அதிரடி அரசியலை விஞ்சிய சவுக்கு சங்கர் கைதும் காற்றில் பறக்கும் கதைகளும் !
அதிரடி அரசியலை விஞ்சிய சவுக்கு சங்கர் கைதும் காற்றில் பறக்கும் கதைகளும் !
கண்ணை கட்டி பிளாஸ்டிக் பைப்பால் அடித்து சவுக்கு சங்கரின் கையை உடைத்து தனிமைச்சிறையில் தள்ளினார்களா ?
பெண் போலீசார்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசு உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பகீர் கிளப்பியிருக்கிறார், அவரது தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்.
மே-6 அன்று சிறையில் வழக்கு தொடர்பாக சந்தித்த நிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் மேற்படி தகவலை தெரிவித்திருக்கிறார்கள் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள்.
நீதிமன்றக்காவலுக்கு சவுக்கு சங்கர் அனுப்பப்படுவதற்கு முன்பாகவே இரண்டுமுறை மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும், அவ்விரு சோதனைகளின்போதும், வாகன விபத்தின்போது உதட்டில் ஏற்பட்ட சிறு காயத்தை தவிர, வேறு எந்தவிதமான எலும்பு முறிவோ காயங்களோ இல்லாத நிலையில், சிறையில் வைத்து அடித்திருப்பதால்தான் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
ஏற்கெனவே, நீதிபதிகள் வீட்டில் பணிபுரியும் பெண் உதவியாளர்களை இழிவாக பேசிய வழக்கில் கைதாகி கடலூர் சிறையில் இருந்தபோது, செந்தில்குமார் என்ற அதிகாரிதான் சூப்பிரண்டாக இருந்ததாகவும்; அப்போது அவர் சிறையில் தனக்கு பல்வேறு தொந்தரவுகளை கொடுத்ததாகவும்; அவருக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடுத்த வழக்கு நிலுவையில் இருந்து வருவதாகவும்; இந்நிலையில், கடலூர் மத்திய சிறையில் பணியாற்றிய சூப்பிரண்டு செந்தில்குமார் தற்போது கோவை மத்திய சிறைக்கு இடமாறுதல் பெற்று பணியாற்றி வருவதாகவும்; பழையதை மனதில் வைத்துக்கொண்டு தன்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே, கோவை மத்திய சிறையில் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றே கோவையில் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் சவுக்கு சங்கர் சந்தேகிப்பதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்.
கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்ட அடுத்த பத்து நிமிடத்தில், அவரை நிர்வாணப்படுத்தி கண்ணை கட்டிவிட்டு, சிறைவார்டன்கள் பத்து பேர் பிளாஸ்டிக் பைப்பில் துணியை சுற்றி அடித்து துன்புறுத்தியதாகவும்; இந்த தாக்குதலில்தான் சவுக்கு சங்கரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது என்றும்; அதன்பிறகும் அவருக்கு முறையான சிகிச்சை வழங்காமல் வெறுமனே வலிநிவாரண மாத்திரைகளை மட்டுமே வழங்கி வருகின்றனர் என்றும் குற்றம் சுமத்துகிறார், அவர். இவ்வாறு தொடர்ந்து வலிநிவாரணிகளை மட்டுமே கொடுத்து வந்தால் அவரது மற்ற உறுப்புகளும் பாதிப்படையும், அவரது உயிருக்கு அச்சுறுத்தலான விசயம் இது என்கிறார்.
