தேசியக் கல்விக் கொள்கை, பிஎம்ஸ்ரீ பள்ளிகளை எதிர்ப்பதால் சம்பளத் தொகை ஒதுக்கீடு செய்யாமல் பழிவாங்குகிறதா ஒன்றிய அரசு ?
தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றிவரும் சுமார் 25,000-க்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அனைவருக்கும் செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படாததை சுட்டிக்காட்டி, தீபாவளி பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் தாமதமின்றி சம்பளத்தை வழங்குமாறு தமிழக கூட்டணியின் சார்பில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
இயக்கத்தின் மூத்த தலைவர் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், வா.அண்ணாமலை , தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் அ. வின்சென்ட் பால்ராஜ், மாநிலத்தலைவர் அ.எழிலரசன், மாநிலப் பொருளாளர், ஆ.இராஜசேகர் மற்றும் மாநில மகளிரணிச் செயலாளர் கு.ரமாராணி ஆகியோர் சார்பில் வெளியான அறிக்கையில், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தேசியக் கல்விக் கொள்கை, விஸ்வகர்மா திட்டம், நீட் தேர்வு, பிஎம்ஸ்ரீ பள்ளி, எல்லாவற்றையும் எதிர்ப்பதோடு மட்டுமன்றி, WE REJECT NEP 2020 என கொள்கை ரீதியாக எதிர்த்து போராடி வருகிறோம்.
இருமொழிக் கொள்கையினை மட்டும்தான் ஏற்றுக்கொள்வது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
மத்திய நிதிஅமைச்சர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது கூட தமிழ்நாடு என்ற பெயர் வராமல் பார்த்துக் கொண்டார்கள். தமிழக ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட ஆசிரியர் இயக்கங்கள் அப்பொழுதே எதிர்ப்பினை தெரிவித்தோம். நிதி ஒதுக்கீட்டில் ஒருதலைபட்சமாக இன்று வரை நடந்து வருகிறார்கள்.
தேசியக் கல்வி கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்: பிஎம்ஸ்ரீ பள்ளிகளை தொடங்கிட வேண்டும்; மும்மொழிக் கொள்கை திட்டத்தை ஏற்றுக் கொண்டு ஹிந்தி கற்பிக்க வேண்டும் … என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால், அந்த கொள்கைப் போரில் சமரசம் இல்லாமல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியினைக் காட்டி வருகிறார்கள்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்கான நிதியினை விடுவிக்காமல் பழிவாங்கி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை சந்தித்து வலியுறுத்தியும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியை ஒதுக்கீடு செய்தார்களே தவிர, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்கு நிதியை அவர்கள் ஒதுக்கீடு செய்யவில்லை.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் அவர்கள் பணியாற்றி வந்தாலும் தமிழ்நாடு மாநில அரசின் கீழ் பள்ளிக்கல்வித் துறையில்தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படாததால் அவர்கள் குடும்பம் நடத்துவதற்கும், தீபாவளி பண்டிகை காலம் என்பதாலும் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறார்கள்.
கனிவான வேண்டுகோள்!
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும், ஆசிரியர் பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், கணக்காளர்கள், தணிக்கை மேலாளர்கள், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் என 25,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் கிடைப்பதற்கு ஆணை வழங்கி உதவிட வேண்டுமாய் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வேண்டுகிறோம்.” என்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.