சக்கைப்போடு போடும் துண்டு சீட்டு சூதாட்டம் ! ஆடியோ லீக் ! சர்ச்சையில் மாஜி ! கப்சிப் போலீஸ் !
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் 3-ஆம் நம்பர் லாட்டரி வியாபாரி ஒருவர் தனது ஏஜெண்ட் ஒருவருடன் பேசியதாக வெளியாகியிருக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியிருக்கிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் தொடர்ச்சியாக இதுபோன்று 3-ஆம் நம்பரி லாட்டரி விற்பணை பரவலாக நடைபெற்று வருவதை, ஏற்கெனவே “போச்சம்பள்ளியை கலக்கும் 3-ஆம் நம்பர் லாட்டரி !” அங்குசம் நேரடி விசிட்!” என்ற தலைப்பில் அங்குசம் இணையம் மற்றும் அச்சு இதழில் அம்பலப்படுத்தியிருந்தோம்.
இந்த கள்ள லாட்டரி பிசினஸில் ஈடுபடும் பெரும் புள்ளிகளை தப்பவிட்டு, வயிற்றுப் பிழைப்புக்காக துண்டு சீட்டு எழுதிக் கொடுக்கும் நபர்கள் மட்டுமே கைது செய்யப்படுகிறார்கள் என்பதையும்; அந்தக் கும்பலும் ஆதரவற்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் போன்றோர்களைத்தான் இதுபோன்ற வேலைகளுக்கு ஈடுபடுத்தி வருகிறார்கள் என்பதையும் பதிவு செய்திருந்தோம்.
இந்த பின்னணியில்தான், அந்த அதிரடி ஆடியோ வெளியாகியிருக்கிறது. கள்ள லாட்டரி நெட்வொர்க் கும்பலை சேர்ந்த பாரதி என்பவர், தன்னிடம் ஏஜெண்டாக பணிபுரியும் “பன்னு என்ற சீனிவாசனிடம்” பேசுவதாக இருக்கிறது, அந்த ஆடியோ.
“ஃபோனையும் பேமெண்டையும் கொடுத்துட்டு போகவேண்டியதுதானே? உன்னை யாரு Unsold போட சொன்னது… ” என்பதாக நீளும் அந்த உரையாடல் அச்சில் ஏற்ற முடியாத அசிங்கமான வார்த்தைகளை கொண்டதாக இருக்கிறது.
”பாலு, வெங்கடேசன்கிட்ட சொன்னேன். அவர்கள்தான் போனை வாங்கிக்கொள்ளவில்லை. நான் இப்போது வெளியூரில் இருக்கிறேன். வந்து போனை கொடுக்கிறேன். பணத்தை கொடுக்க அவகாசம் வேண்டும்..” என்பதாக பன்னு சீனிவாசன் கோரிக்கை விடுக்கிறார். அதற்கு அதெல்லாம் அவகாசம் கொடுக்க முடியாது. பாலுகிட்ட போனை கொடுத்திட்டு போக வேண்டியதுதானே? இல்லை வீட்டில் கொடுத்திட்டு போக வேண்டியதுதானே? இன்னும் ஒரு மணி நேரத்தில் போனும் பணமும் என் கைக்கு வந்து சேரவேண்டும். இல்லையென்றால், கண்டம் துண்டமாக வெட்டிவிடுவேன்…” என்பதாக ஆபாசமும் கொலைமிரட்டலுமாக நீள்கிறது, அந்த உரையாடல்.
ஏரியாவுக்கு ஒரு ஆட்களை நியமித்து அவர்கள் கையில் செல்போனையும் கொடுத்து, 3-ஆம் நெம்பர் லாட்டரி விற்பணையில் ஈடுபடுவதும் பின்னர் அவர்களையெல்லாம் ஒருங்கிணைப்பதற்கு சில ஆட்களை நியமித்துக் கொண்டு கணக்கு வழக்குகளை பார்ப்பதுமாக இந்த நெட்ஒர்க் செயல்பட்டு வருகிறது என்பது அந்த உரையாடல் பதிவிலிருந்து உறுதியாகிறது.
