அந்தரங்க புகைப்படங்கள் … உன்னை வாழ விடமாட்டேன்… மிரட்டும் இலண்டன் நாம் தமிழர் ஆதரவாளர் !
சொந்த முறையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பஞ்சாயத்தில் சிக்கிக் கொள்வது நாம் தமிழர் கட்சி சீமானுக்கு புதியது ஒன்றுமில்லை. விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் சாட்டை துரைமுருகன் கொளுத்திபோட்ட விசயம் இன்று வரையில் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எதிராகவே மாறியிருக்கிறது.
தலைமையின் மேல் அதிருப்தியுற்று விழுப்புரம், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருக்கிறார்கள். நாதகவின் மருத்துவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இளவஞ்சியும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். குறிப்பாக, நாதகவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை அவர் பிரதானமாக முன்வைத்து விலகியிருக்கிறார். நாதகவின் நட்சத்திர பேச்சாளர் என்ற அடையாளத்தோடு வலம் வந்த காளியம்மாளை, அண்ணன் சீமான் “பிசிறு” என்று அன்போடு விளித்ததைக்கூட, தம்பிகளும் தங்களைகளும் இதுவரை பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை.
இந்நிலையில், நீண்டகாலம் திருச்சியில் வசித்து வந்த தற்போது இலண்டனில் வசித்துவரும் இலங்கைத் தமிழரும் நாம் தமிழர் கட்சியின் தம்பிகளுள் ஒருவருமான இளங்கோ (எ) ஜானி என்பவருக்கு எதிராக, திருச்சி முசிறியைச் சேர்ந்த ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் தனது கணவருடன் சேர்ந்து அளித்திருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நாதகவில் தனக்கு செல்வாக்கு இருப்பதாகவும் உன்னால் என்ன செய்துவிட முடியும் என்றும் பகிரங்கமாகவே அந்தப் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதோடு, முதல் கணவர் விவாகரத்து செய்துவிட்ட நிலையில் மறுமணம் செய்துகொண்டு கணவரோடு வாழ்ந்து வரும் அந்தப் பெண்ணை மிகவும் இழிவாகவும் கீழ்த்தரமாகவும் பேசியும் வருவதோடு, அந்தப் பெண்ணை பற்றி மிகவும் கொச்சையாகவும் ஆபாசமாகவும் பேசிய ஆடியோக்களையும் அந்தப் பெண்ணின் கணவருக்கே அனுப்பியும் தொல்லை கொடுத்து வருகிறார் இளங்கோவன் (எ) ஜானி என்பதாக போலீசில் அளித்திருக்கிறார்கள்.
தற்போது, 42 வயதாகும் ராதா, பி.எஸ்.சி. முடித்திருக்கிறார். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்திருக்கிறது. பின்னர் தனியாக வாழ்ந்துவந்த ராதா திருச்சி குமாரவயலூரில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் வரவேற்பாளராக 2017 முதல் 2019 வரையில் பணியாற்றி வந்திருக்கிறார். அதே ரிசார்ட்டில் திருச்சி சீனிவாசநகரை சேர்ந்த குமார் என்பவர் ரிசார்ட்டின் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது, அவரது சகலையான இலங்கைத் தமிழர் இளங்கோ (எ) ஜானி அந்த ரிசார்ட்டுக்கு வந்து சென்றபோது, ராதாவுக்கு பழக்கம் ஆகியிருக்கிறார்.
பின்னர், அந்த வேலையை விட்டு சொந்த ஊரான முசிறியில் செட்டில் ஆகியிருக்கிறார் ராதா. அப்போது, ராதாவை தொடர்புகொண்ட இளங்கோ (எ) ஜானி, தான் இலண்டனில் சூப்பர் மார்க்கெட் தொடங்க இருப்பதாகவும் அதற்கான மளிகை பொருட்களை இங்கிருந்து தனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதாகவும் பேசியிருக்கிறார். அதன்படி, முசிறியில் குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறார். அதற்காக மாதம் 30,000 வழங்கியதாகவும் தெரிவிக்கிறார், ராதா.
