பெருமைக்காக அரசியல் பதவி எனது இயல்பு அல்ல ; பிடிஆர் விளக்கம்!
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுகவின் ஐடி செயலாளராக உள்ளார். திமுகவின் ஐடிவிங் வளர்ச்சிக்கு பழனிவேல் தியாகராஜன் முக்கிய காரணம் என்று ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டது, அந்தப் பேச்சு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வரையிலுமே எதிரொலித்தது. ஆனால் பழனிவேல் தியாகராஜன் அமைச்சரான பிறகு துறை ரீதியான அதிரடி நடவடிக்கைகள் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களையும் பலார் பலாரென்று முன்வைக்கத் தொடங்கினர். இது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமூக வலைதளங்களில் சர்ச்சையான கருத்துக்களையும் வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது இதனால் அவர் மீது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் பழனிவேல் தியாகராஜனின் சில கருத்துக்கள் திமுக தலைமை இடத்திலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஐடி விங் பொறுப்பின் முக்கிய பதவி டிஆர்பி ராஜாவிற்கு வழங்கப்படவுள்ளதாக பேச்சுக்கள் எழுந்தது. இந்த நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ஐடி விங் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
தற்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொறுப்பிலிருந்து ஏன் ராஜினாமா செய்தேன் என்று பதிலளித்துள்ளார். அமைச்சர் பொறுப்புடன் கட்சி பொறுப்பையும் என்னால் கவனிக்க முடியவில்லை, இரண்டு பொருட்களையும் ஒரே நேரத்தில் கவனிப்பது சிரமமாக இருக்கிறது. இதனால் கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக முடிவு செய்து இருந்தேன். ஒரு பணியை முழு அர்ப்பணிப்போடு செய்தால் வெற்றி பெற முடியும். அமைச்சர் பதவியில் இருந்துகொண்டே கட்சி பதிவியிலும் அர்ப்பணிப்போடு இருக்க முடியுமா என்று தெரியவில்லை, என்னால் பெருமைக்காக ஒரு பதவியில் இருக்க முடியாது. மேலும் பெருமைக்காக பதவியில் ஒட்டிக் கொள்வது எனது அரசியல் இயல்பு அல்ல, இதனால் கட்சியின் ஐடி விங் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளேன் என்று பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.