அப்படியென்ன இருக்கிறது அந்தப் புத்தகத்தில்?
அப்படியென்ன இருக்கிறது அந்தப் புத்தகத்தில்?
தமிழ்நாட்டின் தலைநகருக்கு வந்த இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு புத்தகத்தைப் பரிசளித்தார். அது. Gandhi’s Travels in Tamil Nadu. அதனைத் தமிழில் எழுதியவர் அ.ராமசாமி. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் பி.சி.ராமகிருஷ்ணா. இந்தியா முழுவதும் காந்தி பயணித்திருந்தாலும் அவரது தமிழ்நாட்டுப் பயணங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் நாள் மதுரையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காந்தி முதன்முதலாகத் தனது மேலாடையைத் தவிர்த்து, முழங்காலுக்கு மேல் ஏறிய வேட்டியை அணிந்தார். பின்னர் அதுவே அவரது நிரந்தர அடையாளமாக ஆனது. லண்டன் வட்டமேசை மாநாட்டிற்கும் அதே உடையில்தான் சென்றார். கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகள் உடலைத் துளைத்து, உயிரைப் பறித்தபோதும் காந்தி அதே உடைதான் அணிந்திருந்தார்.
காந்தியின் கதர் இயக்கத்துக்கு தமிழ்நாட்டில் பெரும்பங்காற்றியவர்களில் ஒருவர், அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார். கள்ளுக்கடை சத்தியாகிரகத்தை காந்தி அறிவித்தபோது அதனை ஈரோட்டில் முன்னின்று நடத்தியவர்கள் பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் ஆவர். இந்த சத்தியாகிரகம் குறித்து ஒருமுறை வடமாநில காங்கிரசாரிடம் பேசிய காந்தி, “போராட்டத்தை நிறுத்துவது என் கையில் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பெண்களின் கைகளில் உள்ளது” என்றார்.
சென்னை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் காந்தி பயணித்திருக்கிறார். அவற்றை இந்தப் புத்தகம் தரவுகளுடன் விளக்குகிறது. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியும் சுயமரியாதையும் உருவான பிறகு 1927ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் தஞ்சாவூருக்கு வந்த காந்தியை நீதிக்கட்சித் தலைவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வமும், தமிழறிஞர் உமாமகேசுவரனாரும் சந்திக்கிறார்கள். காந்தியிடம் அவர்கள் இருவரும், “தமிழ்நாட்டில் முற்றிக் கொண்டிருக்கும் பிராமணர்-பிராமணரல்லாதார் பிரச்சினையில் நீங்கள் தலையிட்டு தீர்த்து வைத்தால் என்ன என்று கேட்கிறார்கள்.
அதற்கு காந்தி, “இதை என்னிடத்தில் நீண்ட காலத்திற்கு முன்பே ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் வந்து சொன்னார். ஆனால், பிராமணர்கள் முன்பு போல இல்லை. இப்போது மாறிவிட்டார்கள்” என்று பதிலளித்தார். “எந்த அடிப்படையில் அப்படி சொல்கிறீர்கள்?” என்று ஏ.டி.பன்னீர்செல்வமும் உமாமகேசுவரனாரும் காந்தியிடம் கேட்க, “முன்பெல்லாம் நான் சென்னையில் (மயிலாப்பூர்) சீனிவாச அய்யங்கார் வீட்டில் வந்து தங்கினால் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்திருப்பேன்.
இப்போது, அவர் வீட்டை என் வீடாகவே நினைத்து பழகி வருகிறேன். என் மனைவி கஸ்தூரியும் அவர்களுடைய அடுப்பங்கரை வரை செல்கிறாள்” என்று சொல்லியிருக்கிறார் காந்தி. இந்த விவரமும், பிரதமரிடம் முதலமைச்சர் அளித்த புத்தகத்தில் உள்ளது. அதாவது, நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் செல்வாக்கு பெறுவதற்கு முன் மயிலாப்பூர் வீட்டில் தாழ்வாரம் வரைதான் மகாத்மாவுக்கே அனுமதி. அந்த இயக்கங்கள் வளர்ந்து செல்வாக்கு பெற்ற பிறகு, அடுப்பங்கரை வரை செல்லும் வாய்ப்பு காந்தி குடும்பத்தினருக்கு கிடைக்கிறது என்பதே இந்த உரையாடலின் வெளிப்பாடு.
16-9-1927 அன்று மாலையில் தஞ்சாவூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காந்தி, தன்னை ஏ.டி.பன்னீர்செல்வமும் உமாமகேசுவரனாரும் சந்தித்ததைக் குறிப்பிட்டுப் பேசுகிறார். அவர்களுடைய இயக்கம் மீதான தன் விமர்சனப் பார்வையையும் காந்தி வெளிப்படுத்துகிறார். அதே நேரத்தில், தன்னுடைய பேச்சைத் தொடர்ந்த காந்தி, “பிராமணரோ அல்லது யாரோ, தாம் உயர்ந்தவர் என்று உரிமை கொண்டாடும்போது, பிராமணரல்லாதார் அதை எதிர்த்துப் போரிட்டால் முழுக்க முழுக்க நான் அதை ஆதரிக்கிறேன்” என்று உரக்கச் சொன்னார்.
இத்தகைய செய்திகளை உள்ளடக்கிய புத்தகம்தான், Gandhi’s Travels in Tamil Nadu.
(தமிழில் விகடன் வெளியீடு. ஆங்கிலப் பதிப்பு அமேசானில் கிடைக்கும்)
-கோவி.லெனின்