இதற்கிடையில், 2021 இல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்திருந்த இளங்கோ (எ) ஜானி மீன் கொள்முதல் தொடர்பாக சில நிறுவனங்களிடம் பேச வேண்டும் என்பதாகக்கூறி தூத்துக்குடிக்கு வருமாறு அழைத்திருக்கிறார். மேலும், துபாயில் ராதாவின் பெயரில் கம்பெனி லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்று கூறி அவர் அழைத்ததின் பேரில் 27.08.2022 மற்றும் 28.08.2022 ஆகிய 2 நாட்கள் துபாய் சென்று வந்ததாகவும் தெரிவிக்கிறார், ராதா.
கணவரை பிரிந்து தனித்து வாழும் ராதாவுடன் சூப்பர் மார்க்கெட் தொடங்குகிறேன் என்று கூறியே, நெருங்கிப்பழகியிருக்கிறார் இளங்கோ (எ) ஜானி. பிசினஸ் விசயமாக அழைத்த நிலையில், அவரை நம்பி சென்ற ராதாவின் அந்தரங்க புகைப்படங்களை அவருக்கே தெரியாமல் எடுத்தும் வைத்திருக்கிறார், இளங்கோ (எ) ஜானி.
இதற்கிடையில், அவர் சூப்பர் மார்க்கெட்டை தொடங்குவதுபோல தெரியவில்லை என்பதால், அவரிடம் இனி தொழில் ரீதியாக தொடர்ந்து செயல்பட முடியாது என்பதை கூறியிருக்கிறார். மேலும், கடந்த ஜூலை, 2024 இல் ஈரோட்டை சேர்ந்த கார்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை மறுமணம் செய்துகொண்டு குடும்பத்தோடு வாழ்ந்தும் வந்திருக்கிறார்.
இதனால், ஆத்திரமடைந்த இளங்கோ (எ) ஜானி தொடர்ந்து ராதாவுக்கு தொலைபேசியில் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். மறுமணம் செய்து கொண்ட கணவரை விட்டுவிட்டு தன்னுடன் இலண்டனுக்கு வந்துவிட வேண்டுமென்றும் அவ்வாறு செய்யாவிட்டால், நிர்வாணப்படங்களையும், காணொளிகளையும், இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்பதாகவும் மிரட்டியிருக்கிறார், இளங்கோ (எ) ஜானி.
மிக முக்கியமாக, நாம் தமிழர் குழுவில் அந்த வீடியோக்களை வெளியிட்டு விடுவதாகவும், தனக்கு நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு இருப்பதாகவும், தன்னை மீறி எதுவும் உன்னால் செய்துவிட முடியாது என்றும் மிரட்டியிருக்கிறார், இளங்கோ (எ) ஜானி.
தொடர் மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளான, ராதா மறுமணம் செய்து கொண்ட 18 ஆம் நாளே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவரது கணவரும் அவரது குடும்பத்தினரும் மீட்டு அவர் உயிரை காப்பாற்றியிருக்கிறார்கள். அப்போதுதான் தனக்கு இளங்கோ (எ) ஜானி தொல்லை கொடுத்து வரும் விசயத்தை வீட்டில் சொல்லியிருக்கிறார். இதனையடுத்து, ராதாவின் கணவர் கார்த்திக்கும் இளங்கோ (எ) ஜானியை தொலைபேசியில் தொடர்புகொண்டு கண்டித்திருக்கிறார்.
இதன்பிறகும், தன் நிலையை மாற்றிக்கொள்ளாத இளங்கோ (எ) ஜானி மேலும் மூர்க்கத்தனத்துடன் அணுகத் தொடங்கியிருக்கிறார். ராதாவின் அந்தரங்கப் புகைப்படங்களை அவரது கணவர் கார்த்திக்கின் கைப்பேசி எண்ணிற்கே அனுப்பி வைத்ததோடு அல்லாமல், அவரது மாமனாருக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். குடும்பத்தோடு வாழவிட மாட்டேன் என்றும், எப்படியாவது ராதாவை இலண்டனுக்கு அனுப்பி வையுங்கள் என்பதாகவும் மிரட்டியிருக்கிறார். இதற்கிடையில், மன உளைச்சலில் அவரது மாமனாரும் இறந்துவிட, அப்போதும் விடாமல் கணவர் கார்த்திக்கும் தினசரி குறைந்தது 2 முதல் 5 வாட்சப் மெசேஜ்களை தொடர்ந்து அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார். திருமணத்துக்கு ஆன செலவுகளைக்கூட நானே கொடுத்துவிடுகிறேன், ராதாவை மட்டும் இலண்டனுக்கு அனுப்பி வைத்துவிடுங்கள் என்பதாக ராதாவின் கணவரிடமும் தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.
