யார் இந்த ஆதவ் அர்ஜூனா !
விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா யார் இவர் ? கடந்த ஜனவரி 26ஆம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருச்சியில் ‘ஜனநாயகம் வெல்லும்’ என்னும் மாநாட்டைச் சிறப்பாக நடத்தி முடித்தது. பல இலட்சம் விசிக தொண்டர்கள் குடும்பம் குடும்பமாகக் கலந்துகொண்டனர். இலட்சக்கணக்கில் கூடிய கூட்டத்தைப் பார்த்து உளவுத்துறை அனுப்பிய தகவல்கள் தலைமை அமைச்சர் மோடியும், அமித்ஷாவும் அதிர்ந்துபோனார்கள் என்ற தகவலும் சமூக ஊடகங்களில் வெளியானது.
திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில், விசிகவின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதளம் வெளியிடப்பட்டது. இந்த இணையதளத்தை வடிவமைத்துக் கொடுத்தது ஆதவ் அர்ஜூனா தலைமையிலான Voice of Common குழுவினர். மேலும், Voice of Common நிறுவனர் ஆதவ் அர்ஜுனும், இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை தளம் மூலமா தன்னையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக்கொண்டார். மாநாட்டின் மேடையில் ஆதவ் அர்ஜுனை அழைத்து அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார் தொல். திருமாவளவன்.
விசிகவின் பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்தது Voice of Common நிறுவனர் ஆதவ் அர்ஜுன்தான் என்றும், இந்த வெல்லும் சனநாயகம் மாநாட்டை ஒருங்கிணைத்ததும் ஆதவ் அர்ஜுன்தான் எனப் பெருமைப்படுத்திப் பேசி அவருக்கு உறுப்பினர் அட்டையையும் வழங்கினார் தொல்.திருமாவளவன். இந்நிலையில், இன்று (15.02.2024) அம்பேத்கர் திடலில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலை குழுக் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுன் அவர்களுக்குத் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூனா, சிறு வயதில் இருந்தே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கூடைப்பந்து விளையாட்டில் சிறப்பாக விளையாடிய ஆதவ் அர்ஜுன், மாவட்ட, மாநில அளவில் ஏராளமான போட்டிகளில் பங்கேற்றுச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். இந்தியக் கூடைப்பந்து அணிக்காக விளையாடியுள்ளார். முன்னாள் கூடைப்பந்து வீரரான ஆதவ் அர்ஜுன், தற்போது தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவர், தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் எனக் கூடைப்பந்து விளையாட்டுத் துறை சார்ந்த பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் உள்ளார் ஆதவ் அர்ஜூன்.
கோவையைச் சார்ந்த லாட்டரி சீட்டு விற்பனை அதிபர் மார்ட்டினின் மருமகன்தான் இந்த ஆதவ் அர்ஜூனா. மார்ட்டினின் மகள் டெய்சியின் கணவர். லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றபோது, ஆதவ் அர்ஜூனாவின் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.
வாய்ஸ் ஆஃப் காமன் (Voice of Common) என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஆதவ் அர்ஜூனா, கடந்த ஓராண்டுக்கும் மேலாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு நிகழ்வுகள், கூட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறார். விசிக விருது வழங்கும் விழா, விசிக பூத் ஏஜெண்டுகள் கூட்டம் ஆகியவற்றை இவரது நிறுவனம்தான் ஏற்பாடு செய்து நடத்தியது. விசிக கூட்ட ஏற்பாடுகள் கட்சித் தொண்டர்களையே வியக்க வைக்கும் அளவுக்கு இருந்தன. அண்மையில் திருச்சியில் இலட்சக்கணக்கானோர் திரண்ட விசிக மாநாட்டையும் ஆதவ் அர்ஜுன் தான் ஒருங்கிணைத்தார். இந்த மாநாடு, இதன் சிறப்பான ஏற்பாடுகளால் தனிக் கவனம் பெற்றது. இந்நிலையில் தான் அவரை, விசிகவின் துணை பொதுச் செயலாளராக நியமித்துள்ளார் திருமாவளவன்.
திமுக கூட்டணியில் உள்ள விசிக, வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 2 தனித் தொகுதியும் ஒரு பொதுத்தொகுதி (கள்ளக்குறிச்சி) கேட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பொதுத்தொகுதி கிடைத்தால் அந்தத் தொகுதியின் வேட்பாளராக ஆதவ் அர்ஜூன் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு ஆதவ் அர்ஜூன் போன்றவர்களின் வருகை ஏற்றத்தைத் தருமா? என்பது விடை தெரியாத வினாக்களே.