உங்கள் தொகுதியின் வெற்றி வேட்பாளர் யார்? அங்குசம் நடத்திய அதிரடி சர்வே முடிவுகள் !
கொங்கு மண்டலத்தில் சார்ந்திருக்கும் கட்சியையும் கடந்து சாதி அரசியல் குறிப்பிட்ட செல்வாக்கை செலுத்தும் என்றே களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, ஏறத்தாழ 14 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என்றே சொல்கிறார்கள்.
உங்கள் தொகுதியின் வெற்றி வேட்பாளர் யார்? அங்குசம் செய்தி இதழ் நடத்திய அதிரடி சர்வே முடிவுகள் !
இந்தியாவின் 18-வது மக்களவைக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதற்கட்டமாக, ஏப்ரல் 19 அன்று தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், பாஜகவுடன் கூட்டணி சேராமல் அதிமுக தனித்துப் போட்டியிடுவதும்; அதிமுகவுடன் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் பாஜகவுடன் கைகோர்த்த பாமகவின் முடிவும் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க திருப்பம் ஆகும். மிக முக்கியமாக, தென்சென்னை ஜெயவர்த்தன், கள்ளக்குறிச்சி குமரகுருவைத் தவிர எஞ்சிய 31 பேரும் அதிமுகவில் புதுமுகமாக இருப்பது என்பது அக் கட்சிக்கு பலவீனமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் பாமகவுக்குக் குறிப்பிட்ட வாக்குவங்கியில்லை. பாமக பலமாக உள்ள வட, மேற்கு மாவட்டங்களில் பாஜகவுக்கு வாக்குவங்கி இல்லை என்பது இக் கூட்டணிக்குப் பலவீனமாக உள்ளது. எப்போதும்போல, நாம்தமிழர் கட்சியும் தனித்து போட்டியிடும் நிலையில் எதிர்க்கட்சிகளின் அணிச்சேர்க்கை மூன்றாக பிளவுபட்டு கிடக்கிறது.
ஒருவேளை பாஜக, அதிமுகவும் கூட்டணி சேர்ந்து அவர்களோடு நாதகவும் இணைந்திருந்தால் நாற்பது தொகுதிகளின் முடிவுகளும் எவரும் கணிக்க முடியாத அளவுக்கு கடும் போட்டி நிறைந்ததாக மாறியிருக்கும். மாறாக, எதிர்ப்பு ஓட்டுகளின் சிதறல், ஆளும் திமுக கூட்டணி கட்சியினருக்கு சாதகமான முடிவையே வழங்கும் என்பதாகவே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக அமைந்திருக்கிறது.
திமுக கூட்டணிக்கு பெண்களுக்காக உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய், அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பெறும் மாணவ, மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் போன்ற நலத்திட்டங்கள் திமுகவுக்குக் களத்தில் கூடுதல் பலமாக உள்ளது. சென்னை பெருநகரில் சொத்துவரி போன்றவை இருமடங்கு உயர்வு என்பதும், அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமை திமுகவுக்கு பலவீனமாகவே உள்ளது.
இந்நிலையில், தேர்தல் களத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை அறிய இறங்கிய அங்குசம் செய்தியாளர்கள் படை கள ஆய்வை மேற்கொண்டது. இந்தப் பணியை அங்குசம் இதழின் பொறுப்பாசிரியரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான தி.நெடுஞ்செழியன் ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.
நான்கு முனைப்போட்டியில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் 15% வாக்கு வித்தியாசம் உள்ள நிலையில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும் நிலையில்தான் உள்ளது.
திமுக கூட்டணி 42% முதல் 45% வரையிலான வாக்குகளையும்; அதற்கு அடுத்தபடியாக அதிமுக கூட்டணி 28% முதல் 30% வரையிலான வாக்குகளையும்; பாஜக கூட்டணி 13% முதல் 15% வரையிலான வாக்குகளையும்; நாம் தமிழர் கட்சி 7% முதல் 10% வரையிலான வாக்குகளையும் பெறும் என்பதாக அங்குசம் சர்வே முடிவுகளின் வழியே அறிய முடிகிறது.
கொங்கு மண்டலத்தில் சார்ந்திருக்கும் கட்சியையும் கடந்து சாதி அரசியல் குறிப்பிட்ட செல்வாக்கை செலுத்தும் என்றே களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, ஏறத்தாழ 14 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என்றே சொல்கிறார்கள்.
பெரும்பாலான இடங்களில் அதிமுக இரண்டாம் இடத்தையும்; குறிப்பிட்ட சில இடங்களில் பாஜக இரண்டாம் இடத்தையும் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன. அதேபோல, மூன்றாம் இடத்தை பொறுத்தவரையில் பாஜகவோடு நாதக பல இடங்களில் மல்லுக்கட்டும் நிலை இருப்பதையும் உணர முடிகிறது.
அங்குசம் செய்தியாளர்கள் குழு.