பதவி உயர்வுக்காக கால்நூற்றாண்டு காலம் காத்துக்கிடக்கும் போலீசார் !
பாமரன்கூட கையில் மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் ஆபிஸ் வாசலில் நின்று மன்றாடியாவது தனது கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு...
பதவி உயர்வுக்காக கால்நூற்றாண்டு காலம் காத்துக்கிடக்கும் போலீசார் ! – கடைக்கண் பார்வை காட்டுமா அரசு?
காலம் போன கடைசியில் கூட, பதவி உயர்வு கிடைக்காது போல என கண்ணீர் வடிக்கிறார்கள், உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து கால்நூற்றாண்டு காலமாக ஆய்வாளர் நிலைக்கு மேலே உயர முடியாமல் உழலும் போலீசு அதிகாரிகள்.
கடந்த 1996, 1997, 1999 மற்றும் 2008 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளர்களாக தேர்தெடுக்கப்பட்டவர்கள், இவர்கள். 1997-ஆம் ஆண்டு உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்தவர்களுள் 570 பேர் மட்டுமே இதுவரை துணை கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற்றிருக்கின்றனர். 1997 பேட்சில் உள்ள சுமார் 180 பேரும்; 1997-க்கு பிறகு 2008-க்குள் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்த மொத்த பேரும் இன்னும் ஆய்வாளர்களாகவே தொடர்கின்றனர்.
சீனியாரிட்டி அடிப்படையில் காலியான பதவிகளில் அடுத்தடுத்து தாங்கள் அமர்த்தப்படுவோம் என்று வருடக்கணக்கில் இவர்கள் காத்துக்கிடக்கையில், தடாலடியாக கடந்த 01.08.2020 அன்று சுமார் 81 பேர் நேரடியாக துணை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இத்தகைய நேரடி நியமனத்தின் காரணமாக, தங்களுக்கான பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
தற்போதைய சூழலில் பதவி உயர்வு பெறாமல் உள்ள 180 காவல் ஆய்வாளர்களுக்கு துணை கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு கொடுக்கவேண்டு மென்றால், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் போதுமான அளவிற்கு புதிய பணியிடங்களை உருவாக்கினால் மட்டுமே சாத்தியமாகும் என்கின்றனர்.
மேலும், தனிப்பிரிவு குற்ற புலாணய்வு துறை (SBCID), க்யு பிரிவு (Q- Branch), மாவட்ட தனிபிரிவு (S.B) ஆகியவற்றில் பழைய முறைபடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் காவல் துணை கண்காணிப்பாளர்களை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் விடுக்கின்றனர்.
1997 பேட்சை சேர்ந்தவர்கள் இந்த ஆண்டு முதலாகவே, பணிஓய்வு பெறத் தொடங்கிவிட்டனர். எப்படியும் அடுத்த ஆண்டுக்குள் பாதிக்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்றுவிடுவார்கள். தன்னுடன் பணியாற்றிய சக போலீசார், காவல் துணை கண்காணிப்பாளராக பதவிஉயர்வு பெற்றுவிட்ட நிலையில், தாம் மட்டும் ஆய்வாளராகவே பணிநிறைவு செய்ய நேர்ந்த அவலம்தான் துயரமானது.
கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கும் இந்தக் குறைபாடு உரிய கவனம் கொடுத்து தீர்ப்பதற்கு பதிலாக, அப்போதைக்கு சமாதானம் சொல்லி தற்காலிக ஏற்பாட்டிலேயே முடித்து வைக்கப்படுவதாகவும் குறைபட்டுக்கொள்கின்றனர்.
1997 பேட்சில் 180 பேர் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பாக 2008 பேட்சை சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் 191 பேர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் என்று பட்டியலை வெளியிட்டிருப்பது, மேலும் வேதனையைக் கூட்டியிருப்பதாக சொல்கிறார்கள்.
இதுவும் போதாதென்று, தற்போது ஆய்வாளர் நிலையில் உள்ள 94 பேருக்கு துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கக்கோரி உரிய அரசின் நடைமுறைகளுக்காக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தலைமைச் செயலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 47 பேருக்கு அனுமதி வழங்கி உள்துறை செயலர் உத்தரவுப்பிறப்பித்துள்ளார். இது, மேலும் குளறுபடியைத்தான் அதிகப்படுத்தியிருக்கிறது, என்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, தற்போது துணைக் கண்காணிப்பாளராக பணியிலிருக்கும் 79 பேருக்கு கூடுதல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட கோப்பில் 69 பேருக்கு அனுமதி வழங்கி உள்துறை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கூடுதல் கண்காணிப்பாளர் பதவியில் உள்ளவர்களுக்கும் அதற்கடுத்த நிலையான காவல் கண்காணிப்பாளர் பதவி உயர்வும் வழங்கப்படாமல் இருக்கிறது, என்கிறார்கள்.
