திருச்சி தூய வளனார் கல்லூரியில் சான்றிதழ் வகுப்புத் தொடக்க விழா !
திருச்சி தூய வளனார் கல்லூரியில் சான்றிதழ் வகுப்புத் தொடக்க விழா – திருச்சி தூய வளனார் கல்லூரியில் தமிழாய்வுத்துறையில் பயிலும் இரண்டாம் ஆண்டு இளங்கலைத் தமிழ் மாணவர்களுக்கு கோவில் கலை எனும் சான்றிதழ் வகுப்புத் தொடக்கவிழா நடைபெற்றது. இரண்டாம் ஆண்டு மாணவர் ஆஷிக்டோனி வரவேற்புரை நிகழ்த்தினார்.
தமிழாய்வுத் துறைத்தலைவர் முனைவர் ஞா. பெஸ்கி தலைமை வகித்து உரையாற்றினார். அவர் தலைமையுரையில், கோவில்களின் சிறப்பு, வேலைப்பாடுகள், ஓவியத்திறன் உள்ளிட்டவைகளை ஆராய்வதும், கோவிலின் வரலாற்றுக் கூறுகளையும், அரசியல் வெளிப்பாடுகளையும், பண்பாட்டு வெளிப்பாடுகளையும் கொண்டுள்ள கோவிலை அனைவரும் அறிந்து கொண்டு பலப்பட இந்தத்தாள் அறிமுகம் செய்யப்பட்டு நடத்தப்படுகிறது.
இங்குத் தொடங்குகிற உங்களின் ஆர்வம் இந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் இடத்திற்கு நீங்கள் உயர்ந்தால் அப்போதுதான் இந்த வகுப்பு முழுமைப்படும். அந்த அளவிற்கு நீங்கள் வளரவேண்டுமென, வாழ்த்தி நிறைவு செய்தார்.
தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற விளம்பரக்கலை பாட வகுப்புகளை நிறைவு செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டன . விளம்பரக்கலை பாடத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் அடைக்கலராஜ் மற்றும் முனைவர் ஆரோக்கிய தனராஜ் ஆகியோருக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
கணினி அறிவியல் புல முதன்மையர் முனைவர் அந்தோணி எல்டெரட் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சான்றிதழ் வகுப்பைத் தொடங்கி வைத்தார். அவர் உரையில் கல்வி என்பது வெறும் படிப்பு அல்ல. அது கற்றுக்கொள்வது. தமிழாய்வுத்துறை புதிது புதிதாகச் சிந்தித்து, மாணவர்களின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் பயன்படும் வகையில் இதுபோன்ற வகுப்புகளை நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது எனப் பதிவு செய்தார்.
மதிப்புக் கூட்டுப் பாட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் டே.வில்சன் மற்றும் முனைவர் கு.அந்தோணி ராஜா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். நிறைவில் இரண்டாம் ஆண்டு மாணவர் விஜய் பகவதி நன்றி கூறினார். இரண்டாம் ஆண்டு மாணவர் கோபிகா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
– ஆதன்