இந்த விவகாரம் குறித்து வழக்கறிஞர் பாலசுப்பிரமணியத்திடம் பேசியபோது, “ தர்மபுரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட லாட்டரிகள் தங்குத் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், கேரளா லாட்டரி, என்ற பெயர்களில் விற்கப்படும் லாட்டரி சீட்டுகள் ஒருவகை என்றால், துண்டுச் சீட்டுகளில் வெறுமனே நம்பர்களை மட்டும் எழுதி விற்கப்படும் “சன்’ மற்றும் ‘டியர் லாட்டரி’தான் பாரதி போன்ற கொள்ளைக் கும்பலின் மிகப்பெரிய நெட்வொர்க்காக இயங்கிவருகிறது.
தர்மபுரி மாவட்டம் முழுக்க சுமார் 300-க்கும் அதிகமான நபர்களைக் கொண்ட நெட்வொர்க் ஒன்று இந்த நம்பர் லாட்டரியின் பின்னணியில் இயங்கிவருகிறது. அதில் தர்மபுரி , காரிமங்கலம், பெண்ணாகரம் , அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு என மாவட்டம் முழுவதும் இந்த நெட்வொர்க்கைச் சேர்ந்த ஏஜென்ட்டுகள் நம்பர் லாட்டரிகளை விற்பனை செய்துவருகின்றனர். இதற்காக, காலை முதல் இரவு 10 மணி வரை ஏஜென்ட்டுகள் துண்டுச்சீட்டில் நம்பர் எழுதிக் கொடுக்கும் வேளையில் பிஸியாக இருப்பார்கள். துண்டுச்சீட்டில் 1 முதல் 4 டிஜிட்டிலான நம்பர்களை எழுதுகிறார்கள். உதாரணமாக, ‘8’ என்ற ஒரு எண் மட்டும் எழுதப்பட்ட துண்டுச் சீட்டானது 30 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதுவே ‘85’ என இரண்டு டிஜிட்டில் எழுதப்பட்டால், அதனின் பெயர் AB என்று குறிப்பிடுவார்கள். மூன்று எண்களை ABC என பிரிக்கிறார்கள். கேரளா லாட்டரி, ஆன்லைன் ரிசல்ட் இணையதளங்களிலும் அங்குள்ள பத்திரிகைகளிலும் வெளியாகின்றன. துண்டுச் சீட்டில் நம்பர் எழுதி கொடுக்கப்படும் “டியர் மற்றும் ‘ சன்’ லாட்டரி” சூதாட்ட ரிசல்ட்டானது முறையே மதியம் 1 மணி, மாலை 6 மணி, இரவு 8 மணி என்ற இடைவெளியில் ஆன்லைனில் வெளியாவதாக ஏஜென்ட்டுகளே வாங்கி சென்றவர்களின் வாட்சப் எண்ணிற்கு தகவல் சொல்லிக் கொள்கின்றனர். மற்றபடி இதற்கென அதிகாரப்பூர்வ இணையதளமோ, பத்திரிகையோ கிடையாது” என்கிறார் .
இந்த நெட்ஒர்க் எப்படித்தான் இயங்குகிறது என்பதையறிய நாமும் நகரை வலம் வந்தோம். அய்யர் தெரு , ராமசாமி கோவில் , பாலக்கோடு ரோடு , சந்தைப்பேட்டை. அக்ரஹார தெரு , பஸ்நிலையம் , போன்ற பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட லாட்டரி விற்கும் ஏஜெண்ட்கள் சைலண்ட்டாக இயங்கி வருகின்றனர். குறிப்பாக ராமசாமி கோவில் பகுதியில் உள்ள ஆலமரத்தடி பகுதியில் சுமார் 10 -க்கும் மேற்பட்ட லாட்டரி ஏஜெண்டுகள் கடையை விரித்துள்ளனர் . பெட்டி கடைகளிலும், சிறிய சந்துகளிலும் சிறு சிறு கூட்டங்களுக்கு நடுவே நான்கைந்து பேர் அமர்ந்து சீட்டு எழுதிக் கொண்டிருந்தனர். இடையிடையே, ‘முப்பத்திரண்டு, ‘நாலு ‘ என துண்டுச்சீட்டுகளைப் பார்த்து, நம்பர்களைச் சொல்லி பேசிக் கொண்டிருந்தவர்கள் நம்மைப் பார்த்தும் அமைதியானார்கள்.
சீட்டு எழுதிக் கொண்டிருந்தவரை நெருங்கி, ‘ரெண்டு நம்பர் சீட்டு கொடுங்க’ என்றோம். அவரின் அருகே இருந்தவர் ‘யார் மூலமா வந்தீங்க?’ என்றார் . ‘நாங்க அருகில் உள்ள இன்சூரன்ஸ் அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம்’ எனச் சொல்லி சமாளித்துக் கொண்டிருக்கும்போதே சீட்டு எழுதியவரும், அவரைச் சுற்றியிருந்தவர்களும் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர்.