”சரியான திட்டமிடல் இல்லாததுதான் பிரச்சினைக்கு காரணம். 1997 பேட்சில் ஒரே நேரத்தில், ஆயிரம் பேரை நேரடி எஸ்.ஐ.க்களாக நியமனம் செய்தார்கள். நூற்றுக்கு இருபது பேர் என்ற விகிதத்தில், கான்ஸ்டபிள்களாக பணிபுரியும் போலீசாரை எஸ்.ஐ.யாக நியமிக்க வேண்டுமென்ற விதியை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் எங்களை தேர்வு செய்துவிட்டார்கள். பின் கான்ஸ்டபிள்ஸ் வழக்கு போட்டார்கள். ஆயிரம் பேருக்கு, 200 பேர் என்ற விகிதத்தில் அவர்களுக்கும் எஸ்.ஐ. போஸ்டிங் போட்டார்கள். இப்போதைய பிரச்சினைக்கு இதுவும் ஒரு காரணம்.
அடுத்து, நேரடி நியமனமே கூடாது என்பதல்ல எங்கள் தரப்பு வாதம். நேரடி நியமனமும் அவசியமான ஒன்றுதான்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு மூலம் தேர்வாகி நேரடியாக டி.எஸ்.பி.யாக பணியில் சேருபவர்கள் கூடுதல் டிஜிபி அல்லது ஐஜி வரை பதவி உயர்வு பெறமுடியும்.
ஐபிஎஸ் கேடரில் தேர்வு பெறுவோர் ஏ.எஸ்.பி.யாக நியமிக்கப்படுவர். அவர்கள் அனைவரும் DGPயாக பணிபுரிந்து ஓய்வு பெறுவர்.
நேரடி எஸ்.ஐ.யாக பணியில் சேருபவர்கள் எஸ்.பி. வரையில் பதவி உயர்வை பெற முடியும். இரண்டையும் பேலன்ஸ் செய்ய வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாமல், இந்த விகிதாச்சாரத்தை மாற்றியமைப்பதுதான் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
உதாரணமாக, முன்பெல்லாம் ஆண்டுக்கு குறைந்தது 100 பேரை எஸ்.ஐ. ஆக பணியில் சேர்ந்து இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றுபவர்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்குவார்கள். அந்த விகிதம் தற்போது, ஆண்டுக்கு 40 பேர் என்ற அளவுக்கு சுருங்கிவிட்டது. அதேசமயம், நேரடி நியமனம் 20 – 30 என்ற அளவிலிருந்து ஒரே சமயத்தில் 100 பேர் என்று அதிகரித்திருக்கிறது. இந்த சிக்கல்களையெல்லாம் நாங்கள் மேலிடம் வரை தெளிவுபடுத்திவிட்டோம். சட்ட சிக்கல்களையும், நிர்வாக சிக்கல்களையும், நிதிப்பற்றாக்குறையையும் காரணம் காட்டி “செஞ்சிதர்றோம்.. பொறுங்க..” என்று சமாதானம்தான் சொல்லிவருகிறார்கள். அவங்க ஸ்டெப் எடுக்கிறதுக்குள்ள இன்ஸ்பெக்டராகவே பணிநிறைவு பெற்று வீட்டுக்கு சென்றுவிடுவோம்.” என்கிறார், பெயர் வெளியிட விரும்பாத இன்ஸ்பெக்டர் ஒருவர்.
பாமரன்கூட கையில் மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் ஆபிஸ் வாசலில் நின்று மன்றாடியாவது தனது கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ”முடிந்தால் கைது செய்து பார்” என்று அரசுக்கு சவால் விட்டு, தங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ள அரசு ஊழியர் சங்கங்கள் இருக்கின்றன. ”பேருந்துகளை இயக்கமுடியாது” என்று போக்குவரத்து ஊழியர்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்க முடியும்.
ஆனால், மிடுக்கான உடையும், மிரட்டும் தோரணையும் கொண்ட போலீசாருக்கோ பெயரளவுக்கான சங்கம் என்பதே கிடையாது. ஒன்றிணைந்து போராடிவிட மாட்டார்கள் என்ற போலீசாரின் பலவீனத்தை புரிந்துகொண்டுதான், ஆட்சியாளர்கள் அவர்களை ஏய்த்து வருகிறார்களோ? என்ற ஐயத்தை எழுப்பியிருக்கிறது, இந்த விவகாரம்.
– ஆதிரன்.