சுவடு மன்சூர் உள்ளிட்ட 6 தோழர்கள் மீதான ஊபா வழக்கைத் திரும்பப் பெறுமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள்
சுவடு மன்சூர் உள்ளிட்ட 6 தோழர்கள் மீதான ஊபா வழக்கைத் திரும்பப் பெறுமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள்
சுவடு மன்சூர் உள்ளிட்ட 6 தோழர்கள் விடுதலை வேண்டி நிருபர்கள் சங்கக் கட்டிடத்தில் ஊடகச் சந்திப்பு நடைபெற்றது. அதற்கு முன்னதாக நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், சுவடு மன்சூர் மற்றும் தோழர்கள் விடுதலைக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளருமான தோழர் தியாகு, முன்னாள் நீதியர் து.அரிபரந்தாமன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய தலைவர் சுரேஷ், மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் செ. ஹைதர் அலி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் ஏ.கே.கரீம், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க. குணசேகரன், வெல்ஃபேர் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அப்துல் ரகுமான், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் செயலாளர் செந்தில், வழக்கறிஞர் கம்ருதீன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சண்முகராஜா, மனிதநேய ஜனநாயக கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநிலச் செயலாளர் நூருல் அமீன், சுயாட்சி இயக்கத்தின், இந்திய ஒற்றுமை இயக்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மனிதி செல்வி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர் ஆவடி நாகராசன், ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி, பேராசிரியர் சிவகுமார், சுவடு மன்சூரின் மகன் தோழர் ஃபைசல் உசைன் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதன் பின்னர், நடைபெற்ற ஊடக சந்திப்பில் பின்வரும் அறிக்கை வெளியிடப்பட்டது.
சிறுபான்மை பாதுகாப்புப் பேரவையின் தலைவர், சுவடு இணைய இதழ் ஆசிரியர், மூத்த பத்திரிகையாளர் சுவடு மன்சூர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்ற 23-5-2024 காலை 6.00 மணியளவில் சுவடு மன்சூர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை ஊபா (UAPA) எனப்படும் ’சட்டப்புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்’ கீழ் தமிழ்நாடு காவல்துறையினர் தளைப்படுத்தினர். மன்சூர் அவர்களின் மகன்களில் ஒருவரான ஹமீத் ஹுசைனும் கைது செய்யப்பட்டார். இவர் பெட்ரோலியம் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் வலையொளியில் பதிவேற்றிய காணொளிகள் சிலவற்றைக் காரணங்காட்டியே சுவடு மன்சூர், முனைவர் ஹமீது ஹுசைன் ஆகியோருடன் மன்சூரின் இளைய மகன் அப்துர் ரஹ்மான் உமரியும் ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதே வழக்கில் பத்திரிகையாளர் முஹம்மது மோரிஸ், அஹமது அலி உமரி, காதர் நவாஸ் என்கிற ஜாவித் ஆகிய மூவரும் 25-5-2024 காலை 8.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.
சுவடு மன்சூர் அவர்களும் அவர் துணைவியாரும் 31-5-2024இல் ஹஜ் யாத்திரைக்குப் புறப்பட இருந்த நிலையில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுவடு மன்சூர் திராவிட இயக்கச் சிந்தனை கொண்டவராக, மறுமலர்ச்சி திமுகழகத்தில் முனைப்புடன் இயங்கி வந்தவர். சுவடு இணைய இதழின் ஆசிரியர், சிறுபான்மைப் பாதுகாப்பு பேரவையின் தலைவர், பலதரப்பட்ட சமூக நலன் மற்றும் மனித உரிமை சார்ந்த செயல்பாடுகளுக்குக் குரல் கொடுப்பவர். நீட், பொது சிவில் சட்டம், மணிப்பூர் போன்ற பல பொது நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் மீட் (MEET) அரங்கில் நடத்தப்படுவதற்கு முன்முயற்சி எடுத்தவர்.
முனைவர் ஹமீது ஹுஸைன் இஸ்லாமியக் கருத்தியலில் நம்பிக்கை கொண்டு அதனைக் கருத்தியல் தளத்தில் மட்டுமே மக்கள் தளத்தில் முன்வைப்பவர், சுவடு மன்சூர் நடத்திய கருத்தரங்க நிகழ்ச்சிகளில் முனைவர் ஹமீது ஹுசைனும் சொற்பொழிவாற்றியுள்ளார். மீட் அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சிகள் பலவற்றில் தோழர் தியாகு, முன்னாள் உயர்நீதிமன்ற நீதியர் திரு அரிபரந்தாமன், இப்போது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருக்கும் சசிகாந்த் செந்தில் உட்பட்ட பலரும் உரையாற்றியுள்ளனர்.
