தமிழகத்தில் புதியதாக உதயமானது ” பட்டியல் சமூகப் பாதுகாப்புக் கூட்டமைப்பு ! ” நோக்கம் என்ன ?
தமிழகத்தில் புதியதாக உதயமானது ” பட்டியல் சமூகப் பாதுகாப்புக் கூட்டமைப்பு ! ” நோக்கம் என்ன ? தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், பொதுவில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதாகவும்; ரவுடிகள் மத்தியில் போலீசை பற்றிய அச்சம் இல்லாமல் போய்விட்டது என்றும்; அந்த அளவுக்கு ஆளும் திமுக அரசு அலட்சியமாக இருந்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அதிலும் குறிப்பாக, பி.எஸ்.பி. கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படையினரால் கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரத்தையடுத்து, “தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்ற குரல் மேலெழும்பி இருக்கிறது. இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டு இந்த விவகாரம் தொடர்பாக, ஆளும் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்த அதிருப்திகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த பின்னணியில், வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகள், வெவ்வேறு தளங்களில் இயங்கும் பட்டியலின அமைப்புகள் ஒருங்கிணைந்து பட்டியிலன மக்களின் உரிமைக்காக ஒன்றிணைந்து செயல்படுவது என்ற நோக்கத்தில் ”பட்டியல் சமூகப் பாதுகாப்புக் கூட்டமைப்பு” என்ற ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
தமிழ் முதல்வனை ஒருங்கிணைப்பாளராக கொண்ட இக்கூட்டமைப்பில், இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன், நீலப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பேரா. T.M.புரட்சிமணி உள்ளிட்டு பல்வேறு அமைப்புகள் இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
இக்கூட்டமைப்பின் அறிமுகக்கூட்டத்தில், ” ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை ப.பா.மோகன், சங்கர சுப்பு, பொ.ரத்தினம், தி.லஜபதிராய் மற்றும் திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை அரசு வழக்கறிஞர்களாக நியமித்து அல்லது அவர்களது மேற்பார்வையுடன் வெளிப்படையாக நடத்த வேண்டும்.
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் 16(4ஏ) சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும். பதவியிறக்கம் செய்யப்பட்ட பட்டியல் சமூக அலுவலர்களுக்கு மீண்டும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.” என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களையும் நிறைவேற்றியிருக்கின்றனர்.
இக்கூட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”பட்டியல் சமூகத்திற்கெதிரான வன்முறைகளைத் தடுக்கவும், சாதிய வன்முறைகளுக்கு எதிராகப் போராடவும், சமத்துவச் சமூகத்தை உருவாக்கவும் நீதியின்பால் அக்கறை கொண்ட இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆயினும் ‘சமூகநீதி’ எனும் பெயரில் சாதி வன்முறையாளர்களுக்கு ஆதரவாக ஆளும் கட்சியும் அரசு எந்திரங்களும் இருக்கிறபடியால் தொடர்ந்து சாதிய வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பட்டியல் சமூகத் தலைவர்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகின்றன. இந்தப் போக்கின் உச்சமாக பகுஜன் சமாஜ் கட்சி என்கிற தேசியக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டிருக்கிறார்.
மேலும் பட்டியல் சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படையாகவும் உரிமையாகவும் விளங்குகிற, பட்டியல் சமூகத்தலைவர்களே உருவாக்கிய கல்வி அமைப்புகளைச் சிதைக்கும் முயற்சியும் நடக்கிறது. அதற்கெதிராக குரல் கொடுக்கும் ஆசிரியர் சங்கங்களின் குரல்வளையை அரசின் அதிகாரங்கொண்டு நெரிக்கும் போக்கும் வெளிப்படையாக நடக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களிலும் பட்டியல் சமூக மாணவர்கள், ஆசிரியர்களுக்கெதிரான பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன.
பட்டியல் சமூக உயரதிகாரிகள் ஆயிரம் பேர் பதவியிறக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக பதவி உயர்வில் இடஒதுக்கீடு பட்டியல் சமூகத்திற்கு தமிழ்நாட்டில் மறுக்கப்படுகிறது.
மேலும் பட்டியல் சமூக முன்னேற்றத்திற்காக உருவாக்கப்படும் திட்டங்கள் யாவும் முறையாகச் சென்றடைவதில்லை. அத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் குறைவான நிதியும் வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகின்றது. அல்லது செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்றது.
