ஒன்றுக்கும் ஆகாத இடத்தை தலையில் கட்டப்பார்க்கும் நியோமேக்ஸ் ! ஆதரவும் – எதிர்ப்பும்!
ஒன்றுக்கும் ஆகாத இடத்தை தலையில் கட்டப்பார்க்கும் நியோமேக்ஸ்! ஆதரவும் – எதிர்ப்பும் ! தேனி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பில், கடந்த ஜூன் – 2 அன்று மதுரையில் பாண்டிகோயில் அருகில் உள்ள ஸ்ரீ சங்கர கோமதி மஹாலில் கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதிலிருந்தும் வந்திருந்த நியோமேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். குறிப்பாக, மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தவர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இதற்காக அரங்கத்தின் நுழைவாயிலில் சிறப்பு கவுண்டர்களை ஏற்படுத்தி, பங்கேற்பாளர்களின் விவரங்களை பதிவு செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நபர் ஒருவருக்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும் என்பதோடு, தேனி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் முடிவுகளுக்கு கட்டுப்படுவதாக உத்தரவாத படிவத்தில் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டே அனுமதித்தனர்.
வாய்ஸ் ஆப் லா என்ற பெயரில் யூட்யூப் சேனல் நடத்தி வரும் வழக்கறிஞர் அழகர்சாமியின் ஆலோசனையின்படி இந்தக்கூட்டம் நடைபெறுவதாக அறிவித்தார்கள். நியோமேக்ஸில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி உள்ளிட்டு உயர் அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்ற பலரும் பங்கேற்றிருந்தனர்.
அரங்கில் பேசிய சங்க நிர்வாகிகள் இந்த விவகாரம் தொடர்பாக நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர் பாலசுப்பிரமணியனுடன் ஆறு முறைக்கும் மேல் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதாகவும், அதன்படி தமிழகம் முழுவதுமுள்ள நியோமேக்ஸ்-க்கு சொந்தமான 14,000 இடங்களின் பட்டியலை கையில் தந்திருப்பதாவும் தெரிவித்தார்கள். இப்போதைய சூழலில் நியோமேக்ஸ் நிறுவனத்திடமிருந்து பணமாக பெறுவது ஆகாத காரியம். முடிந்தவரை நிலமாக பெற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் என்பதாக கருத்துக்களை முன்வைத்தனர்.
ஏற்கெனவே, நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் பலரும் பல்வேறு கோரிக்கைகளுடன் தொடுத்த பல வழக்குகள் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்குகளை விசாரித்துவரும் நீதிமன்றம், இதுவரை புகார் கொடுக்காத பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க ஆறு வார காலம் கெடு விதித்திருக்கிறது.
அந்த கெடு முடிவடைய 21 நாட்களே அவகாசம் (ஜூன் இறுதிக்குள்) இருக்கும் நிலையில் கெடு நாட்களுக்குள் வந்து சேரும் புகார்களை அடிப்படையாகக் கொண்டு, 5 (A) காம்பவுண்ட் விதியின்படி, புகார்தாரர்கள் அனைவருக்கும் நிலத்தை பதிவு செய்து கொள்வது என்ற ஏற்பாட்டிலிருந்தே இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அந்தக்கூட்டத்தில் வழக்கறிஞர் அழகர்சாமி பேசும்போது, ”இதுவரை புகார் கொடுக்காதவர்களை பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. அது அவர்களது பிரச்சினை. நாம் சங்கமாக சேர்ந்து சில கோரிக்கைகளை முன்வைக்கிறோம். நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். ஆர்.டி.ஓ.விடமும் பேசியிருக்கிறோம். அவரும் நீங்கள் ஒரு முன்மொழிவை முன்வையுங்கள் சட்டப்படி அதனை செய்து முடிக்க ஆவண செய்கிறோம் என்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
பணமாக பெறுவதென்றால், நியோமேக்ஸுக்கு சொந்தமான மொத்த இடங்களையும் அடையாளம் காண வேண்டும். அதன்பிறகு அதனை அரசு சொத்தாக மாற்ற வேண்டும். அப்புறம் ஆர்.டி.ஓ. தலைமையில் ஏலம் விட்டு காசாக்க வேண்டும். இது ஆகாத காரியம். எவனும் மார்க்கெட் மதிப்புக்கு இடத்தை வாங்க முன்வர மாட்டான்.
நாமே பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு இடத்தை கிரையம் செய்தாலும், பத்திரம் ஒரு இலட்சத்துக்குத்தான் போடுவோம். மிச்சம் 9 இலட்சமும் ரொக்கமாகவே கொடுப்போம். ஆர்.டி.ஓ. பொறுப்பில் ஏலம் விட்டால் இதுபோல செய்ய முடியாது. சந்தை மதிப்புக்கு எவனும் ஸ்டாம்ப் டியூட்டி கட்டி இடத்தை வாங்க முன்வரமாட்டான். ஆகவே, நியோமேக்ஸ் நிறுவனம், ஆர்.டி.ஓ. மற்றும் நமது சங்கம் மூவரும் இணைந்து ஒரு சுமுகமான முறையில் இடத்தை எழுதி வாங்கிக் கொண்டு போவதுதான் புத்திசாலித்தனம்.” என்பதாக பேசினார்.
