2024-25 ஆம் ஆண்டிற்கான பெரியார் விருதுகள் ! அறிவிப்பை வெளியிட்ட பாரதிதாசன் பல்கலை ! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?
2024-2025 ஆம் ஆண்டிற்கான பெரியார் விருதுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தின் பெரியார் உயராய்வு மையம்.
கடந்த 2006-2007 ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியால், திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தில் பெரியார் உயராய்வு மையம் தொடங்கி வைக்கப்பட்டது. இயக்குநர் ஒருவரும் கல்வி சாரா அலுவலர் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டு, மையத்தின் பெயரில் 30 இலட்ச ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது.
பெரியாரின் சமூக சீர்திருத்த கருத்துகள் வெகுஜன மக்களிடையே கொண்டு செல்ல வேண்டுமென்ற நோக்கிலிருந்து, இந்த மையம் உருவாக்கப்பட்டது. ஆண்டு தோறும் செப்-17 ஆம் நாள் பெரியார் பிறந்த நாளை கொண்டாட வேண்டுமென்றும்; அந்நாளில், பெரியார் கொள்கைப்படி வாழ்ந்து அகவை முதிர்ந்த பெரியார் தொண்டருக்கு ரூ.1 இலட்சமும்; பெரியார் கருத்துக்களை மக்களிடம் பரப்புரை செய்து வருவோருக்கு ரூபாய் ஐம்பதாயிரமும்; பெரியார் கருத்துகளை தாங்கி வெளியான சிறந்த நூலுக்கு ரூபாய் ஐம்பதாயிரமும் வழங்கி கௌரவிக்கப்பட வேண்டுமென்றும் பெரியார் உயராய்வு மையத்தின் கடமைகளாக வரையறுக்கப்பட்டிருந்தன.
இதன்படி, கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கி 2020 ஆம் ஆண்டு வரையில் முறையாக, ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், 2020 – 2024 வரையிலான மூன்றாண்டு காலம் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்படாமலும் விருதுகள் வழங்கப்படாமலும் புறக்கணிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு விதிகளை காரணம் காட்டியிருந்தார், அப்போதைய துணை வேந்தர் செல்வம்.
மூன்றாண்டுகளாக நிறுத்தப்பட்ட விருதுகளை தொடர்ந்து வழங்க வேண்டுமென்ற கோரிக்கையுடன், கடந்த 2024 ஜூனில் பாரதிதாசன் பல்கலை கழகத்தின் மேனாள் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், மதிமுக மாநில இலக்கிய அணிச் செயலாளர் மிசா சாக்ரடீஸ் ஆகியோரின் முன்னெடுப்பில் பெரியாரிய மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து பெருந்திரள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்தே அறிவிப்பு வெளியானது, நீண்ட போராட்டத்திற்கு பிறகு, விடுபட்டுபோன மூன்று ஆண்டுகளுக்குமான விருதுகள் வழங்கப்பட்டன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?
இந்த பின்னணியில்தான், தற்போது 2024-2025 ஆம் ஆண்டிற்கான பெரியார் விருதுகளுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதன்படி, பெரியார் கொள்கைப்படி வாழ்ந்துவரும் அகவை முதிர்ந்த பெரியார் சிந்தனையாளர், ஒரு இலட்ச ரூபாய் பொற்கிழியுடன் கூடிய பெரியார் சிறப்பு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
தற்போது வரையில், பெரியார் கொள்கைப்படி வாழ்ந்தும் அவரது கருத்துக்களை பரப்பி சமூகப்பணியாற்றும் பெரியாரிய தொண்டர்கள், ரூபாய் ஐம்பதாயிரம் பொற்கிழியுடன் கூடிய பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
2024-2025 ஆம் ஆண்டில், பெரியாரின் கருத்துக்களை தாங்கி வெளியான நூலின் ஆசிரியர் ரூபாய் ஐம்பதாயிரம் பொற்கிழியுடன் கூடிய பெரியார் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?
விருதுக்கு தகுதியான பெரியாரிய தொண்டர்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது தகுதியான நபர்களை மற்றொருவர் பரிந்துரைத்தும் விண்ணப்பிக்கலாம். விருதுக்கு அவர் எந்த வகையில் தகுதியானவர் என்பது பற்றிய விவரக்குறிப்புடன் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.08.2025
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
முனைவர் அ.கோவிந்தரரஜன்,
இயக்குநர்
பெரியார் உயராய்வு மையம்,
பாரதிதாசன் பல்கலை கழகம்,
திருச்சி – 620 024.
இதுகுறித்து மேலதிக தகவல்கள் விளக்கங்களை பெற விரும்புவோர் அலுவலக நேரத்தில் 9940933534, 9445293534 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு தகவல்களை பெறலாம்.
— அங்குசம் செய்திப்பிரிவு.