இதனையெல்லாம்விட, கோவை மத்திய சிறையில் வழக்கமான கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பிளாக்கில் அடைக்காமல், மனநோயாளிகளை அடைக்கும் தனிமைச்சிறையில் சவுக்கு சங்கரை அடைத்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
வேறு சிறைக்கு அவரை மாற்ற வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கிறீர்களா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, “தமிழகத்தில் எல்லா சிறைகளும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவைதானே? இங்கு இருக்கும் செந்தில்குமாரைப் போல, அங்கும் ஒரு செந்தில்குமார்தானே இருக்கப்போகிறார். அரசு என்ன சொல்கிறதோ, அதைத்தானே செய்வார்கள்” என்பதாக கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சவுக்கு சங்கர் தமிழக அரசின் ஊழல்களையும், ஊழல் அதிகாரிகளுக்கும் எதிராக செயல்பட்டவர் என்றும் அதற்காகவே சவுக்கு சங்கரால் பாதிக்கப்பட்ட அதிகாரிகளும் தமிழக அரசும் சேர்ந்துகொண்டு சவுக்கு சங்கரை பழிவாங்கும் எண்ணத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதைப் போல அர்த்தம் தரும் வகையில் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார், வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்.
சவுக்கு சங்கர் விசயத்தில் மனித உரிமை மீறப்பட்டிருப்பதாகவும், தேர்தல் சமயத்தில் மட்டுமே தமிழகம் முழுவதும் 6 கஸ்டடி மரணங்கள் நிகழ்ந்திருப்பதையும் குறிப்பிட்டு போலீசாரின் ஆதிக்கமே மேலோங்கியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார், அவர்.
இந்தக்குற்றச்சாட்டு குறித்து நீதிபதி ஒருவர் நேரில் விசாரணை நடத்தவேண்டும் என்பதாக எடப்பாடி பழனிச்சாமி டிவிட்டர் வழியே கருத்தை முன்வைத்திருந்தார்.
சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் முன்வைத்த குற்றச்சாட்டை, சிறைத்துறை ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் மறுத்திருக்கிறார். சிறையில் எந்த கைதியும் தாக்கப்படுவதில்லை என்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் தரப்பில் ஜே.எம்.-4 நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மனுவை அனுப்பி வைத்ததோடு, மாவட்ட சட்ட உதவி வழக்கறிஞர்கள் மூவர் மற்றும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் உதவியுடன் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் உத்தரவிட்டிருக்கிறார். இதனையடுத்து தற்போது சவுக்கு சங்கரை நேரில் விசாரிக்க சென்றிருக்கிறார்கள்.
இதுஒருபுறமிருக்க, சவுக்கர் சங்கருக்கு எதிராக சேலம் சைபர் கிரைம் போலீசில், சைபர் கிரைம் போலீஸ் உதவி ஆய்வாளர் கீதா அளித்த புகாரின் அடிப்படையில், ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், மற்றும் ஓர் திருப்பமாக இந்த வழக்கில் நான்காவது நபராக சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆரைக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த திருமால் மகன் மகேந்திரன் என்பவரை கைது செய்திருக்கின்றனர். அவரிடமிருந்து 2.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவ்வழக்கில் இதுவரை பிடிபட்ட கஞ்சாவின் அளவு 3 கிலோ என்பதாக அதிகரித்திருப்பதால், கஞ்சா கைப்பற்றியது தொடர்பான இந்த வழக்கு இனி தேனியில் இருந்து மதுரை போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.
சைபர்கிரைம் போலீசு தரப்பில் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய வழக்கு மே-09 ஆம் தேதிக்கும்; சவுக்கு சங்கர் தரப்பில் பிணை கோரி தொடுக்கப்பட்ட வழக்கு மே-10 ஆம் தேதியும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
பெண் போலீசார்களை அவதூறாக பேசிய குற்றச்சாட்டுக்கு காரணமான சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், சவுக்கு சங்கர் கைது குறித்து இயக்குநர் களஞ்சியத்திடம் பெலிக்ஸ் ஜெரால்டு நேர்காணல் நடத்தி வெளியிட்டுள்ளார். மேலும், சவுக்கு மீடியாவில் சவுக்கு சங்கரின் மூவர் கூட்டணியில் உள்ள முத்தலீஃப் மற்றும் லியோ ஆகியோரும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக போலீசு வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.
தமிழகத்தில் நிலவும் கோடை காரணமான வீசும் வெப்ப அலையைக்காட்டிலும், சவுக்கு சங்கர் கைது விவகாரம் அனல் தெறிக்கும் அதிரடி திருப்பங்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது.
– ஆதிரன்.