எவ்வளவு சொல்லியும் கேட்காத நிலையில், நாளுக்குநாள் இந்த தொல்லை அதிகரிக்கவே செய்திருக்கிறது. ராதாவின் உறவினர்களுக்கு அழைப்பது; ராதாவின் கணவரின் உறவினர்களுக்கு அழைப்பது என தொடர்ந்து பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார், இளங்கோ (எ) ஜானி. அவரது சகலையான குமாரிடமும் நேரில் சென்று முறையிட்டிருக்கின்றனர்.
அவர்களுக்கிடையில் கொடுக்கல் வாங்கல் இருப்பதாகவும் இந்த விவகாரத்தில் தலையிட்டால் பொருளாதார ரீதியாக சிக்கல் வந்துவிடும் என்று கூறியே குமார் இதில் தலையிட மறுத்துவிட்டாராம். இந்நிலையில், இதனை சமாளிக்க முடியாமல், ராதாவின் கணவர் கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினரும் முதலில் இளங்கோ (எ) ஜானியுடனான பிரச்சினையை முடித்துவிட்டு வா என்று கூறி ராதாவை அனுப்பி வைத்துவிட்டனர். மறுமணம் செய்தும் கணவரோடு சேர்ந்து வாழ முடியாத இக்கட்டில் தள்ளப்பட்டிருக்கிறார், ராதா.
இதுவரை, இளங்கோ (எ) ஜானி தனக்கும் தனது கணவருக்கும் அனுப்பிய வாட்சப் மெசேஜ் மற்றும் புகைப்பட ஆதாரங்களை ஒரு பெண் டிரைவில் போட்டு, திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறார் ராதா.
முழுக்க முழுக்க ராதாவின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சிக்கல் இது. இளங்கோ (எ) ஜானியுடன் தொழில்ரீதியாக நட்பை பேணி வந்தாரா, நெருக்கமாக பழகிவந்தாரா? என்பதை ஆராய்வதும் அதுகுறித்து கருத்து சொல்வதும் அவசியமற்றது. அருவெறுப்பானதும்கூட.
ஆனால், கணவரை பிரிந்துவாழும் கைம்பெண்ணாக இருந்த ராதாவிடம் நட்பாக பேசி, தொழில்ரீதியாக செயல்பட வருமாறு ஆசை காட்டி அவருடன் நெருக்கமாகவும் இருந்துவிட்டு அதற்கு ஆதராமாக சில புகைப்படம் உள்ளிட்ட சாட்சியங்களையும் கையில் வைத்துக்கொண்டு, மறுமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழ விரும்பும் ஒரு பெண்ணை இந்தளவுக்கு அறுவெறுப்பாகவும் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசியும் தொல்லையும் கொடுத்து வருவதுதான் இங்கே பிரச்சினையாக இருக்கிறது. அதுவும், தான் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் என்றும் கட்சியின் பெயரை பயன்படுத்தி அப்பெண்ணின் வாழ்க்கையை சீரழிக்க முயல்வதும்தான் இதில் ஆபத்தானதாகவும் அமைந்திருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, விளக்கம் அறிய சம்பந்தபட்ட இளங்கோ (எ) ஜானியை தொடர்புகொள்ள முயற்சித்தோம். அழைப்பை ஏற்காத நிலையில், வாட்சப்பில் அனுப்பிய குறுஞ்செய்திக்கும் பதிலில்லை. மேலும், அவருக்கு ஆதரவாக மிரட்டியதாக புகாரில் குறிப்பிட்டிருந்த எண்ணில் அழைத்தோம், “லாஜிஸ்டிக் பிசினஸ் செய்து வருகிறேன். எனக்கு ஜான் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதை கேட்டேன். அதற்கு அவர் அந்த பெண்ணிடம் கேட்க சொன்னார். அதற்காகவே அழைத்தேன். மற்றபடி, அவர்கள் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என்கிறார், அந்தநபர்.
வழக்கை விசாரித்துவரும் சைபர் கிரைம் போலீசார் தரப்பில் பேசியபோது, ”புகார் பதிவாகியிருக்கிறது. குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவர் வெளிநாட்டில் வேறு இருக்கிறார். வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.” என்பதாக சொல்கிறார்கள்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.