இந்நிலையில் தொடர்ந்தும், அதிகரித்தும் வருகின்ற பட்டியல் சமூகத்திற்கெதிரான இவ்வாறான போக்குகளுக்கு ஒருங்கிணைந்து வலிமையுடன் குரல் கொடுக்கவும், சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவுமான குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் பட்டியல் சமூக இயக்கங்கள், முற்போக்கு இயக்கங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து “பட்டியல் சமூகப் பாதுகாப்புக் கூட்டமைப்பு” உருவாக்கப்படுகிறது. இக்கூட்டமைப்பு 27.07.2024 ஆம் நாளில் முதலாவதாக நடைபெற்ற ‘கட்டமைப்புக் கூட்டத்திலிருந்து’ முறையாகத் துவங்குகிறது.
பட்டியல் சமூகப் பாதுகாப்புக் கூட்டமைப்பில் பங்குபெறும் அமைப்புகள், வெவ்வேறு கொள்கைத்திட்டங்களைக் கொண்டிருந்தாலும், வெவ்வேறு கூட்டணியில் இருந்தாலும், “பட்டியல் மக்களுக்கு எதிரான பிரச்சினைகளை எதிர்கொள்ளுதல்” என்ற குறைந்தபட்ச செயல்திட்டத்தில் ஒருங்கிணைந்து கூட்டமைப்பாகச் செயல்பட உறுதியேற்கின்றன.
இவ்வாறாக 27.07.2024 அன்று உருவாகி நடைபெற்ற ‘பட்டியல் சமூகப் பாதுகாப்புக் கூட்டமைப்பின்’ முதல் கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இத்தீர்மானங்களில் ஒப்பமிடும் இயக்கங்கள் யாவும் ‘பட்டியல் சமூகக் கூட்டமைப்பின்’ அங்கங்களாகவும் முறையாக அறிவிக்கப்படுகிறது.” என்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மேலும், இக்கூட்டமைப்பின் முதல் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில்,
“பட்டியல் மக்கள் பிரச்சனைகளுக்காகக் களமாடிவரும் இயக்கத் தலைவர்களுக்கும் செயல்பாட்டாளர்களுக்கும் தக்க பாதுகாப்பினை அரசு வழங்க வேண்டும்;
அண்மையில் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலைமீது தக்க நீதி வேண்டும். தக்க நடவடிக்கை எடுத்து கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கினை மூத்த வழக்கறிஞர்கள் ப.பா.மோகன், சங்கர சுப்பு, பொ.ரத்தினம், தி.லஜபதிராய் மற்றும் திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை அரசு வழக்கறிஞர்களாக நியமித்து அல்லது அவர்களது மேற்பார்வையுடன் வெளிப்படையாக நடத்த வேண்டும். ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இணையர் திருமதி பொற்கொடி உள்ளிட்ட குடும்பத்திற்கு பலத்த பாதுகாப்பினை வழங்க வேண்டும்;
பட்டியல் மக்கள் மீதான பாதிப்புகளில் உரிய நீதியினைப் பெற்றுத் தந்து வருகிற மக்கள் வழக்கறிஞர்கள் ப.பா.மோகன், சங்கர சுப்பு, பொ.ரத்தினம், தி.லஜபதிராய் போன்றோருக்கு அரசு உரிய பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்;
சாதிய ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகப் போராடுவோருக்குக் கூட்டமைப்புத் துணை நிற்கும்;
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/கள்ளர் பள்ளிகளைப் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். ஆதிதிராவிடர்/பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகளுக்கான தனி இயக்குநரகம் அமைக்கப்பட வேண்டும். இப்பள்ளிகளை வருவாய்த்துறை நிர்வாகத்திலிருந்து விடுவித்து, கல்வித்துறை அதிகாரிகளைக் கொண்டு இயக்கவேண்டும்;
ஆதிதிராவிடர்/பழங்குடியினர் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை அரசு விரைந்து நிரப்ப வேண்டும். குறிப்பாக பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகளில் அரசின் உரிய தேர்வுமுறை வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆறு ஆண்டுகளாகப் பணியாற்றிய தொகுப்பூதிய ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும்.
இதற்காகக் குரல் கொடுத்த ஆசிரியர்-காப்பாளர் சங்கங்களின் நிர்வாகிகள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும்;
தமிழகத்தில் நீண்டகாலமாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சுமார் 25,000 பின்னடைவுக் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்;
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் 16(4ஏ) சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும். பதவியிறக்கம் செய்யப்பட்ட பட்டியல் சமூக அலுவலர்களுக்கு மீண்டும் பதவி உயர்வு வழங்க வேண்டும்;
ஆரம்ப மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதியப் பாகுபாடுகளைக் களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்;
பட்டியல் சமூக மக்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களுக்கான நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக சிறப்பு உட்கூறுத் திட்டங்களுக்கான அந்தந்த ஆண்டுக்கான நிதியை நடப்பு ஆண்டிலேயே முழுமையாகப் பயன்படுத்துவதோடல்லாமலால் பயன்படுத்தியதை ஆண்டுதோறும் வெள்ளையறிக்கையாக வெளியிடவேண்டும்.