”ஒருவேளை நியோமேக்ஸ் நிர்வாகம் நமது கோரிக்கைக்கு உடன்படவில்லை என்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோமேக்ஸ் நிர்வாகிகளின் வீடுகளை அவர்களின் சொத்துக்களை முற்றுகையிடும் போராட்டத்தை தொடருவோம். அப்போது வழிக்கு வருவார்கள்.” என்பதாகவும் கருத்துக்களை முன்வைத்தார்கள்.
இந்நிகழ்வுக்கு முன்னர், இதுபோல சங்கத்தின் பெயரில் கையெழுத்து பெறுவது தொடர்பாக கருத்து வேறுபாடு எழவே, திருச்சியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தலைமையிலான ஒரு பிரிவினர் இக்கூட்டத்தை புறக்கணித்திருக்கின்றனர். அதே நாள் மாலையில், திருச்சியில் அவர்கள் தனியே ஒரு ஒருங்கிணைப்புக் கூட்டத்தையும் கூட்டியிருக்கின்றனர்.
திருச்சியை சேர்ந்த வெங்கடேசன், விருதுநகர் மாறன் ஆகியோரிடம் அங்குசம் சார்பில் பேசினோம். “இடமாக வாங்குவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. ஒன்றுக்கும் ஆகாத இடத்தை எங்கள் தலையில் கட்டப் பார்க்கிறார்கள். அதற்கு இந்த சங்கம் உடன்போகிறது. சென்னை ஒரகடம் அருகில் நியோமேக்ஸ்-க்கு சொந்தமான ஒரு இடத்தை காட்டினார்கள்.
வெளி ஆட்கள் வாங்கினால் சதுர அடி 900 ரூபாயாம். அதே நியோமேக்ஸால் நொந்து நூடுல்ஸான நாங்கள் வாங்கினால் 1200 ரூபாயாம். ஆனால், பக்கத்தில் விசாரித்தால் சதுர அடி 600க்குத்தான் போகிறது என்கிறார்கள். 600 ரூபாய் இடத்தை 1200 ரூபாய் என்பதாக காட்டி தலையில் கட்டப் பார்க்கிறார்கள்.
இவர்கள் கொடுத்துள்ள பட்டியல்கூட, ஒன்றுக்கும் ஆகாத இடங்கள்தான். முக்கியமான இடங்களையெல்லாம் வெளியிடவே இல்லை. பதுக்கிவிட்டார்கள். அடுத்து, பத்திர செலவு செய்து அந்த இடத்தை வாங்க வேண்டுமா? ஏற்கெனவே, பிள்ளைகளின் கல்விச் செலவு, திருமண செலவு, இ.எம்.ஐ., வட்டி கட்டுவது என பல பணத்தேவைகளை எதிர்கொண்டு இருக்கிறோம்.
இந்நிலையில் எங்களுக்கு பணமாக கிடைத்தால்தான் தீர்வாக இருக்கும். இவர்களிடம் இடத்தை வாங்கிக் கொண்டு அதை எப்போது விற்று காசாக்குவது? எப்படியோ இந்த பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கில் இப்படி செய்கிறார்கள்.” என்கிறார்கள்.
இதற்கிடையில், தேனி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராக இருந்த திருச்சியைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவரை பொறுப்புகளிலிருந்து கழட்டி விட்டதாக சொல்கிறார்கள். அவர் நியோமேக்ஸ் நிறுவனத்தின் பினாமி நிறுவனமான சிக்மா பிராஜெக்ட்டில் முக்கிய பொறுப்பில் வகித்துக் கொண்டே, நியோமேக்ஸிக்கு எதிரான சங்கத்திலும் பங்கெடுத்திருக்கிறார். இங்கு இருந்துகொண்டே, நியோமேக்ஸ் நிறுவனத்தின் திட்டங்களை திணிக்க முயற்சி செய்கிறார். அதற்காகவே அவரை நீக்கியிருக்கிறார்கள் என்கிறார்கள்.
இதுஒருபுறமிருக்க, விருதுநகரில் உள்ள விஸ்டம் சிட்டி அருகே பல்லாயிரக்கணக்கில் இடத்தை வளைத்துப் போட்டிருக்கும் ஆர்.எச். குரு என்பவரிடன் வீட்டை முற்றுகையிடப் போவதாக தேனி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பில் அறிவித்திருக்கிறார்கள்.
நிர்வாகத்துடன் பேசி இடமாக வாங்குவதா? பணமாக வாங்குவதா? என்ற பஞ்சாயத்து ஒருபுறமிருக்க… நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க காலக்கெடுவை நீதிமன்றமே நிர்ணயித்துள்ள நிலையில், இன்னும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் பேச்சை நம்பி புகார் கொடுக்க முன்வராதவர்களின் ”கதி” என்ன என்பதுதான் இந்த விவகாரத்தின் உச்சகட்ட குழப்பமாகவே நீடிக்கிறது.
– அங்குசம் புலனாய்வுக்குழு.
Super vittukodukka vendam
நியோ மேக்ஸ் மீது புகார் செய்ய விரும்புகிறேன். எப்படி செய்வது என்று சொல்ல முடியுமா?
EOW / மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் ,
டிஎஸ்பி – செல்வி . ஏ. மனிஷா – Cell No – 8056067623
எண்.4/425A, சந்திரபாண்டியர் நகர், எதிரில். தபால் தந்தி நகர் பேருந்து நிறுத்தம், மதுரை -625014.
தொடர்பு எண் – 0452-2642161