மல்லுக்கட்டினாரா அமைச்சர் சேகர்பாபு ! திருப்பதி தேவஸ்தானத்தில் நடந்தது என்ன?
ஆணையரை அனுமதிக்க மறுத்ததால்தான் மல்லுக்கட்டினாரா அமைச்சர் சேகர்பாபு ! திருப்பதி தேவஸ்தானத்தில் நடந்தது என்ன? திருப்பதி தேவஸ்தானத்தில் தமிழக இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பனை அனுமதிக்காததற்காக, துறை அமைச்சர் சேகர்பாபுவே தேவஸ்தான நிர்வாகிகளோடு மல்லுக்கட்டியதாக பரபரப்பு செய்தி ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தேவையில்லாத பிரச்சினையை சிலரின் தனிப்பட்ட ஆதாயத்திற்காக ஊதிப்பெருசாக்கி விட்டார்கள். அங்கே நடந்த விசயமே வேறு என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள்.
அங்குசம் சார்பில் சிலரிடம் பேசியதிலிருந்து, பிரத்யேகமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. “ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஆடி மாதம் 1-ஆம் தேதி ஆண்டுதோறும் திருமலை தேவஸ்தானத்துக்கு வஸ்திரபகுமாணம் எனும் மங்கலப் பொருட்களை கொண்டு செல்வது வழக்கமாக நடைமுறை.
இந்த வஸ்திர பகுமாணத்தில் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் 90 நபர்கள் பங்கேற்க மட்டுமே அனுமதி. அதுவும் சிறப்பு நிகழ்வாக நேரடியாக கொடிமரம் செல்லும் முகத்துவாரம் வழியாக செல்ல பத்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி. எஞ்சியுள்ள 80 பேரும் வழக்கமான பக்தர்களுக்கான வரிசையில்தான் வந்தாக வேண்டும்.
ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் அழைத்துச் செல்லப்படும் 90 நபர்கள் கொண்ட பட்டியலை, இந்து அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்டு உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள். வழக்கமான பக்தர்கள் செல்லும் வழியில் தரிசனம் செய்து திரும்பும் 80 நபர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
சிறப்பு நேர்வாக, முகத்துவராம் வழியாக செல்லும் 10 பேருக்கு மட்டும், ஒரு வாரத்துக்கு முன்பாக திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பு அனுமதியை பெற்றாக வேண்டும். முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்ட அந்த பத்து பேருக்கும் ஆதார் அட்டை, புகைப்படம் கொடுத்து அனுமதி பெற்றாக வேண்டும்.
அந்த 10 பேரில் அமைச்சர் என்றாலும் சரி IAS அதிகாரி என்றாலும் சரி இதுதான் நடைமுறை. சிறப்பு அனுமதி பெற்றதற்கான பதிவும் அடையாள அட்டையும் இருந்தால் மட்டுமே முகத்துவாரம் வழியே செல்ல அனுமதிப்பார்கள்.
ஆக, ஏற்கெனவே அனுமதி பெற்ற ஒருவரை அனுமதிக்க மறுப்பதற்கோ; அனுமதி பெறாத ஒருவரை உள்ளே அனுமதிப்பதற்கோ இங்கே இடமில்லை.
தற்போது, சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன் விசயத்தை பொருத்தவரையில், அந்த 10 பேர் பெயர் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை. முன்கூட்டியே, அதை அவரும் தெரிவித்துவிட்டார்.
இப்படி இருக்க, எதற்காகத்தான் சண்டைப் போட்டார் அமைச்சர் சேகர்பாபு என்ற கேள்வி எழுகிறது. அவருடன் சென்ற ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் உறவினர் ஒருவர் உள்ளே வர தாமதம் ஆனதால், அவர்களை விரைவாக உள்ளே வர அனுமதிக்குமாறு அங்கு இருந்த பாதுகாவலர்களிடம் அறிவுறுத்தினார். அவ்வளவுதான். “ என்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஸ்ரீரங்கம் இணை ஆணையர் மாரியப்பனிடம் பேசினோம். “அந்த 10 பேர் வி.ஐ.பி. பட்டியலில் நான் இடம்பெறவே இல்லை. முன்கூட்டியே நான் சொல்லிவிட்டேன். என் பெயரை சம்பந்தம் இல்லாமல் பயன்படுத்திவிட்டார்கள். மற்றபடி, வஸ்திரபகுமாணம் நிகழ்வு நல்லபடியாக நிறைவுற்றது.” என்கிறார் அவர்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.