தமிழ்நாட்டில் பஞ்சமி நிலங்களை அடையாளம் காண அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு என்ன ஆயிற்று? – கேள்வி எழுப்பும் எம்.பி. ரவிக்குமார் !
பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து அவற்றை மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைப்பதற்கான வழிவகைகளை ஆராய சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி 2015 இல் தமிழக அரசு குழு அமைத்து அரசாணை ஒன்றை வெளியிட்டது ( Go 357 Dt 08.10.2015 )
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கையை ஏற்று திமுக ஆட்சியின்போது 2011 ஜனவரியில் அமைக்கப்பட்ட நீதிபதி மருதமுத்து கமிஷனை அதன்பின் பதவியேற்ற அதிமுக அரசு கலைத்தது. அதன் பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கொன்றில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்ததால் ( WP 24818/2015 Dt 12.08.2015) உயர்நிலைக் குழுவை அதிமுக அரசு அமைத்தது.
அந்த உயர்நிலைக் குழுவில் கூடுதல் தலைமைச் செயலாளர்/ நில நிர்வாக ஆணையர், வருவாய்த் துறையின் அரசு செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் அரசு செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
அந்தக் குழு 2.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தைக் கண்டறிந்திருப்பதாக 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதியிட்ட தி இந்து ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியானது. அவ்வாறு அடையாளம் காணப்பட்ட அந்த 2.5 லட்சம் ஏக்கரில் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக்கூட அதிமுக ஆட்சியில் இருந்தவரை கையகப்படுத்தவில்லை, தகுதியானவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கவுமில்லை.
அதிமுக ஆட்சி முடிவுற்று திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரும் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட அந்த உயர்நிலைக்குழு தொடரவே செய்கிறது.
அந்த உயர்நிலைக்குழு, தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு பஞ்சமி நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிடவேண்டும். அந்த நிலங்களைக் கையகப்படுத்தவும், தகுதியானவர்களுக்கு அவற்றைப் பிரித்துக்கொடுக்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
– ரவிக்குமார், எம்.பி. விடுதலை சிறுத்தைகள் கட்சி.