திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு செயல்முறை விளக்கம்
பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது குறித்து செயல்முறை விளக்கம்…. தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது புத்தாடைகளும், பட்டாசும் தான். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயங்களில் பட்டாசு விபத்துக்கள் காரணமாக பலரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர் .
இதில் ஒவ்வொரு ஆண்டும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைக்கு சுமார் 60 பேர் வரை கண்ணில் ஏற்பட்ட தீக்காய்களுக்காக சிகிச்சைக்காக வருகின்றனர் . துரதிஷ்டவசமாக இந்த விபத்தில் பார்வை இழந்தவர்களும் உண்டு.
இதனால் தீபாவளியை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்புடன் கொண்டாட திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை தீயணைப்புத்துறை மற்றும் ரோட்டரி சங்கங்கள் பங்களிப்புடன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது .
இதற்காக நடைபெற்ற விழிப்புணர்வு செயல்முறை விளக்கத்தில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி ஜெகதீஷ் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்கும் வழிமுறைகள், விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரதீபா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு, ரோட்டரி சங்கங்களின் டாக்டர்கள் சீனிவாசன், மோகன் குமார், ராமச்சந்திர பாபு, முகமது தாஜ் ,தீபக் ஆகியோர் விழிப்புணர்வு உரை ஆற்றினர்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் ஜம்முகேஸ்வரர் ,திருச்சி சென்ட்ரல் ,திருச்சி சிட்டி, பட்டர்ஃபிளை , நெக்ஸ்ட் ஜென், திருச்சி ஐ டொனேஷன் போன்ற அமைப்புகளின் நிர்வாகிகள் ,பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.