5 ரூபாய்க்கு 3 டி – சர்ட் அதிரடி ஆஃபர் ! அலைமோதிய கூட்டம் ! விளம்பரம் படுத்தும் பாடு !
சாத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட ஆடையகத்தில் 5 ரூபாய்க்கு 3 டி-சர்ட் அதிரடி ஆஃபரில் தருவதாக அறிவித்ததையடுத்து, கடை முன்பாக இளைஞர்கள் பலரும் குவிந்து பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் போலீசாரும் குவிந்தனர். திடீரென ஆஃபரை ரத்து செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் (ஸ்டைலிஷ் தமிழன் ) கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்ட சிறுவர் இளைஞர்களுக்கான தனியார் ஆடையகம் இன்று திறக்கப்பட்டது. இக்கடையின் புதிய திறப்பு விழாவையொட்டி முதலில் வரும் 1000 நபர்களுக்கு ஐந்து ரூபாய்க்கு 3 டி-சர்ட் வழங்கப்படும் என அதிரடி ஆஃபர் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில் மே-12 காலை முதலே புதிதாக திறக்கப்படும் கடையின் முன்பாக ஏராளமான சிறுவர்கள்- இளைஞர்கள் திரண்டதால் மதுரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடைக்குள் ஒரே நேரத்தில் ஏராளமான சிறுவர்கள் இளைஞர்கள் செல்ல முயன்றதால் கடை நிர்வாகத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த சாத்தூர் நகர் போலீசார் கடையின் முன்பாக திரண்டு இருந்த ஏராளமான சிறுவர்கள்-இளைஞர்களை அங்கிருந்து அப்புறபடுத்தினார்.
மேலும், ஒரே நேரத்தில் ஏராளமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டதால் 5 ரூபாய்க்கு மூன்று டி-சர்ட் என்ற ஆஃபரை கடை நிர்வாகம் நிறுத்தி வைத்தனர். டோக்கன் வாங்கிய 300 பேருக்கு டி-சர்ட் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடை நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால் காலை முதல் கடை முன்பு காத்திருந்த இளைஞர்கள்-சிறுவர்கள் பெரும் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பிச் சென்றனர்.
புதிய கடைத்திறப்பு விழாவை முன்னிட்டு கடையின் விளம்பரத்திற்காக செய்யப்படும் இதுபோன்ற அறிவிப்புகளால், தேவையற்ற கூட்ட நெரிசலும் மக்கள் மத்தியில் பதற்றத்தையும் ஏற்படுத்துவதாகவும் அமைந்து விடுகிறது. தேவையற்ற பதற்றமும் கூட்ட நெரிசலில் மக்கள் சிக்கி இன்னல்களை சந்திக்கும் நிலையும் சில நேரங்களில் அசம்பாவிதமும் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என எச்சரிக்கிறார்கள்.
சம்பந்தபட்ட காவல் நிலையத்தில் முன் அனுமதி பெற்று இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
— மாரீஸ்வரன்.