சுவடு மன்சூர், ஹமீது ஹுசைன் போன்றவர்கள் ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற இயக்கத்திற்கு ஆள் சேர்த்தாகத் தமிழகக் காவல்துறை ஊடகங்களில் ஒரு பொய்ச் செய்தியைப் பரப்பியுள்ளது. ஹிஸ்புத் தஹ்ரீர் என்பது பன்னாட்டளவிலான இசுலாமிய இயக்கமே ஆகும். அது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமும் அல்ல. இசுலாமிய இயக்கங்கள் பலவற்றையும் தடை செய்து பட்டியலிட்டுள்ள அமெரிக்க அரசு இந்த ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பைத் தடை செய்ய மறுத்து விட்டது.
ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு பரப்புரை செய்யும் ’கலிஃபா’ என்ற கருத்து இந்தியாவுக்குப் புதியதே அன்று. முதல் உலகப் போருக்குப் பின் துருக்கியில் பிரித்தானியக் கொள்கையை எதிர்த்து இந்தியாவில் நடைபெற்ற கிலாபத் இயக்கத்தை (1919-1922) மகாத்மா காந்தி முனைப்புடன் ஆதரித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
நாம் இந்துத்துவத்தை எதிர்க்கலாம், ஆனால் அதை ஒரு கருத்தாகப் பரப்புரை செய்யும் கருத்துரிமையை மறுக்க முடியாது அல்லவா? அதே போலத்தான் நம் காலத்தில் கலிஃபா என்ற கருத்தை சட்டத்துக்குட்பட்டு அமைதியான வழிகளில் பரப்புரை செய்யும் உரிமையை எவருக்கும் மறுக்க முடியாது. முனைவர் ஹமீது ஹுசைன் அவர்களோ இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மற்றவர்களோ எவ்வித வன்முறையிலும் ஈடுபட்டதாகவோ வன்முறையைத் தூண்டியதாகவோ குற்றச்சாட்டுகூட இல்லை.
இந்த வழக்கில் ஊபா சட்டத்தின் பிரிவு 13இன் படி குற்றம் சாட்டியிருப்பது எவ்வித அடிப்படையும் அற்றது. ஏனென்றால், எவ்வித சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடவில்லை.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான சான்றாக முன்வைக்கப்பட்டுள்ள வலையொளி எதிலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவோ இந்திய அரசுக்கு எதிராக ஒரு பிரிவு மக்களைத் தூண்டிவிடுவதாகவோ பேசவில்லை. சுவடு மன்சூரும் அவர் மகன்களும் மற்றவர்களும் நீதிமன்றத்தில் பிணை விடுதலை பெறுவதைத் தடுப்பதற்காகவே காவல்துறையால் வலிந்து ஊபா சட்டம் ஏவப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.
இந்திய ஒன்றிய அரசு ஏற்கெனவே இதுபோன்ற வழக்குகளில் என்.ஐ.ஏ. வையும் ஊபா சட்டத்தையும் பயன்படுத்தி இசுலாமியர்கள் பலரையும் தமிழ்நாட்டிலும் தளைப்படுத்தி வரும் நிலையில், தமிழக அரசின் கீழ் செயல்படும் காவல்துறையும் ஊபா சட்டத்தைப் பயன்படுத்துவது பாசிச எதிர்ப்பு சனநாயக ஆற்றல்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகும். சனநாயகத்திலும் சமூகநீதியிலும் தெளிந்த நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்ட சுவடு மன்சூர் உள்ளிட்ட அறுவரையும் ஊபா பொய்வழக்குத் தொடுத்துச் சிறையில் அடைத்திருக்கும் கொடுமையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் உடனே தலையிட்டு சுவடு மன்சூர் உள்ளிட்ட அறுவர் மீதும் தொடரப்பட்டுள்ள ஊபா வழக்கைத் திரும்பப்பெற்று அவர்களை விடுதலை செய்ய ஆணையிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்
தமிழ்நாடு அரசு ஊபா போன்ற பாசிச சட்டத்தைப் பயன்படுத்த மாட்டோம் எனக் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இது குறித்து தமிழக காவல்துறைத் தலைவரையும் சட்டத்துறை அமைச்சரையும் தேவைப்பட்டால் தமிழக முதலமைச்சரையும் சந்தித்து முறையிட இருக்கிறோம். அதன்பிறகு அடுத்தக் கட்ட கூட்டு நடவடிக்கைகளை முடிவெடுத்து முன்னெடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்.