அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்த வித்தை !
அப்பாவிடம் நான் கற்றது பல .
போன வாரம் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது நல்ல பசி இரண்டு இட்லி சாப்பிடலாம் என்று பெசன்ட் நகர் ரத்னா கபே வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன்.
அண்ணா ஒரு பிளேட் இட்லி கொடுங்க என்றவனிடம் 10 நிமிஷம் வெயிட் பண்ணுங்க சூடா தரேன் என்றார். சரி அது வரை மற்றவர் வாயை பார்த்துக்கொண்டா இருக்க முடியும் , 50 கிராம் ரச பாரி கொண்டு வரச்சொன்னேன். அது மினி சைஸ் ரசகுல்லா போல இருக்கும். ஆனால் வேறு சுவை. இட்லி வரும் வரை ஒவ்வொன்றாக திங்கலாம்.
உடனே வந்தது , ஒவ்வொன்றாக தின்று கொண்டே இருக்கும் போது என் முன் அமர்ந்த ஒருவர் இட்லி சொன்னார். அவருக்கும் எனக்கும் ஆவி பறக்க ஐந்து நிமிடத்தில் இட்லி வந்தது. இட்லி மீது சாம்பரை கொட்ட வந்தவனை தடுத்து நிறுத்தி ஒரு கப்பில் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி கொண்டவர், தட்டில் இருந்த இட்லியை ஸ்பூனால் சிறு துண்டுகளாக வெட்டி அதை கப்பில் இருந்த சாம்பாரில் பட்டும் படாமலும் தோய்த்துத் தின்றார்.
பார்த்துக்கொண்டிருந்த எனக்கு என் அப்பா நினைவு வந்தது. திருவல்லிக்கேணியில் என்னை முதல் முதலாக ரத்னா கபே கூட்டிச் சென்றவர் அவர்தான். இட்லி வந்தவுடன் பறக்காவெட்டி போல் பாய்ந்து அதை உடைத்து திங்கச் சென்ற என்னை நிறுத்தி, அப்படி சாப்பிடக்கூடாது டா . என்னைப் பார் என்று இரண்டு ஸ்பூன்களால் தட்டில் ஒட்டிக்கொண்டிருந்த இட்லியை ஒன்றின் மீது ஒன்று படாத வாறு தனியாகப் பிரித்து ,பின் அதன் மீது மக்கில் கொண்டுவரப்படும் சாம்பரை அதன் மீது ஊத்தச் சொல்லி , இட்லி சாம்பரில் மூழ்கிய பிறகு அதன் மேல் நெய் ஊற்றச் சொல்லி பின் , இரண்டு ஸ்பூன்களால் மூழ்கி இருக்கும் இட்லியை சிறிய துண்டுகளாக்கி, மொத்த சாம்பாரையும் அதில் அசால்ட்டாக ஊற வைத்து அதை ஸ்பூனால் தின்று காண்பித்தார். பிரசன்னமாக இருந்தது அவர் முகம்.
ஒரு தேவ ரகசியத்தை எனக்கு எடுத்து உரைத்தது போல் அவர் முகத்தில் ஒரு ஆனந்தம். நானும் அதே போல் இட்லியை தின்றேன். ஆஹா என்ன சுவை !!!அன்றிலிருந்து இன்று வரை ரத்னா கபேயில் மட்டும் இப்படித் தான் உண்பேன். 30 வருடங்களுக்கு முன் நான் பார்த்த பலரும் இப்படித்தான் சாப்பிடுவார்கள். அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்தது பரசுராமர் கர்ணனுக்கு சொல்லி கொடுத்த வித்தையை விட உயர்வானதாக நான் கருதுகிறேன். ஏனென்றால் . அந்த வித்தை கர்ணனுக்குப் பயன்படவில்லை . ஆனால் அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்த வித்தை இன்றும் எனக்கு பயன்படுகிறது.
— ராம்ஜி நரசிம்மன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.