பட்டியல் மக்களுக்கான நிதிச் செலவீனங்களை நிதித்துறை நோடல் அதிகாரி நிர்வகிப்பதைத் தவிர்த்து, ஆதிதிராவிடர் நலத்துறையே நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;
பஞ்சமி நில மீட்பிற்காக தனிச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்;
பொதுப் போக்குவரத்துத் துறையைத் தனியார்மாயமாக்கக்கூடாது;
தற்காலிகக் கௌரவப் பேராசிரியர்களை விரைந்து நிரந்தரப்படுத்தவேண்டும். அதுபோல தற்காலிக செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோர் அரசு ஊழியர்களாக்கப்பட வேண்டும். ” ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றனர்.
இக்கூட்டமைப்பில், செ.கு.தமிழரசன், தலைவர்- இந்தியக் குடியரசுக் கட்சி; அரங்க குணசேகரன், தலைவர்- தமிழக மக்கள் புரட்சிக் கழகம்; பேரா.T.M.புரட்சிமணி, தலைவர்- நீலப்புலிகள் இயக்கம்; தங்கராஜ், செயலாளர்-இந்தியக் குடியரசுக் கட்சி; பூங்காநகர் ப.காமராஜ், மாநிலத் துணைச் செயலாளர் -புரட்சி பாரதம் கட்சி; வ.ரமணி, செயலாளர்-சாதி ஒழிப்பு முன்னணி; அம்பேத் வெங்கடேஷ், தலைவர்-மக்கள் நீதிக் கட்சி; வழக்கறிஞர் S. அன்பின் பொய்யாமொழி, நிறுவனர்-பழந்தமிழர் முன்னேற்றக் கழகம்; அன்புதாசன், தலைவர்- டாக்டர் அம்பேத்கர் பேரவை; T.செண்பகம், வட சென்னை மாவட்டச் செயலாளர்- இந்திய மாதர் தேசிய சம்மேளனம்; M.ராஜன், தலைவர்- இந்தியக் குடியரசுக் கட்சி (சக்திதாசன் பிரிவு); A.D.E.இராமமூர்த்தி, தலைவர்- இரட்டைமலை சீனிவாசனார் மக்கள் இயக்கம்; பேரா.கி.கதிரவன், ஒருங்கிணைப்பாளர்- தமிழ்நாடு பறையர் பேரவை; ச.செந்தில்குமார், தலைவர்- அம்பேத்கர் சமத்துவ இயக்கம்; நுங்கை வீ.பா.இளையபாபு, தலைவர் -அம்பேத்கர் மக்கள் கழகம்; ஜெயகிருஷ்ணன், பெரியாரிய அம்பேத்கரிய மக்கள் இயக்கம்; M.வேலு, Younited India சமூக அமைப்பு; P.G.அஜிதா, தலைவர்-அகில இந்திய பெண்ணுரிமை இயக்கம்; Y.அருள், NAPM -TN, பச்சைத் தமிழகம்; சு.கோபால், பொதுச் செயலாளர்- CPDR தமிழ்நாடு; வெங்கடேஷ், பொதுநல மாணவர் இயக்கம்; இரா.பரமேஸ்வரன், Younited India சமூக அமைப்பு; பேரா.முனைவர் R.குணசீலன், நீலப்புலிகள் இயக்கம் –சென்னை; பேரா.முனைவர் ப.சுதர்சன், நீலப்புலிகள் இயக்கம்; பேரா. முனைவர் வெ.வெங்கடாசலம், நீலப்புலிகள் இயக்கம் ; RMS.ராஜன், சென்னை மாவட்டம்-புரட்சி பாரதம்; சந்திரா, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ; T.லக்ஷ்மி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம்; N.K.சரவணன், வழக்கறிஞர்; C.J.சுரேஷ், இந்தியக் குடியரசுக் கட்சி ; வா.கபிலன் -இந்தியக் குடியரசுக் கட்சி; S.ரவிச்சந்திரன் – அஞ்சல்துறை ஊழியர் சங்கம்; க.ராஜா, K.சங்கர், M.சேவியர், கோ.ரமேஷ், M.G.ராஜா பீமாராவ் மற்றும் தமிழ் முதல்வன், தலைவர் -அறிவுச் சமூகம், (ஒருங்கிணைப்பாளர் – பட்டியல் சமூக பாதுகாப்புக் கூட்டமைப்பு) ஆகிய அமைப்புகள் இந்தக்கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.
செய்தி வெளியிட்டு ஊக்கமளித்தமைக்கு நன்றி! தொடர்ந்து இணைந்திருப்போம்! மகிழ்ச்சி!