யார் இந்த பாரதி ?
காரிமங்கலம் 6-வார்டு அதிமுக கவுன்சிலர் நாகம்மாள் மகன் தான் இந்த பாரதி. சட்டம் படித்துவிட்டு ஏஜெண்டுகள் நியமித்து சட்டவிரோத லாட்டரி விற்பது, சூதாட்ட கிளப் நடத்துவது , ப்ரியா தாபா ஓட்டல் என்ற பெயரில் கள்ள மதுபானங்கள் விற்பது, ஆள் வைத்து ரேசன் அரிசி கடத்துவது என தடைசெய்யப்பட்ட தொழில் கொடிகட்டிப் பறப்பதாகவும் இவருக்கு அதிமுக மாஜி கே.பி. அன்பழகன் ஆசீர்வாதம் இருப்பதாகவும் ஏரியாவில் கிசுகிசுக்கிறார்கள். ஏற்கெனவே, கிளப் சூதாட்டம் குறித்து செய்தி வெளியிட்ட தனியார் தொலைகாட்சி நிருபர் ஒருவரை காரில் துரத்திய சர்ச்சையிலும் சிக்கியவர் என்கிறார்கள்.
பாரதியின் இரண்டாம் நெம்பர் பிசினஸ்க்கு, கவுதம், வசந்த், பாரதி, சுரேஷ் போன்றவவர்கள் தொழில் கூட்டாளிகள் என்றும்; கொள்ளுப்பட்டி செல்வராஜ் தான் மேனேஜர் என்றும் சொல்கிறார்கள். அணிஸ் என்பவரின் அரிசி கடத்தலுக்கும், ஃபேக் ஆப் உருவாக்கி ஐ.பி.எல்.கிரிக்கெட் சூதாட்டத்தையும் வசந்த் என்பவர் கவனித்துக் கொள்வதாகவும்; தொழில்போட்டியாளர்களை சமாளிக்க பி.சி.ஆர். வழக்கு தொடுப்பதற்காகவே பாலு என்பவரை பயன்படுத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். பாரதியின் மனைவி சிவில் சப்ளைஸ் மண்டல அலுவலராக பணியாற்றி வருகிறார் என்பதும் அவரது கூடுதல் பலம் என்கிறார்கள்.
துண்டு சீட்டு சூதாட்ட கும்பல் தொடர்பில் மாஜி ?
பாரதிக்கு பக்க பலமாக இருப்பது மாஜி மந்திரி அன்பழகன்தான் என்கிறார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் இரு கோஷ்டிகளுக்கு இடையிலான சண்டையில் அன்பழகன் தாக்கப்பட்டார். அன்று முதலாகவே, பாரதியை தன் பாதுகாப்புக்காகவே வளர்த்து அரவணைத்து வருவதாகவும் சொல்கிறார்கள். இந்த நெருக்கத்தை பயன்படுத்தியே போலீசு வழக்குகளிலிருந்து எளிதில் தப்பிவிடுவதாகவும் சொல்கிறார்கள்.
கடந்த ஆண்டு காரிமங்கலம் பேரூராட்சியில் செயல் அலுவலரை தாக்கிய விவகாரம்; போலி ஆப் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய விவகாரம் என அவர் போலீசில் சிக்கியும் கைது நடவடிக்கைக்கு ஆளாகாமல் மாஜிபார்த்துக் கொண்டார் என்கிறார்கள்.
பாரதி அந்த ஆடியோவில் ஆபாசமாக பேசியிருப்பது ஒரு ரகம் எனில், அந்த உரையாடலில் கவனிக்கத்தக்கது அவரது மிரட்டலான பேச்சு. இந்த ஆடியோ வெளியான விவகாரத்திற்காகவே, “பன்னு (எ) சீனிவாசனை” போட்டுத்தள்ளவும் பாரதி தயங்கமாட்டார் என்கிறார்கள். இதன் காரணமாகவே, அவங்களுக்குள்ள என்னமோ பன்னிக்கட்டும்னு போலீசாரும் இந்த விவகாரத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள். இந்த விவகாரம் மாஜியின் கவனம் வரை சென்றிருப்பதாகவும்; அவரும் சட்டமன்றக்கூட்டத்தொடர் முடிந்து பஞ்சாயத்து பேசிக்கொள்ளலாம் என்று சமாதானம் செய்து அனுப்பியதாகவும் சொல்கிறார்கள்.
