பில்கிஸ்பானு – வன்புணர்வு வழக்கு – 11 பேரின் முன்விடுதலையில் மோசடி !
பில்கிஸ்பானு – வன்புணர்வு வழக்கு – 11 பேரின் முன்விடுதலையில் மோசடி !
27 பிப்ரவரி 2002 அன்று காலை குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ராவில் ரயில் எரிப்பு நிகழ்ந்தது. அயோத்தியிலிருந்து திரும்பிய 59 இந்து பக்தர்கள் மற்றும் கரசேவகர்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி விரைவு வண்டிக்குள் தீயில் கொல்லப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம், அருகிலுள்ள மசூதியிலிருந்து வரவழைக்கப்பட்ட உள்ளூர் முஸ்லீம் கும்பலாகும் என்று கருதிய இந்து பக்தர்கள் குஜராத் கலவரத்தை நடத்தினர். இதில் முஸ்லிம்கள் பரவலான மற்றும் கடுமையான வன்முறைக்கு இலக்கானார்கள். அப்போது மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்தவர் தற்போதைய ஒன்றிய அரசின் தலைமை அமைச்சராக உள்ள மோடி அவர்கள்தான்.
பில்கிஸ்பானு வன்புணர்வு
குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு மிகப் பெரியளவில் வன்முறை கலவரம் ஏற்பட்டது. சில வாரங்கள் தொடர்ந்த இந்தக் கலவரத்தில் பல நூறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்தக் காலகட்டத்தில் பல மோசமான சம்பவங்களும் நடைபெற்றது. அதில் பில்கிஸ் பானுவுக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தில் இருந்த 3 வயதுக் குழந்தை உட்பட 14 பேர் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
11 பேர் மீது வழக்கு
இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வழக்கு விசாரணை நடக்கும்போது சில காரணங்களால் விசாரணை குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கும் மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜனவரி 21, 2008 அன்று, மும்பையில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் பில்கிஸ் பானுவின் ஏழு குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்துவிட்டு, பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 11 பேரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்விடுதலை – மேல்முறையீடு
பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 பேரும் தாங்கள் 2022ஆம் ஆண்டு, “நாங்கள் 14 ஆண்டுகளைச் சிறையில் கழித்துவிட்டோம். எங்களை விடுதலை செய்யவேண்டும்” என்று குஜராத் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். இவர்களின் கோரிக்கையைப் பரிசீலனை செய்த மாநில அரசும், ஒன்றிய அரசும் 11 ஆயுள் தண்டனை பெற்றவர்களை முன்விடுதலை செய்யலாம் என்று விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான 11 பேருக்கு இந்து மதம் சார்ந்தவர்கள் மாலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த முன்விடுதலையை எதிர்த்துப் பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவருடன் மேலும் பலரும் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.
முன்விடுதலை இரத்து – உச்சநீதிமன்றம்
இந்த மனுவை நீதிபதிகள் பி வி நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் விசாரித்த நிலையில், அவர்கள் இன்று தீர்ப்பு அளித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள், அவர்கள் மரியாதைக்குரியவர்கள் அவர்களின் மரியாதை முக்கியம் என்று தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கில் குற்றவாளிகளை முன் விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். குற்றவாளிகள் 12 நாளில் சிறைக்குச் செல்லவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை
குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்யக் குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஏனென்றால் இந்த வழக்கு விசாரணை மகாராஷ்டிராவில் தான் நடைபெற்றது. எனவே, இந்த 11 பேரை விடுவிப்பது குறித்த முடிவை வழக்கு விசாரணை நடந்த மகாராஷ்டிர அரசே எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நீதிபதி நாகரத்னா தனது தீர்ப்பில் சில விஷயங்கள் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. நீதிபதி நாகரத்னா தனது தீர்ப்பில், “குஜராத் அரசு குற்றவாளிகளுக்கு உடந்தையாகச் செயல்பட்டது… இந்தப் பயம்தான் வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் காரணமாக இருந்தது. குஜராத் அரசின் இந்த நடவடிக்கை அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும் அதிகாரத் துஷ்பிரயோகத்துக்கும் ஒரு உதாரணம். விதிகளை மீற நீதிமன்றத்தின் உத்தரவுகளையே பயன்படுத்திக் குற்றவாளிகளுக்கு நிவாரணம் அளித்துள்ளன. செல்லாத உத்தரவின் மூலம் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
விடுதலையில் மோசடி
கடந்த 2022இல் உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி வழங்கிய தீர்ப்பு குறித்தே உச்சநீதிமன்றம் சில முக்கியக் கருத்துகளைக் கூறியது. அப்போது நீதிபதி அஜய் ரஸ்தோகி தான், இந்த வழக்கில் குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலையாக மேல்முறையீடு செய்யலாம் என்று கூறியிருந்தார். அவரது இந்தத் தீர்ப்பை வைத்தே குற்றவாளிகள் மேல்முறையீடு செய்திருந்தனர். கடந்த 2022இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு என்பது மோசடியான முறையில், உண்மைகளை மறைத்துப் பெறப்பட்டதாகக் காட்டமான கருத்துகளைச் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. “உண்மைகளை மறைத்து, தவறான கருத்துகளை உருவாக்கிக் குஜராத் அரசு குற்றவாளிகள் விடுதலையைப் பரிசீலிக்கும் உத்தரவு பெறப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விடுதலை குறித்துக் குஜராத் பரிசீலிக்கலாம் என உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இது ஒரு மோசடி செயல்” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த முன்விடுதலைக்கான அதிகாரம் குஜராத் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இல்லை என்பதையும், முன்விடுதலையில் மோசடியும் நடைபெற்றுள்ளது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் இந்தக் கண்டனங்களுக்குக் குஜராத் அரசும் ஒன்றிய அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-ஆதவன்
வாழ்த்துகள்