90’ஸ் பள்ளி நாட்களும் சமோசா கணக்கும் – அனுபவங்கள் ஆயிரம்(13)
90’ஸ் காலத்து பள்ளி வாழ்க்கை என்னோடது. எங்கள் ஸ்கூல் பெயர் சொன்னாலே நெஞ்சை வருடும் நினைவுகள் வந்து மிதக்க ஆரம்பிக்கும். அந்த காலத்தில் வாழ்க்கை சின்ன சின்ன விஷயங்களாலே இனிமை நிரம்பியது. பேனாவின் மேல் காப்பை கடித்து வைத்திருப்பதும், பென்சிலை “நட்டா” மாதிரி செம்மையாகச் செதுக்குவதும், “பென்சில் பாக்ஸ்” இல் ஸ்டிக்கர் ஒட்டி வைப்பதும், கியோமெட்ரி பாக்ஸ், ரப்பரில் பென்சில் குத்தி ஓட்டை போடுவதும், ஹீரோ பேனாவில் மை இல்லையென்றால் தோழி பேனாவில் இருந்து சொட்டு சொட்டாக தன் பேனாவிற்கு மாற்றுவதும், பள்ளி முடிந்ததும் மைதானத்தில் துள்ளி ஓடுவதும். எல்லாமே அந்தக் காலத்து மகிழ்ச்சியின் வடிவம்.
கூடவே சேர்ந்து ஒரு முக்கியமான இடம் பிடித்தது எங்கள் பள்ளி கேன்டீன். ஒரு அக்கா அதை நடத்தி வந்தார். அங்கே கிடைக்கும் சமோசா, பிஸ்கட், சாக்லேட், கிரேப் ஐஸ், பால் ஐஸ், மாங்கோ ஐஸ் அவை எல்லாம் நமக்கு அப்போ சொர்க்க சுவை! ஒரு சமோசா ₹2, ஒரு ஐஸ் ₹5 மட்டுமே. தோழிகளுடன் அரட்டையடித்துக்கொண்டே சாப்பிடுவது அலாதியான அனுபவம்… இப்போது கிடக்கும் பிச்சா, பர்கர், பாஸ்தா, சாண்ட்விச் எல்லாம் இதன் சுவைக்கு ஈடாகாது.
ஒரு நாள் நாங்கள் சில நண்பர்கள் சேர்ந்து கேன்டீனுக்குப் போய் சமோசா மற்றும் கிரேப் ஐஸ் வாங்கி அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தோம். அப்போது ஒரு குட்டி பெண் குழந்தை வந்தாள் ரெண்டாவது அல்லது மூன்றாவது வகுப்பு படிக்கும் வயது. அவளுக்கு காசு கணக்கு தெரியாது போல. அவள் ஒரு சமோசாவும், ஒரு சாக்லேட்டும் வாங்கி பத்து ரூபாய் கொடுத்தாள். ஆனால் அந்த அக்கா மூணு ரூபாய்தான் திருப்பிக் கொடுத்தார்.
அதைப் பார்த்த நாங்கள் சில நொடிகள் மவுனமாய் நின்றோம். உள்ளுக்குள் ஒரு சின்ன பொண்ணுகிட்ட இப்படிச் சுலபமா ஏமாற்றுகிறாரே இந்த அக்கா.. என்ற கோபம். ஆனால் ஆசிரியரிடம் சொல்லினால் பிரச்சனை நமக்கே வரும் என்பதால் அமைதியாக இருந்தோம். அந்த மாலை முழுவதும் அந்த நிகழ்ச்சி மனசை விட்டு போகவில்லை.
மறுநாள் நாங்கள் ஒரு பிளான் போட்டோம். அவங்க செய்ததுக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுக்கணும் என்ற முடிவு. பதினைந்து பேராக கேன்டீனுக்குச் சென்றோம். சமோசாவும், ஐஸும், சாக்லேட்டும் நிறைய ஆர்டர் செய்தோம். சமோசா மட்டும் எப்போவும் தளத்தில் மேல் இருந்ததால் யாரும் எடுத்து சாப்பிடலாம். கூட்டம் அதிகமா இருந்தது; அவங்க எவ்வளவு எடுத்தோம் என்று கணக்கே வைக்க முடியவில்லை. நாங்கள் குறைவாகக் கணக்கைச் சொன்னோம்.
அந்த நொடியிலே நமக்குள் ஒரு சிறிய வெற்றி உணர்ச்சி . அவங்க ஏமாத்தின குழந்தைக்கு நாம நீதி வாங்கி கொடுத்தோம் என்ற மன நிறைவு. மகிழ்ச்சியாக சென்றோம்.
ஆனால் சில நிமிஷங்கள் கழித்து மனசுக்குள் ஒரு சின்ன குரல் . அவங்க செய்ததைப் போல நாமும் தவறு செய்தோமா…அப்போ அவர்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்யாசம்..
அந்த எண்ணம் பல நாட்கள் நமக்குள் இருந்தது. பிறகு எப்போதெல்லாம் கேன்டீனுக்கு போனாலும் எடுத்து சாப்பிட்டதற்கான கணக்கை நேர்மையாகச் சொல்ல ஆரம்பித்தோம்.
அந்த நாள் ஒரு சிறு சம்பவம்தான், ஆனாலும் அந்த அனுபவம் எங்களுக்கு ஒரு பெரிய பாடம் கற்றுக் கொடுத்தது .
“நீதி காப்பதற்காக அநீதியைச் செய்யக் கூடாது. ஆனால் அநீதியைப் பார்த்தும் அமைதியாக இருப்பது அதைவிடப் பெரிய தவறு.”
— மதுமிதா








Comments are closed, but trackbacks and pingbacks are open.