அதிமுக மாஜி மந்திரி கேபி அன்பழகனை சுற்றி ஓயாத சர்ச்சைகள் !
ஏற்கெனவே, சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவர் கே.பி. அன்பழகன். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்த நிலையில்தான், இந்த வழக்கில்தொடர்புடைய அவரது மருமகள் பூர்ணிமா மற்றும் அதிமுகவை சேர்ந்த மோழையனூர் மாஜி பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய முறையில் இறந்துபோனார்கள். அப்போதும் கே.பி. அன்பழகன் மீதே சந்தேகப்பார்வை விழுந்தது. இந்நிலையில், தனது சொந்தக் கட்சிக் காரர்களின் எதிர்ப்பையும் கே.பி. அன்பழகன் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மொரப்பூர் சிங்காரம், முல்லைவேந்தன், பாப்பிரெட்டிபட்டி கோவிந்தசாமி ஆகியோர் அவரை அடிக்க பாய்ந்த சம்பவங்களும் நடந்தேறியது.
இந்த பின்புலத்தில்தான், பாரதியின் கை ஓங்கி வருவதாகவும் அவருக்கு மாஜி ஆதரவுக்கரம் நீட்டி வருவதாகவும் சொல்கிறார்கள். பாரதிக்கு தொழில் போட்டியாக காரிமங்கலத்தில் திமுக கொடியோடு பார்சூன் காரில் வலம் வந்த வசந்த்-தை சொந்தக் கட்சியினர் கைவிட்டதால், தொழில் எதிரியான பாரதியிடமே சரணடைந்து அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமானதாகவும் சொல்கிறார்கள். ஐபிஎல் சூதாட்டத்தில் 20 கோடி ரூபாய் வசந்த் கணக்கில் கைமாறியது குறித்து போலீசார் கொத்தாக தூக்கி விசாரித்ததாகவும்; மாஜியின் ஆதரவில் மீட்டு வந்ததாகவும் ஒரு தகவலையும் சொல்கிறார்கள்.
என்ன சொல்கிறார் பாரதி?
”அந்த பையன் என்னுடைய கார் ட்ரைவர்ங்க. பணம் கொடுக்கல், வாங்கல் சம்மந்தமாக பேசிய ஆடியோங்க” என்றவரிடம் “sold out ” என ஒரு கோட் வேர்டு பயன்படுத்தி உள்ளீர்களே? என கேட்டபோது, “அப்படியெல்லாம் நான் பேசவில்லை. எதிரணியினர் பொய்யாக கூறி வருகின்றனர். நாளைக்கு அந்த பையனே பேச சொல்கிறேன் ” என்றவர், நம்மை பற்றிய விசாரணையில் இறங்கினார்.
அடுத்த, 5 நிமிடத்தில் ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், ” நமது எம்ஜிஆர் , நமது அம்மா மற்றும் தராசு , ஷ்யாம் தராசு, ராத்ரி ரவுண்ட்ஸ் புலன் விசாரணை என ஏகப்பட்ட பெயர்களை சொல்லிவிட்டு, இதெல்லாம் பத்திரிகைகள் என்றும் அவற்றில் சேலம் நிருபராக இருப்பதாகவும் , அவசியம் சேலத்தில் என்னை சந்திக்கவும் என்று மிரட்டும் தோணியில் பேசியவரிடம் , உங்களை பேச சொன்னவரின் செய்தியோடு நீங்கள் பேசியதும் செய்தியாக வெளியாகும்” என்றதும் அழைப்பு கட்டானது .
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த விவகாரம் தொடர்பாக தர்மபுரி எஸ்பி மகேஸ்வரனிடம் பேசினோம். “நீங்கள் குறிப்பிடும், ஆடியோ விவகாரம் கவனத்திற்கு, வரவில்லை. துண்டு சீட்டு சூதாட்ட கும்பல் குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து சர்ச்சையில், சிக்கிவரும் 3-ம் நெம்பர் லாட்டரி விற்பனை மற்றும் அதன் பின்னணியில் இயங்கும் கும்பலை கண்டறிந்து பாரபட்சமற்ற நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
– மணிகண்டன்.