இந்துத்துவ கருத்துகளின் ஊடுருவல் மிக ஆழமாக சென்றிருப்பதன் அடையாளங்கள் !
இந்துத்துவ கருத்துகளின் ஊடுருவல் மிக ஆழமாக சென்றிருப்பதன் அடையாளங்கள் !
அயோத்தியில் ‘ராமஜென்ம பூமியில்’ கோயிலை அமைத்துவிட்டார்கள். உலகின் எந்த நாட்டிலும் மதத்தை வைத்து இப்படி ஒரு விழாவை அரசே பின்னணியில் நின்று நடத்தியது இல்லை. இதுதான் இவர்களின் உண்மை முகம். இதுதான் இவர்களின் விருப்பம். நாட்டைப் பற்றியோ, நாட்டு மக்களின் முன்னேற்றம் பற்றியோ, இவர்களுக்கு அக்கறை கிடையாது.
‘ராம்லல்லா பிரான் பிரதிஷ்டை விழா’ வுக்கு நேற்று இந்தியாவின் அனைத்து நாளேடுகள் மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்த விளம்பரங்களில் மேன்மை மிகு பங்கேற்பாளர்கள் என்று இருக்கும் பகுதியில் மூன்றாவது நபராக ஆர்.எஸ்.எஸ் இன் தலைவர் மோகன் பகவத் பெயர் இருக்கிறது. ஆர்.எஸ். எஸ் க்கும் ஏனைய இந்து அரசியல் மற்றும் இந்து கருத்தியல் அமைப்புகளுக்கும் பின்னணியில் இருப்பது ஆர்.எஸ்.எஸ். தான் என்பதை மிக வெளிப்படையாக அவர்களே அறிவித்திருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் இன் சித்தாந்தம் என்ன? அவர்கள் வியந்து ஓதுகிற வேதகால முறைப்படி பார்ப்பனீய சித்தாந்தத்திற்கு இணங்க இந்த நாடு ஆளப்பட வேண்டும். மக்களும் இருக்க வேண்டும் என்பதுதான். அந்த சித்தாந்தத்திற்கு மிகப் பொருத்தமான பிம்பமாக ராமன் இருக்கிறார்.
ராம ஆட்சி பார்ப்பனிய சித்தாந்தத்தின் அடிப்படையில் நடைபெற்ற சத்திரிய ஆட்சி. ராம கோட்பாடு பார்ப்பனிய கோட்பாடு. ராமனின் பகைவர்கள் அவர்களோடு உடன்படாதவர்கள் மற்றும் கருத்தியல் எதிரிகளான (இராவண) திராவிடர்கள். இதைவிட வேறென்ன வேண்டும் அவர்களுக்கு?
இன்று யாரெல்லாம் ராமஜென்ம பூமி கோயில் பிரதிஷ்டை விழாவிற்கு சென்றிருக்கிறார்கள், வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள் என்று பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் இன் ஊடுருவல் மற்றும் நெருக்கடியை புரிந்து கொள்ள முடியும்.
ஒரு வாரத்திற்கு முன்னதாகவே எங்கள் ஊர் பக்கத்தில் தீவிர ஹிந்துத்துவமும் சாதியமும் நிலவிடும் பகுதிகளில் ராமஜென்ம பூமி கோயில் பிரதிஷ்டை விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் பதாகைகளைப் பார்க்க முடிந்தது. நேற்று இரவு ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு சென்று திரும்பி கொண்டு இருந்தபோது கடுங்குளிரில், சில வீடுகளில் வண்ணக் கோலங்களை வாசல்களில் போட்டுக் கொண்டிருந்த பெண்களை காண முடிந்தது. இந்துத்துவ கருத்துகளின் ஊடுருவல் மிக ஆழமாக சென்றிருப்பதன் அடையாளங்கள் இவை.
எதிர்காலம் மிகுந்த சவால் நிறைந்ததாகவும், அச்சம் ஊட்டக்கூடியதாகவும் தெரிகிறது. ஆனாலும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. இந்து வெறியை, சாதியை, இவற்றின் பிம்பமான ராமனை கடுமையாக எதிர்த்தவர்கள் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் இருவர் மட்டுமே. அவர்கள் வழியில் உறுதியாக நடப்பது ஒன்றே வழி.
அழகிய பெரியவன்