அந்தரத்தில் நின்ற அய்யர்மலை ரோப்கார் ! கதறியழும் மூன்று பெண்கள் ! சேவை தொடங்கி ஒரு நாள்தான் ஆகுது!
தொடங்கி வைத்து 26-ஆவது மணிநேரத்திலேயே நடுவழியில் நின்றது ரோப்கார் ! குளித்தலை அய்யர்மலையில் பரபரப்பு!கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, புகழ்பெற்ற அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரூ.9.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ரோப்கார் சேவையை நேற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிலையில், இன்று பலத்த காற்று வீசியதன் காரணமாக ரோப்கார் திடீர் பழுதாகி பாதியில் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக, மலையடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு கிளம்பிய சற்று நேரத்திலேயே நான்கு பெட்டிகளும் தடம்புரண்டதால் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. தடம்புரண்ட நான்கு பெட்டிகளையும் சரிசெய்யும் பணியில் ரோப்கார் சேவை மைய பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
கீழிருந்து நான்கு பெட்டிகள் கிளம்பும் அதே சமயத்தில், அதன் எதிர்திசையில் மேலிருந்து கீழாக நான்கு பெட்டிகளும் இறங்கத் தொடங்கும்.
இதன்காரணமாக, தற்போது தடம்புரண்ட நான்கு பெட்டிகளையும் சரி செய்து, மேலே அனுப்பி வைத்தால் மட்டுமே, எதிர்த்திசையில் நடுவழியில் சிக்கித்தவிக்கும் நான்கு பெட்டிகளும் கீழே இறங்க முடியும்.
மலை உச்சியில் இருந்து கீழே இறங்கத் தயாரான நான்கு பெட்டிகளில், திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், ஆழுந்தூரை அடுத்த பள்ளப்பட்டியை சேர்ந்த பெரியக்காள் வயது 43, ராசம்மாள் வயது 45, கோசலை வயது 42 ஆகிய மூன்று பெண்கள் ரோப்காரில் சிக்கித் தவிக்கின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடி உயரத்திலும், சுமார் ஆயிரம் படிக்கட்டுகளையும் கொண்ட கோவில் இது. குறிப்பாக, வயதானவர்களும், பெண்களும் எளிதில் ஏற முடியாத அளவுக்கு செங்குத்தான பாதையைக் கொண்டிருக்கிறது.
இதன் காரணமாகவே, ரோப்கார் சேவை வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட இச்சேவை, ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் திமுக ஆட்சிக் காலத்திலேயே பணி நிறைவுற்று பயன்பாட்டுக்கு வந்த நிலையில் சரியாக 26-ஆவது மணி நேரத்தில் எதிர்பாராத பழுது ஏற்பட்டு சேவை நிறுத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நௌஷாத்.