இந்தியாவிலேயே வீட்டுக்கு கால்நடையா போகிற RTO இவர் ஒருத்தரா தான் இருப்பார் ! நேர்மை படுத்தும் பாடு
- ஞான ராஜசேகரன்
நான் திருச்சூரில் கலெக்டராக இருந்தபோது மாவட்ட அதிகாரிகளில் நேர்மைக்கு பெயர்போன அதிகாரி ஒருவர் இருந்தார். அவர் பெயர் டேவிட். லஞ்சத்துக்கு பிரசித்திபெற்ற போக்குவரத்துத் துறையில் RTO வாக அவர் பணிபுரிந்து வந்தார். அவர் வீடு RTO ஆபீஸிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.
ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து நடந்தே ஆபீஸ் வருவார். மாலையில் வீட்டிற்கும் நடந்தேதான் போவார். ஆட்டோ, டாக்ஸிகாரர்கள் அல்லது சொந்தக் காரில் செல்வோர் லிப்ட் கொடுக்க முன்வந்தாலும் அவர் ஏற்கமாட்டார். அவர் நடந்து செல்வதை முதல்முதலாக நான் பார்த்தபோது
என் கார் டிரைவர் சொன்னார்: ” இந்தியாவிலேயே வீட்டுக்கு கால்நடையா போகிற RTO இவர் ஒருத்தரா தான் இருப்பார்!”
டிரைவிங் லைசன்ஸ், பஸ், லாரி,வேன் முதலானவைகளின் தகுதிச்சான்றிதழ்( FITNESS CERTIFICATE) வழங்குவதில் விதிமுறைகளை நூறு சதவீதம் பின்பற்றுகிறவர் அவர். RTO ஆபீஸிலிருந்து லைசன்ஸ், சர்டிபிகேட் வாங்குபவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் அவர். அதேசமயம் நேர்மைக்கு ஒரு அடையாளமாகவும் திகழ்ந்தார்.
ஆனால் போக்குவரத்து துறையில் பணிபுரியும் பிற அதிகாரிகள் சொல்வது: “இவர் மாதிரி விதிமுறைகளை எல்லோரும் செயல்படுத்தினால் ஒரு வண்டிகூட ரோடில் ஓடாது. டேவிட் அவர்களின் பிரச்னையே அடிப்படை விதிமுறைகளையும் சாதாரண விதிமுறைகளையும் சமமாக கருதுவதுதான்.”
மேலதிகாரிகள், அமைச்சர்கள் யார் சொன்னாலும் விதிமுறைப்படி தான் செயல்படுவார். ஒரு முறை அமைச்சர் போன் மூலம் தவறாக பணம் வசூலித்து தரும்படி சொல்ல, அதை பைலில் எழுதி அப்படி சட்டத்துக்கு புறம்பாக தன்னால் வசூலிக்கமுடியாது என்று மந்திரிக்கே கடிதம் எழுதியவர் அவர். எல்லோரும் அவரிடம் ஜாக்கிரதையாகவே இருப்பார்கள். அவரை இடமாற்றம் செய்து கெட்ட பெயர் சம்பாதிக்க அரசியல்வாதிகளுக்கும் தைரியமில்லை.
ஊழலுக்கு பேர்போன ஒரு மந்திரி மாவட்ட அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டும்போது , டேவிட்டை மட்டும் அழைக்கமாட்டாராம். கூட்டத்தில் மந்திரியின் சட்டத்துக்கு புறம்பான தலையீடுகளை எங்கே அவர் கூட்டத்தில் போட்டு உடைத்துவிடுவாரோ என்கிற பயம் தான்.
டேவிட் நூற்றுக்கு நூறு நேர்மையான அதிகாரியாக இருந்தாலும் அவருக்கு கீழே அல்லது மேலே பணி புரிபவர்கள் “வழக்கம் போல ” செயல்பட்டுக்கொண்டிருந்ததால் சிஸ்டத்தில் பெரிய மாற்றம் காணப்படவில்லை. தங்களுடைய விண்ணப்பம் டேவிட் கையில் மாட்டிக்கொள்ளக்கூடாது. என்கிற பயம் மட்டும் பெரும்பாலானவர்களிடம் இருந்தது.
உன்னிகிருஷ்ணன் என்பவர் ஒருநாள் என்னிடம் ஒரு விண்ணப்பத்தை தந்தார். அதில் சில வருடங்களுக்கு முன்னர் அவர் நாலைந்து பஸ்களின் உரிமையாளராக இருந்தார் என்றும் வியாபாரத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்டு எல்லா பஸ்களையும் இழந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். பொருளாதார வீழ்ச்சிமட்டுமில்லை. மனைவியை இழந்து வாடுவதாகவும் அவர் சொன்னார்.
