ஜாதி சொல்லி இளைஞரை தாக்கிய 5 பேர் !

0 210

ஊர் பேரை கேட்டு ஜாதி சொல்லி தாக்கிய 5 பேர் !

 

ஓரத்தநாடு அருகே இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஜாதிப்பெயரைச் சொல்லி திட்டி கடுமையாகத் தாக்கியதில் படுகாயமடைந்த அவர்  பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

திருவோணம் ஒன்றியம் அக்கரைவட்டம் கிழக்கு சூரியமூர்த்திபுரத்தைச் சேர்ந்தவர் அழகர். வயது 35. இவருக்கு சித்ரா என்ற மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தனது 15வது வயதிலிருந்தே கோவையில் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அங்கு சொந்தமாக சமோசா தயாரித்து விற்;பனை செய்து வருகிறார்.

 

கரோனா ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து, அழகர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான அக்கரைவட்டம் கிழக்கு கிராமத்திற்கு வந்து கடந்த 2 மாதங்களாக அங்கே தங்கியுள்ளார்.

 

இந்நிலையில், முன் தினம் (மே 20) மாலை அழகர் தனது மோட்டார் சைக்கிளில் வெட்டிக்காடு கிராமத்திற்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வெட்டிக்காடு உயர்நிலைப் பள்ளி அருகே வந்துகொண்டிருந்தபோது அங்கே குடிபோதையல் நின்றுகொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து விசாரித்துள்ளது.

“நான் குடியிருக்கும் ஏரியாவின் பெயரைச் சொன்னவுடன் அவர்கள் என்னுடைய ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியதுடன், இரும்புக் கம்பியால் என்னை கடுமையாகத் தாக்கினர்” என்கிறார் அழகர்.

 

இத்தாக்குதலில் படுகாயமடைந்த அழகர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

 

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், “அச்சமயத்தில் அழகரும் போதையில் இருந்துள்ளார். அங்கே நின்று கொண்டிருந்த 5 பேர் மீது உரசிச் சென்றுள்ளார். இதனால் அவர்களில் மோகன் என்பவர் அழகரின்  வாகனத்தை நிறுத்தச் சொல்லி சத்தம்போட்டுள்ளார். அழகரும் வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது, அவர்கள் குடிபோதையில் இருப்பதாகவும் எனவே அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுமாறும் அக்கும்பலைச் சேர்ந்த மற்றொருவர் அழகருக்கு சமிக்ஞை செய்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, அழகர் புறப்பட்டுச் சென்றபோது ஆத்திரமடைந்த மோகன் அவரை இன்னொரு மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து வழிமறித்து நிறுத்தியுள்ளார். பின்னர் அவரது ஏரியா பெயரைக் கேட்டதும் அக்கும்பல் அவரை தாக்கியுள்ளது,” என்கின்றனர்.

 

இச்சம்பவம் குறித்து திருவோணம் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.