தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிய தலைவர் யார்? ரேஸ் ரிப்போர்ட்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை கைப்பற்ற மல்லுக்கட்டும் காங்கிரஸ் பிரபலங்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி கடந்த 3 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் மேலிட வட்டாரத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.
அதேநேரம் கே.எஸ்.அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு 9 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற காரணமாக இருந்து இருக்கிறார். மேலும் சட்டமன்ற தேர்தலிலும் 18 சட்டமன்ற உறுப்பினர்களை காங்கிரஸ் பெற்று இருக்கிறது. காங்கிரஸ் வளர்ச்சியிலும் கே எஸ் அழகிரி முக்கிய பங்காற்றியிருக்கிறார் என்பதால் காங்கிரஸ் மேலிடத்திடம் அழகிரிக்கு நல்ல பெயர் இருக்கிறது. இதன் காரணமாக மீண்டும் கே எஸ் அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வருவார் என்று கூறப்பட்டது.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநாவுக்கரசரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கொண்டு வரவேண்டும் என்று ராகுல்காந்தி சில நிர்வாகிகள் மத்தியில் பேசியதாக கருத்தும் உள்ளது. இதனால் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருநாவுக்கரசு மீண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ரேஸில் முண்டி அடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வர தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார். அதேநேரம் தற்போது அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரமும் மல்லு கட்டி வருகிறார்.
போட்டியில் இவர்கள் மட்டும் தான் இருக்கிறார்களா என்று பார்த்தால், தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளராக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தமிழ்நாடு தலைவர் பதவிக்காக முயற்சி எடுத்து வருகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏக்களின் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகையும் தலைவருக்கான போட்டியில் தன்னுடைய பெயரை சேர்த்து இருக்கிறாராம். இப்படி பலருடைய முயற்சிகளுக்கு மத்தியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியின் பெயர் தலைவருக்கான போட்டியில் முன் வரிசையில் உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதிலும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதால் காங்கிரஸ் மேலிடத் தலைமையிடம் ஜோதிமணிக்கு நல்ல பெயர் உள்ளது.
மேலும் தீவிர காங்கிரஸ் கொள்கையும், கடுமையான உழைப்பும், இளம்வயதை சேர்ந்தவர் என்பதும் ஜோதிமணிக்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக இருக்கிறது.
இப்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை கைப்பற்ற போட்டிகள் பல இருந்தாலும்,காங்கிரஸ் தலைவர் பதவி என்பது முள் கிரீடம் போன்றது. கடுமையான பணிச்சுமை, உள்கட்சி பூசல், கட்சி பிரச்சனை, நிர்வாகிகளின் ஈகோ என்று வரிசையாக உள்ள சிக்கலை சமாளிக்கவே நேரம் போதாது. இதில் கட்சியை வளர்ப்பது என்பது பெரிய விஷயம், இந்த முள் கிரீடப் பதவியை ஆரம்பத்தில் விரும்பும் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், பதவி கிடைத்த உடன் எந்த கோஷ்டியை எப்படி சமாளிப்பது என்று தெரியாமலேயே தங்கள் பெரும்பாலான சக்தியை செலவு செய்கின்றனர், இதனால் கட்சி வளர்ச்சியை நோக்கி பயணிப்பது குறைவாக உள்ளது என்று கூறுகின்றனர் முத்த கதர் சட்டைகாரர்கள்.
இப்படி பல போட்டிகளுக்கு மத்தியில் விரைவில் அறிவிக்கப்பட உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக யார் வரப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.