ஒரே நாளில் இரு அரசு அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது !
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் ஒரே நாளில் இரண்டு அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பூர்வீக சொத்திற்கான பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக தலையாரி கணேசனை அணுகியுள்ளார்.
அப்போது, பணியை செய்து தர ரூ.3,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் ஆலோசனையின்படி கிராம நிர்வாக அலுவலகத்தில் ரூ.3,000 வழங்கியபோது, மறைந்திருந்த போலீசார் தலையாரி கணேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அதேபோல், திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் எஸ்.ஐ. சத்யமூர்த்தியிடம், காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு செல்வேந்திரன் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நடவடிக்கை எடுக்க ரூ.10,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக ரூ.5,000 பெற்ற நிலையில், தனியார் ஹோட்டலில் மீதமுள்ள ரூ.5,000 பெற்றபோது. மறைந்திருந்த சிவகங்கை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சத்யமூர்த்தியை கைது செய்தனர்.
ஒரே நாளில் பட்டா பெயர் மாற்றம் மற்றும் காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்கும் வழக்கில் லஞ்சம் பெற்றதாக இரண்டு அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
— நிகழன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.