சாமி சிலையை மறித்து வழிபாடு – விலக சொன்ன இன்ஸ்பெக்டருக்கு பளார் – சர்ச்சையில் திமுக புள்ளி!
சாமி சிலையை மறித்து வழிபாடு – விலக சொன்ன இன்ஸ்பெக்டருக்கு விழுந்தது பளார் – சர்ச்சையில் திமுக புள்ளி!
திருவண்ணாமலை கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலரை திமுக முக்கிய புள்ளி ஒருவர் கண்ணத்தில் அறைந்ததாக கூறப்படும் நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீஸ் தேடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலையார் கோயிலில், கடந்த டிசம்பர் 27 -ஆம் தேதி நடைபெற்ற ‘ஆருத்ரா’ என்னும் தரிசன விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், திருவண்ணாமலை நகராட்சியின் முன்னாள் நகர்மன்ற தலைவருமான இரா.ஸ்ரீதரன் தன்னுடைய மனைவி சிவசங்கரியோடு கலந்துகொண்டார்.
அப்போது அவர்கள் இருவரும் மூலவரான உண்ணாமலையம்மன் சன்னதியில் நீண்ட நேரம் சாமியை மறைத்தவாறு நின்று வழிப்பட்டுள்ளனர். இதனால், தரிசன மேடைகளில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை வழிபட முடியாமல் கத்தி கூச்சல் போட்டுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த வந்தவாசிக்குட்பட்ட தேசூர் காவல் நிலைய ஆய்வாளர் காந்திமதி கொஞ்சம் வழிவிட்டு சாமி தரிசனம் செய்யுங்கள் என்று ஸ்ரீதரனிடம் கூறியுள்ளார்.
அப்போது கடுப்பான ஸ்ரீதரனும், அவர் மனைவியும் பெண் இன்ஸ்பெக்டரை மரியாதைக் குறைவாகப் பேசி பக்தர்கள் முன்னிலையிலேயே இன்ஸ்பெக்டர் காந்திமதியின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, ஸ்ரீதரன், மற்றும் அவரது மனைவி சிவசங்கரி, மற்றும் கோயில் ஊழியர் ரமேஷ் ஆகிய 3 பேர் மீதும் திருவண்ணாமலை நகர போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம் என்பவரது தம்பி தான் சர்ச்சையில் சிக்கியுள்ள ஸ்ரீதரன் என்பது குறிப்பிடத்தக்கது.
‘‘பெண் இன்ஸ்பெக்டரை அடித்த தி.மு.க பிரமுகர் ஸ்ரீதரை கைது செய்தாதது ஏன்?’’ என்ற கேள்வியை சில அரசியல் கட்சித் தலைவர்கள் எழுப்பியுள்ள நிலையில், ஸ்ரீதரனின் கருத்தையறிய தொடர்புகொள்ள முயற்சித்தோம். அவரது தொலைபேசி எண் கடைசிவரையில் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகவே தற்போது வரை பதில் வருகிறது.
”சம்பவம் நடைபெற்ற அன்றைய தினமே ஸ்ரீதரன் மீது வழக்கு பதிவுசெய்துவிட்டோம். தற்போது. தலைமறைவாகியுள்ள அவரை தேடிக்கொண்டிருப்பதாக” தெரிவிக்கின்றனர், திருவண்ணாமலை நகர போலீஸார்.
திருவண்ணாமலை நகராட்சியின் முன்னாள் நகர்மன்ற தலைவர், ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர், அறங்காவலர் குழுத்தலைவரின் தம்பி என்பதால் வழிபட வந்த இடத்தில், “கெத்து” காட்டினாரா? உள்ளூர் அரசியல் பிரமுகர் என்பதை அறியாத வேறு பகுதியைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் பாதுகாப்பு பணிக்கு வந்த இடத்தில் “வார்த்தைகளை” விட்டாரா? என்ற விவாதத்தை கிளப்பியிருக்கிறது, இந்த விவகாரம்.
அரசியல்வாதிகளிடத்திலும், அதிகாரத்தில் இருப்பவர்களிடத்திலும் சபைநாகரிகம், பொதுநாகரிகம் குறித்த வகுப்புகளை எடுக்க வேண்டியதன் தேவையை உணர்த்தியிருக்கிறது, இந்த சம்பவம்!
மணிகண்டன்.