸ்வரியை கடுமையாக தாக்கிய செந்தில் குமார் கத்தியால் அவரது உடலில் கீறியுள்ளார்.

 

இதில் காயமடைந்த ராஜேஸ்வரி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவரது புகாரின்பேரில் திருச்சிற்றம்பலம் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவுசெய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.