பல்வேறு கஷ்டங்களுக்குப்பின் தற்போது ஒரு பஸ்ஸை வாங்கி வந்துள்ளதாகவும் அது ஓடத்தொடங்கினால் வாழ்க்கையில் மீண்டும் அவரால் நிமிர முடியும் என்றும் சொன்னார். ஆனால் தாம் வாங்கிவந்த பஸ்ஸுக்கு FITNESS CERTIFICATE தர RTO டேவிட் மறுப்பதாகவும் சொன்னார். கலெக்டர் இந்த பிரச்னையில் தலையிட்டு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
டேவிட்டை பற்றி நன்கு அறிந்த நான் டேவிட் பஸ்ஸுக்கு தகுதி சான்றிதழ் தராமல் போனதற்கு போதிய காரணம் இருக்கும் என்று உறுதியாக நம்பினேன். ஆனாலும், முதலில் உன்னிகிருஷ்ணன் தமது பின்னணியைப்பற்றி சொல்பவை சரியானவை தானா என்று தாசில்தார் மூலம் விசாரித்தேன்.
தாசில்தார் தனது ரிப்போர்ட்டில் உன்னிகிருஷ்ணன் முன்பு பல பஸ்களுக்கு உரிமையாளராக இருந்தது உண்மை என்றும் தற்போது நொடிந்து போய் இருப்பதுபற்றியும், மனைவியை இழந்து குடும்பம் தவிக்கிறது என்றும் மனிதாபிமான அடிப்படையில் உன்னிகிருஷ்ணன் ஆதரிக்கப்பட வேண்டியவர் என்றும் பரிந்துரை செய்திருந்தார்.
போக்குவரத்து வாகனங்களுக்கு லைசன்ஸ் வழங்கும் அதிகாரம் REGIONAL TRANSPORT AUTHORITY( RTA) என்கிற அமைப்பிற்கு உரியது. அதில் கலெக்டர், எஸ்பி , RTO முதலானோர் அங்கம் வகித்துவந்தார்கள். உன்னி கிருஷ்ணனின் விண்ணப்பம் பரிசீலனைக்கு வந்த போது RTO விடம் அதுபற்றி விசாரித்தேன். டேவிட் சொன்னார்:அவரது வாகனத்தில் டெக்னிக்கலாக சில குறைகள் உள்ளன என்றார்.
அந்த குறைகளை சரி செய்து மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம். உன்னி கிருஷ்ணன் குறைகளை சரி செய்து வாகனத்தை சமர்ப்பித்தார். பரிசோதனை செய்த டேவிட் மீண்டும் குறை இருப்பதாக சொல்லி தகுதி சான்றிதழ் தர மறுத்துவிட்டார்.
இவ்வாறு மூன்று முறை உன்னி கிருஷ்ணனின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. உன்னி கிருஷ்ணனின் பொருளாதார நிலையை கணக்கிலெடுத்து மனிதாபிமான அடிப்படையில் நானும் எஸ்பியும் வாகனத்தின் குறைகளை சரி செய்து சமர்ப்பிக்க மீண்டும் அவருக்கு வாய்ப்பளித்தோம்.
ஆனால், நான்காவது முறையாக சரி செய்து வாகனத்தை உன்னி கிருஷ்ணன் சமர்ப்பிக்கும்போது அந்த சம்பவம் நடந்தது.
நான்காவது முறையும் வாகனத்தில் குறையொன்றை கண்டுபிடித்து டேவிட் Fitness Certificate தர மறுத்தார். கோபமடைந்த உன்னி கிருஷ்ணன், தன்னுடன் தயாராக கொண்டு வந்திருந்த கத்தியை ஆபீஸில் அமர்ந்திருந்த டேவிட் அவர்களின் இடுப்பு பாகத்தில்
குத்தி விட்டார்.
செய்தி அறிந்து நாங்கள் அனைவரும் ஓடினோம். போலீசும் வந்து விட்டது. டேவிடை ஆஸ்பிடல் கொண்டு செல்ல அவரை கைத்தாங்கலாக அங்கிருந்தவர்கள் தூக்கிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவராக உன்னி கிருஷ்ணன் இருந்ததுதான் எல்லோருக்கும் ஆச்சரியத்தை தந்தது.
இடுப்பு பகுதியிலிருந்து ரத்தம் வழிகின்ற நிலையிலும் என்னைப் பார்த்து டேவிட் சொல்கிறார்: “சார், அந்த வண்டியில் இன்னும் Defect இருக்கு.சரி செஞ்சா தான் Fitness தர முடியும்” போலீஸ் உன்னி கிருஷ்ணனை கைது செய்தது.போலீஸ் கஸ்டடியில் இருந்துகொண்டே உன்னி கிருஷ்ணன் என்னைப் பார்க்கிறார். கண்கள் கலங்கிக்கொண்டே என்னிடம் சொல்கிறார்:” டேவிட் சாருக்கு ஒன்னும் ஆகாது. எனக்கு வேற வழி தெரியலை. குத்த வேண்டியதா போச்சி”
— ஞான ராஜசேகரன்