புதிய சிந்தனைகளின் ஊற்றாக வெளியாகும் முதல் சமூகநீதி OTT தளம் – பெரியார் OTT தளம் தொடக்கம் !
புதிய சிந்தனைகளின் ஊற்றாக வெளியாகும் முதல் சமூகநீதி OTT தளம் – பெரியார் OTT தளம் தொடக்கம் ! திராவிட இயக்க வரலாற்றில் முதல் முறையாக புதிய முயற்சியாக பெரியார் ஓடிடி தளம் தொடங்கப்பட்டுள்ளது. “PERIYAR VISION-Everything for everyone” என்ற பெயரிலான இந்த ஓடிடி தளத்தின் தொடக்க விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஓடிடி தளத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். பெரியார் ஓடிடி தொடக்க நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., நடிகர் சத்யராஜ் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். பெரியாரின் கருத்துகளை உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த ஓடிடி தளமானது அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ்,“இன்றைக்கும் உலகம் முழுவதும் மன அழுத்தம் தொடர்பான பிரச்சினை தான் அதிகம் பேசப்படுகிறது. இதை வைத்து தான் கார்ப்பரேட் சாமியார்கள் எல்லாரும் காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து மன அழுத்தம், சோர்வு போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களிடம் ஒன்று கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் எந்த கார்ப்பரேட் சாமியாரிடமும் போக வேண்டாம். வாழ்வியல் சிந்தனை படித்தால் எல்லாம் சரியாக போகும்.
சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலின்போது நான் குறிப்பிட்ட சில தொகுதிகளைப் பற்றி மட்டுமே விசாரிப்பேன். எனக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் தான் ஓட்டு. நான் கோவை தொகுதி பற்றி என்னை அறியாமல் கேட்பேன். அந்த வகையில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி ஜெயிக்கக்கூடாது என நினைப்பார்கள். அவர் ஜெயித்துவிட்டால் நாடாளுமன்றத்தை ஆட்டிப்படைக்கிறார் என்பது தான் காரணம். கனிமொழி இரும்பு பெண்மணி என சொல்வதற்கு முழு தகுதியுடையவர்.
ஓடிடி தளம் என்பது தற்போதைய காலக்கட்டத்தில் சினிமாவுக்கு மிக முக்கியமான தேவை. கலைஞர் கருணாநிதியின் பராசக்தி படம் தொடங்கி இன்றைக்கு வரை சென்சார் போர்டு பிரச்னை என்பது உள்ளது. நான் தோழர் சேகுவரா என்ற படம் நடித்துள்ளேன். அதற்கும் சென்சார் பிரச்னையாக உள்ளது.
புதிய சிந்தனைகளை சொல்ல ஓடிடி தளம் பெரும் உதவியாக உள்ளது. நான் நடித்த பெரியார் படம் டிஜிட்டலில் மெருகேற்றியுள்ளார்கள். அதனை ரீ-ரிலீஸ் செய்யும்போது யாராவது பிரச்னை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் எதிர்ப்பில் தான் நாங்கள் வளர்வோம்.
பெரியார் பற்றி இன்றைய இளைஞர்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். எனக்கு பெரியாராக நடித்த வாய்ப்பளித்த இயக்குநர் ஞானசேகரனுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி
”தந்தை பெரியார் உலகளாவிய மானுடத் தலைவராக பார்க்கப்படுகிறார். அவரது வரலாறு, கொள்கைகள் என அனைத்தையும் கலை வடிவமாக கொண்டு செல்லும் திராவிட இயக்கத்திற்கு பாராட்டுகள். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் சமூக ஊடகங்கள் பெருகி இருக்கக்கூடிய சூழலில் இளைஞர்களிடம் தந்தை பெரியாரின் கொள்ளைகளை எடுத்துரைக்க உருவாக்கப்பட்ட முதல் சமூகநீதி OTT தளம் தொடங்கப்பட்டுள்ளது. கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் OTT தளம் இதுவாகதான் இருக்கும். அனைத்திலும் முன்னோடியாக இருக்கக்கூடிய திராவிடர் இயக்கம் இதிலும் முன்னோடியாக இருக்கிறது” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துப் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
– கே.எம்.ஜி.