சாதி ஆணவக் கொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் – வ.ரமணி
விருதுநகர் – கோவிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின அருந்ததியர் இளைஞர் அழகேந்திரன் ஆணவ படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சாதி ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் வ.ரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
பொதுவில் ஆணவப் படுகொலை என்றாலே, சாதி மாறி காதல் செய்யும் காதலர்களையோ – கணவன் மனைவியாக வாழ்ந்து வருபவராகளையோ வலுக்கட்டாயமாக பிரித்து … மேல் சாதி என்று கருதிக் கொள்ளும் ஒரு பிரிவினர், கீழ் சாதி என்று அவர்கள் கருதும் சாதிகளைச் சேர்ந்த ஆணையோ பெண்ணையோ துள்ளத்துடிக்க கொன்று போடுவதாக இருக்கும். ஆனால், சமீப காலமாக பட்டியலின பிரிவைச் சேர்ந்த சாதிகளுக்குள்ளாகவே, ஏற்றத்தாழ்வு பாராட்டுவதும் அறுவாள் தூக்கும் போக்கும் தலைதூக்கி இருக்கிறது. இந்த பின்னணியில் இந்த விவகாரம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார், சாதி ஒழிப்பு முன்னணியின் ரமணி.
அவரது அறிக்கையில்,
கடந்த 25.624 அன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின அருந்ததியர் இளைஞர் அழகேந்திரன் (21) என்பவர், பட்டியலின பள்ளர் சாதியைச் சேர்ந்த ருத்ரப்பிரியா (19) என்றப் பெண்ணை காதலித்த காரணத்திற்காக பெண்ணின் தாய்மாமன் பிரபாகரன் உள்ளிட்ட கூலிப்படை கும்பலால் கொடூரமாக ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பதை சாதி ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
பெண்ணின் பெற்றோர் இருவரும் அரசு ஊழியர்கள், வசதியுள்ள குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.. குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவற்றில் இருவர் முத்தரையர் சாதியை சேர்ந்தவர்கள். கைது செய்யப்படாத சாதிவெறி கும்பலை தமிழக அரசு உடனடியாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும். இதற்குப் பின் புலத்தில் உள்ள மதவாத கும்பலை கண்டறிய வேண்டும்.
ஒடுக்கப்பட்ட பள்ளர் மக்களை காவி இந்துத்துவ சித்தாந்தத்திற்குள் கொண்டு சென்று நாங்கள் தேவேந்திர குல வேளாளர் என்றும் பட்டியல் வெளியேற்றம் போன்ற போலி சாதி பெருமையை ஆண்ட பெருமையை பேசி நாமும் உயர் சாதி எனும் பிம்பத்தை பள்ளர் மக்களிடையே சாதிய ஆணவத்தை கட்டமைத்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமியும் குற்றவாளியே. இதற்கு போட்டியாக ஜான் பாண்டியன் போன்றோரும் செயல்படுகின்றனர் என்பதை சுட்டிக் சுட்டிக்காட்டுகிறோம்.
சாதி ஆதிக்க சங்கங்களின் கட்சிகளின் சாதிவெறி அரசியலால் இன்று ஒவ்வொரு சொந்த சாதிக்குள்ளேயேயும் இத்தகைய கொலைகள் நடப்பது முன்பை விட அதிகரித்து உள்ளது. அண்மையில் நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சாதிவெறி கும்பலால்,அனைத்து சாதிகளின் சங்கங்களும் சேர்ந்து தாக்கப்பட்டது கண்முன் சாட்சியாக இருக்கிறது.
அதேபோல் எத்தனையோ சாதி மறுப்புத் திருமணங்கள் பள்ளர், பறையர்,அருந்ததியர் போன்ற ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குள்ளும், வன்னியர்,கவுண்டர், நாடார், நான்கு குலத்தோர் போன்ற சாதிக்கு இடையிலும் அன்றாடம் சாதி மறுப்புத் திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதும் இவர்களுக்கான பாதுகாப்பும் அவசியமாகிறது. இதனை அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கவுண்டர், நாடார், பள்ளர், முத்தரையர் போன்ற சாதி மக்களிடையே வேரூன்றி வரும் பாஜக கும்பல் அடித்தட்டுமக்களை சாதியின் பெயரால் மோதவிடும் போக்கு தலையெடுத்துள்ளதும் தொடர் கொலைகளுக்கு முக்கிய காரணம்.
இத்தகைய சூழலில் தமிழக முதல்வர் சாதி ஆணவக் கொலைக் குற்றங்களை தடுத்திட சிறப்புச் சட்டம் அவசியமில்லை என்று சட்டமன்றத்தில் கூறியிருப்பதை மறுக்கும் வகையிலே அழகேந்திரன் ஆணவக்கொலை இதற்கு சாட்சியாகியுள்ளது.
ஆணவக் கொலை என்பது வர்க்க முரணாகவும் சாதிய ஆதிக்க முரணாகவும் ஆணாதிக்க முரணாகவும் கொலையின் பின்புலமாக இருக்கிறது. அடிப்படையில் பெண்ணின் உரிமையோடு தொடர்புடையது. பெண், ஆண் இருவரின் வாழ்க்கை தேர்வு உரிமையோடு தொடர்புடையது. இதனை உடைக்கும் விதமாகவே காதல் உருவாகிறது.
சாதி மறுப்பு திருமணம் என்பது சாதி இறுக்கத்தை உடைப்பதாக உள்ளது. ஆகவே தான் சொல்கிறோம், இதற்கான சிறப்புச் சட்டம் தேவை. அதற்கான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பல இருக்கின்றன.
சட்டம் இயற்றுவதற்கு முன்பு மாநில அரசுகள் செய்ய வேண்டிய வழி முறைகள் என்னென்னெ என்பது குறித்த வழிகாட்டலும் கொடுக்கப்பட்டுள்ளன. இத்தனையும் இருந்தும் திமுக அரசு தட்டிக் கழிப்பதேன் ?
ஆகவே, தமிழக அரசு சாதி ஆணவக் கொலைக்கு எதிராக ராஜஸ்தான் மாநில அரசு சட்டம் இயற்றியது போல தமிழ்நாடு அரசும் உடனடியாக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். இது போன்ற நடவடிக்கையை அரசு மேற்கொள்ள தற்போது உள்ள சட்டங்கள் போதாது என்பதாலேயே தனிச் சட்டம் கோருகிறோம்.
அழகேந்திரன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க வேண்டும். சாதிமறுப்பு இணையர்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும்
மாவட்டம்தோறும் பாதுகாப்பு இல்லங்கள் அமைத்திட வேண்டும். வேலைவாய்ப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும். மாவட்டந்தோறும் சிறப்புக் குழுக்கள் அமைத்திட வேண்டும்.
வ.ரமணி
பொதுச் செயலாளர்
சாதி ஒழிப்பு முன்னணி